Tuesday, December 19, 2023

இலங்கையில் பலகலைக்கழக தரப்படுத்தலின் வரலாறு

இலங்கையில் பல்கலைக்கழக அனுமதிக்கான தரப்படுத்தல் சம்பந்தமான வரலாறு தொடர்பாக பலருக்கும் தெளிவின்மை காணப்படுகின்றது. இவை பற்றி நான் சில முகப்புத்தக பதிவுகளை முன்பு இட்டுள்ளேன். அவற்றை தொகுத்து மீண்டும் இங்கு எழுதலாம் என்று நினைக்கின்றேன்.

தற்போது நடைமுறையில் இருக்கும் ஒதுக்கீட்டு முறை ஓரளவுக்கு நியாயமானதே. இந்த முறையில்
1. 55% ஆன அனுமதி மாவட்டங்களின் சனத்தொகைக்கேற்ப ஒதுக்கப்படுகின்றது. இதை district quota என்பர்.
2. 40% ஆன அனுமதி திறமை அடிப்படையில் நிரப்பப்ப்டும். இதை merit quota என்பர்.
3. 5% ஆன அனுமதி பிற்படுத்தப்பட்ட மாவட்டங்களுக்கு வழங்கப்படும். இதை Educationally Disadvantaged District Quota என்பர்.
ஆனால் 1970 இல் இந்த பல்கலைக்கழக தரப்படுத்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டபோது இது இனவாரியாகவே (medium based) அமுல்படுத்தப்பட்டது. அதாவது எந்த மொழியில் பரீட்சை எழுதினார்களோ அவர்களின் வீதத்திற்கேற்ப பல்கலைக்கழக அனுமதி வழங்கும் முறை. தமிழர்களும் பெரும்பாலான சோனகர்களும் தமிழ் மொழியில் பரீட்சை எழுதியதால் அவர்கள் தமிழ் மொழிமூல பரீட்சார்த்திகள் என்று கணக்கிடப்பட்டது. இலங்கையின் இன வீதாசாரத்திற்கமைவாக இந்த பல்கலைக்கழக அனுமதி வழக்கப்பட்டது.
இந்த முறையின்போது சிங்கள மொழி மூலம் பரீட்சை எழுதிய மாணவர்கள் 229 புள்ளி எடுத்தால் மருத்துவம் கற்கலாம் என்னும்போது தமிழ் மூலம் பரீட்சை எழுதியவர்கள் 250 புள்ளிகள் எடுக்கவேண்டியிருந்தது. இதுவே பொறியியலுக்கு 227 உம் 250 ஆக நிர்ணயிக்கப்பட்டது. (கீழே அட்டவணையை பார்க்க).
அடுத்த வருடம், 1971 இல், இனவாரி வீதாசாரத்துக்கமைய கணக்கிடப்பட்ட எண்ணிக்கையை மாவட்ட சனத்தொகைக்கேற்ப பகிரப்பட்டது. இந்த கலப்பு முறை 1975/76 வரை நீடித்தது. அதன் பின்பு இனவாரி வீதாசார முறை முற்றாக நீக்கப்பட்டு மாவட்ட ஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த 55% + 40% +5% என்பது மீண்டும் செய்த திருத்தத்தில் உருவானது.
இதே காலத்தில் அரச வேலைக்கும் இந்த இனரீதியான வீதாசாரம் அறிமுகப்படுத்தப்பட்டது. உதாரணத்திற்கு, இலங்கை நிர்வாக சேவையில், எழுதுவினைஞர் சேவை உட்பட பல அரச சேவைகளுக்கு சேர்க்கப்படும் தமிழரின் தொகை 1965 இல் 20% ஆக இருந்து 1971 இல் 5% ஆக குறைக்கப்பட்டது. அந்த புள்ளிவிபரமும் கீழே இணைத்துள்ளேன்.


 இதற்கான பின்புலம் ஒன்று உள்ளது. 1970 ஆம் ஆண்டு பொறியியல் அனுமதி பெற்றவர்களில் 60 வீதமானோர் தமிழர்கள் என்று ஒரு வதந்தி காட்டுத்தீ போல நாடெங்கும் பரவியதாம். தமிழ்ப் பரீட்சகர்கள் தமிழ் மாணவர்களுக்கு புள்ளிகளை அள்ளிப்போட்டுள்ளனர் என்று காது மூக்கு வைத்து அவ்வதந்தி இறக்கை கட்டிப் பறந்ததாம். உடனே சிறிமா அரசாங்கத்தால் ஒரு விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டு வினாத்தாள்கள் மீள் திருத்தம் செய்யப்பட்டதாம். ஆனால் அப்படி ஒரு மோசடி நடந்ததற்கான எந்த ஆதாரத்தையும் அவர்களால் கண்டு பிடிக்கமுடியவில்லை. அந்தக்காலகட்டத்தில் நடந்து கொண்டிருந்த சேகுவேரா கிளர்ச்சி (ஜேவிபி கிளர்ச்சி-1), சிங்கள இளைஞர்கள் மட்டத்தில் நிலவிய அமைதியின்மை என்பவற்றைத் தணிக்க இந்த தரப்படுத்தல் யுக்தியை சிறிமா தலைமையிலான அரசாங்கம் எடுத்தது என்று வரலாற்றாய்வாளர்கள் சொல்கின்றனர்.
1976 இல் இருந்து நடைமுறையில் இருந்துவரும் மாவட்ட ஒதுக்கீடு (60%)& திறமை(40%) முறையானது தனியே தமிழ் மாவட்டங்களிலும், தனி சிங்கள மாவட்டங்களிலும் நியாயமானதாக இருக்கின்றது. ஆனால் பெரும்பான்மை சிங்களவர்கள் வாழும் மத்திய, ஊவா, சப்பிரகமூவா மாகாணங்களில் கலந்து வாழும் மலையகத்தமிழர்கள் இதனால் பயனடையவில்லை. வளங்கள் கூடிய பாடசாலைகளில் கற்கும் பெரும்பான்மை இன மாணவர்களுடன் வளங்கள் அறவே இல்லாத பாடசாலைகளில் கற்கும் மலையக மாணவர்கள் போட்டி போடும் நிலை காணப்படுகின்றது. இப்படியான பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கான ஒரு இட ஒதுக்கீட்டுத்திட்டத்தை உருவாக்க எந்த அரசியல் தலைவர்களும் இதுவரை குரல் கொடுக்கவில்லை எனபது துரதிஷ்டவசமானது.
-Kumaravelu Ganesan-

கலாநிதி நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்: விளையாட்டு, கல்வி, மனிதாபிமானத்தின் சிகரம்

கலாநிதி  நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்: விளையாட்டு, கல்வி, மனிதாபிமானத்தின் சிகரம் கலாநிதி குமாரவேலு கணேசன் (STEM-Kalvi) ஏப்ரல் 18, 2024 அன்று,...