Sunday, April 28, 2024

கலாநிதி நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்: விளையாட்டு, கல்வி, மனிதாபிமானத்தின் சிகரம்

கலாநிதி  நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்: விளையாட்டு, கல்வி, மனிதாபிமானத்தின் சிகரம்

கலாநிதி குமாரவேலு கணேசன் (STEM-Kalvi)

ஏப்ரல் 18, 2024 அன்று, எதிர் என்று அன்புடன் அழைக்கப்படும் கலாநிதி நாகலிங்கம்

எதிர்வீரசிங்கம், கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அவரது இல்லத்தில், அவரது குடும்பத்தினர்

சூழ அமைதியாக காலமானார். 89 வயதில், கலாநிதி எதிர்வீரசிங்கம், விளையாட்டு, கல்வி மற்றும்

அர்ப்பணிப்புள்ள மனிதாபிமானப் பணிகள் மூலம் வாழ்க்கையைத் தொட்டு, கண்டங்கள் கடந்தும்

ஒரு மரபை விட்டுச் சென்றுள்ளார்.

1934 ஆம் ஆண்டு யாழ் குடாநாட்டில் ஒரு சிறிய கிராமமான பெரியவிளான் என்ற இடத்தில் ஒரு

சாதாரண ஒரு அறை மண் குடிசை வீட்டில் பிறந்த எதிரின் வாழ்க்கைப்பயணம் எதிர்கால சந்ததிக்கு

ஒரு வழிகாட்டியாகும். இந்த எளிய தொடக்கத்திலிருந்து, அவர் உலக அரங்கில் முன்னேறி இரண்டு

ஒலிம்பிக் போட்டிகளில் உயரம் தாண்டுதல் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தியது

மாத்திரமன்றி 1958 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நாட்டின்

முதலாவது தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.

இதற்காக அவர் கடந்து வந்த பாதை மிக நீண்டது. என்ன தான் சிறந்த விளையாட்டு வீரனாக இருந்தாலும்

இலங்கையில் நிலவ் வந்த இனத்துவேசம் அவரி பலமுறை புறக்கணித்தது. அதை அவரது புதல்வர்

அர்ஜுனன் பின்வருமாறு எழுதுகின்றார். 

“ யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நடந்த போட்டி ஒன்றில் அவருக்குப் பரிசாகக் கிடைத்த தடகள

மெய்வல்லுனர் புத்தகமொன்றில் இருந்த படங்களைக் கவனமாக ஆராய்ந்து உயரம் பாய்வது எப்படி

என்று தமது சிறிய பின்வளவில் எதிர் தானாகவே கற்றுக்கொண்டார். யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு

திரையரங்கில் 1948 ஒலிம்பிக் போட்டிகள் குறித்த செய்திப்படம் ஒன்றைப் பார்த்த பின்னர் இப்படியான

ஓர் ஒலிம்பிக் போட்டிக்குத் தானும் போவேன் என்று ஓர் உறுதியை எதிர் தனக்குள் எடுத்துக்கொண்டார்.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, 17 வயதான எதிர் ஹெல்சிங்கி - பின்லாந்து 1952 ஒலிம்பிக் போட்டிகளில்

பங்கேற்றார். மெல்பேண் - அவுஸ்திரேலியா 1956 ஒலிம்பிக் போட்டிகளினூடாகத் தொடர்ந்த அவரது

தடகளப் பயணத்தில், ரோக்கியோ - ஜப்பான் 1958ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் எ

திர் கண்ட வெற்றி எந்த விளையாட்டிலும் இலங்கை பெற்ற முதல் தங்கப் பதக்கம் என்ற பெருமையையும்

பெற்றது. நான்கு ஆண்டுகளின் பின்னர், ஜகார்த்தா - இந்தோனேசியா 1962ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப்

போட்டிகளில் எதிர் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் உயரம் பாய்தல் போட்டிகளில் எதிர் கலந்து கொண்ட ஒவ்வொரு வயதுப் பிரிவிலும் இருந்த சாதனைகளை முறியடித்தார். பழைய பஸ் வண்டி அச்சுகள் மற்றும் பிற பஸ் பாகங்களைப் பயன்படுத்தி வீட்டில் உருவாக்கிய பொருட்களைத் தனது உடலை வலுப்படுத்தும் பயிற்சிகளுக்காக எதிர் பயன்படுத்தினார். கொழும்பில் 1951ஆம் ஆண்டு நடந்த தேசிய மட்டத்திலான  போட்டியில் வென்ற பின்னர் அவருக்கு முதற்தடவையாக ஒரு சிறப்பு தடகள பயிற்சியாளரான பி. இ. ராஜேந்திராவின் நெறிப்படுத்தலும்  கட்டமைப்பான உடற்பயிற்சி வழிமுறைகளும் கிடைத்தன. பின்னர்,

1952 ஒலிம்பிக் போட்டிகளுக்கான  அணியில் எதிர் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்லாந்து நாட்டிலுள்ள

ஹெல்சிங்கி நகரத்தை அடைய ஒரு மாதத்திற்கும் மேலாகக் கடற்கப்பலிற் பயணம் செய்து எதிர் அதிலே

கலந்து கொண்டார். 1954 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அவருக்குப் பதக்கம் ஏதும் கிடைக்காவிட்டாலும்,

தங்கம் - வெள்ளி - வெண்கலம் என்று பதக்கங்கள் வென்ற வீரர்கள் தாண்டிய 1.95 மீற்றர் உயரத்தை அவரும்

தாண்டியிருந்ததால் அவருக்கு விதிகளின்படி நான்காவது இடம் கிடைத்ததுடன், வெற்றியாளர்களுடன் புதிய

உயரம் பாய்தல் ஆசிய சாதனையை எதிர் மூன்று வீரர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

உயரம் பாய்தலில் இலங்கைக்கான சாதனையை மட்டுமன்றி ஆசிய மட்டத்திலும் சாதனையைக் கொண்டிருந்த

போதிலும், 1958ஆம் ஆண்டு ரோக்கியோ - ஜப்பான் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான அணியில்

எதிர் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. இருந்தாலும், டெய்லி நியூஸ் பத்திரிகையின் விளையாட்டுப்  பிரிவு

செய்தியாசிரியர் காள்ரன் செனிவிரத்தின தொடர்ந்து எழுதி வந்த கட்டுரைகளின் அழுத்தம் காரணமாகத்

தெரிவுக்குழு இறுதியில் தன்னைத் தளர்த்திக்கொண்டு கொண்டு எதிர் இந்த போட்டிகளிற் கலந்து கொள்ள

அனுமதித்தது. இருந்தாலும், பிந்தி அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார் என்ற காரணத்தைக் காட்டிய

தெரிவுக்குழு இந்தப் போட்டிகளிற் கலந்து கொள்வதற்காக லொஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருந்து ரோக்கியோ

சொல்வதற்கான செலவை அவரே பார்த்துக் கொள்ளவேண்டும் என்று அறிவித்தது. அப்போது அவருக்கு

ஆதரவாக புரவலர் டொனவன் அந்திரே கொடுத்த ஐயாயிரம் அமெரிக்க டொலர்களின் உதவியுடன் அந்தப்

பயணத்தை எதிர் மேற்கொண்டு, போட்டிக்குச் சில நாட்கள் மட்டுமே இருக்கையில் ரோக்கியோவில் அணியுடன் 

இணைந்து கொண்டார். இந்தப் போட்டிகளின் போது அவருக்கான சீருடைகளை இலங்கை வழங்கவில்லை

என்பதால், அவரது பல்கலைக்கழகத்தின் விளையாட்டுச் சீருடையில் இலங்கை அணியின் இலச்சினையை

குத்திக்கொண்டு எதிர் அந்தப் போட்டிகளிற் கலந்து கொண்டார். இவற்றையெல்லாம் தாண்டி, இலங்கையின்

அணியிலிருந்த மற்றைய போட்டியாளர்கள் அவரையே இலங்கை அணியின் தலைவராகத்  தீர்மானித்தார்கள்.”

எதிரின் கல்வித் தேடல்கள் அவரது தடகள சாதனைகளைப் போலவே சிறப்பாக இருந்தன. லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் (UCLA) உதவித்தொகையில் அவர் அமெரிக்காவிற்குச் சென்று பின்னர் கார்னெல் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். அவரது கல்வி மற்றும் தடகள திறமை அவரை விளையாட்டில் மட்டுமல்ல, கல்வி சீர்திருத்தம் மற்றும் சமூக மேம்பாட்டிலும் எல்லோரலும் மதிக்கப்படும் ஒரு மாமனிதனாக மாற்றியது.

இலங்கையில், குறிப்பாக அதன் மிகவும் கொந்தளிப்பான போர் நடந்துகொண்டிருந்த  90களில்  தனது

மக்கள் பணிகளை மீண்டும் ஆரம்பித்தார். வெளிநாட்டில் புகழ்பெற்ற கல்வித் தொழிலில் இருந்து ஓய்வு

பெற்ற பின்னர், அவர் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்குத் திரும்பினார். அங்கு,

போரினால் பாதிக்கப்பட்ட சமூகங்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் சமாதானத்தை வளர்ப்பதற்கும்

இலக்காகக் கொண்ட மனிதாபிமான மற்றும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு இரண்டு தசாப்தங்களுக்கும்

மேலாக அர்ப்பணித்தார்.

2009 இல் ஈழப்போர் முடிவடைந்ததன் பின்பாக உலகளாவிய தமிழ் அமைப்புக்களை ஒருங்கிணைக்கும்

நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட Global Tamil Forum என்னும் அமைப்பின் தலைவராக எதிர் தெரிவு

செய்யப்பட்டு ஒரு வருடம் கடைமையாற்றினார் என்பது பலருக்கு தெரியாத ஒரு உண்மை. 

எதிரின் முன்முயற்சிகள் பரந்ததாகவும் மாறுபட்டதாகவும் இருந்தன. உள்ளூர் மொழிகளில் விநுபொக

கல்வி (STEM-Education) காணொளிகளை உருவாக்குவதன் மூலம் கல்வியை மேம்படுத்துவதற்கான

முயற்சிகளை அவர் முன்னெடுத்தார். அக்காணொளிப் பாடங்களே கோவிட்-19 காலத்தில் பல வறிய

பிந்தங்கிய பிரதேச மாணவர்களுக்கு விரலிகளின் ஊடாகவும் இணையம் ஊடாகவும் கற்றலுக்கு  உதவி

செய்தது என்றால் மிகையாகாது.  

இலங்கை முழுவதிலும் உள்ள இளம் தடகள திறமைகளை கண்டறிந்து வளர்ப்பதை இலக்காகக் கொண்டு

பல பாசறைகளை நடத்தினார். 2004 சுனாமி மற்றும் இலங்கை உள்நாட்டுப் போரைத் தொடர்ந்து மீட்புக்

காலத்தில் அவரது பணி முக்கியமானதாக இருந்தது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மிகவும் தேவையான

நிவாரணம் வழங்கப்படுவதை ஒருங்கிணைத்ததில் அவரின் பங்கு முக்கியமானது.  

கலாநிதி எதிர்வீரசிங்கத்தின் செல்வாக்கு எண்ணிமக் கல்வி மற்றும் தடகள சாதனைகளுக்கு அப்பாற்பட்டது.

அவர் வடமாகாணத்தில் புரையோடிப்போயிருந்த சாதி அமைப்புக்கு எதிராக ஒரு உறுதியான செயற்பாட்டாளராக

இருந்து சமூகத்தின் ஒடுக்கட்டப்பட்ட பிரிவினரை உயர்த்த அயராது உழைத்தார். 

வடமாகாணத்தின் கல்வி நிலை கீழ் நோக்கி சென்றுகொண்டிருப்பதை உணர்ந்து 2014 ஆம் ஆண்டு அவர்

தலைமையிலான குழு தயாரித்த "வடக்கின் கல்வி முறைமை மீளாய்வு" என்னும் 250 பக்க அறிக்கை அப்போதைய

கல்வியமைச்சர் முன்னிலையில் வெளியிடப்பட்டது. 

01. மாணவர்களுக்கு வழங்கப்படும் உடல் ரீதியான தண்டனைகள் சகல பாடசாலைகளிலும் தாமதமின்றி

நிறுத்தப்பட வேண்டும். இதற்குப் பதிலாக ஆசிரியர்கள், அதிபர், மாணவர் தலைவர் உள்ளடக்கிய

மாணவர்களுக்கான வகுப்பறை நிர்வாகம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

02. தற்பொழுது முன்னிலைப்படுத்தப்படும் எழுத்து மூலமாக விடையளிக்கும் பரீட்சை முறைக்குப் பதிலாக

மாணவர்களின் எண்ணக்கருவை அடிப்படையாகக் கொண்ட செயன்முறையை ஆராய்ந்து அறியும் திறமையை

மையமாகக் கொண்ட செயற்றிட்டம் போன்றவற்றை ஆசிரியர்களினால் முன்னிலைப்படுத்தி ஊக்குவிப்பதை

மையமாகக் கொண்டு தேசிய பரீட்சைகள் மீளமைக்கப்பட வேண்டும்.

03. பொது நிர்வாகம், நியமனங்கள், இடமாற்றம், பதவியுயர்வு மற்றும் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்

சம்பந்தமாக முன்வைக்கபட்ட அனைத்து சிபார்சுகளையும் நடைமுறைப்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் மற்றும்

உத்தியோத்தர்கள் தமது துறைகளில் முதுமாணிப் பட்டங்களைப் பெறவோ அல்லது துறைசார் கல்வியை

விருத்தி செய்யவோ அவர்களுக்கு 1-4 வருடங்களுக்கு உயர்கல்வி பெறும் வாய்ப்பை உருவாக்கி கொடுக்கக்

கூடியவாறு 10 வருட காலத்திற்கான உத்தியோகத்தர்களின் விருத்தி சார்ந்த திட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும்.

04. பாடசாலை நேரத்தில் ஆசிரியர்களும் மாணவர்களும் தனியார் கல்வி நிலையங்களுக்கு செல்வதை தடுத்து

நிறுத்த வேண்டும்.

05. கல்வி சம்பந்தமான சகல தரவுகளையும் சேகரித்து வழங்கக் கூடியதாக கல்வி முகாமைத்துவ தகவல்

முறையொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும்.

06. தமிழ்மொழி மூலம் கற்றலுக்கான நிறுவனம் ஸ்தாபிக்கப்பட வேண்டும். இந்நிறுவனம் நாட்டின் சகல

தமிழ்மொழியில் கற்பிக்கும் பாடசாலைகளிலும் ஆசிரியர்களுக்கான பயிற்சியை வழங்கல். பாடவிதானம்

தயாரித்தல், அதற்கான நூல்கள், கற்பித்தல் முறை. தமிழ்மொழி மூலம் கற்றல் கற்பித்தலில் சம்பந்தமான

நூல்களை வழங்குவதற்குப் பொறுப்பாக இருக்கும்.

07. வலய மட்டத்தில் நிர்வகிக்கப்படும் பாடசாலைகளின் நிர்வாகம் மாற்றியமைக்கப்பட வேண்டும். வலய

மட்டத்தில் கல்விச் சபையொன்று அமைக்கப்பட வேண்டும். இச்சபை நியமிக்கப்பட்ட அங்கத்தவர்களையும்

தெரிவு செய்யப்பட்ட அங்கத்தவர்களையும் உள்ளடக்கியதாக இருக்கும். வலய மட்டத்தில் இயங்கும்

பாடசாலைகளை நிர்வகித்தல் அவை சம்மந்தமான தீர்மானம் எடுத்தல்

இச்சபையைச் சார்ந்ததாக இருக்கும். 

08. வலய மட்டத்தில் தற்பொழுது இயங்கும் முறைசாரா கல்விமுறை மாற்றப்பட்டு இதற்குப் பதிலாக

தொடர்கல்விப் பாடசாலைகள் அமைக்கப்பட வேண்டும். இப்பாடசாலையில் 16 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள்

கற்றுப் பயன்பெறும் வகையில் பாடவிதானம் தயாரிக்கப்பட்டு அமுல்படுத்தப்பட

வேண்டும்.

09.தற்போதைய நிதிமுகாமைத்துவ முறை உயர்நிலையில் வினைத்திறனுடன் செயற்படும் வகையில்

மாற்றியமைக்கப்பட வேண்டும்.

10. தற்பொழுது அமுலில் இருக்கும் தை மாதத்தில் தொடங்கி மார்கழியில் முடிவடையும் வரை கல்வி வருடத்தை

செப்டம்பரில் தொடங்கி ஓகஸ்டில் முடிவடையக் கூடியதாக மாற்றியமைத்து.


மேலே தரப்பட்டுள்ள அவ்வறிக்கையின் முக்கியமான 10 பரிந்துரைகளில் சிலவற்றை வட மாகாணசபை

ஆரம்பித்திருந்தாலும் எவற்றையும் தொடர்ந்து முன்னெடுக்கவில்லை என்பது துரதிஷ்டவசமானது. EMIS

தரவுத்தளம் மற்றும் வலயக் கல்வி வாரியம் என்பன அவற்றுள் குறிப்பிடத்தக்க இரண்டாகும். 


வட-மாகாணசபையில் கல்வியமைச்சின் ஆலோசகராக அவர் வகித்த பதவியானது 2017 இல் ஏற்பட்ட

மாகாண அமைச்சரவை மாற்றத்தின் பின்பாக வந்த புதிய மாகாண கல்வியமைசரினால் துரதிஷ்டவசமாக

நீடிக்கப்படவில்லை.  அது மட்டுமல்லாமல் பாடசாலைகளுக்கு விஜயம் செய்வதற்கு அவருக்கு

வழங்கப்பட்டிருந்த அனுமதியும் நீடிக்கப்படவில்லை. அதன் பின்பு அவர் அமெரிக்கா திரும்பிச்சென்றுவிட்டாலும்

பல விளையாட்டு, கல்விசார் தொண்டு நடவடிக்கைகளை இலங்கையில் தொடர்ந்தார். 


எதிரின் சமூகப் பங்களிப்புகளை கௌரவிக்கும் வகையில், கலாநிதி எதிர்வீரசிங்கத்திற்கு இலங்கை

அரசாங்கத்தினால் 'தேசபந்து' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது . அவரது குணாதிசயத்திற்கு உண்மையாக,

அவர் உள்நாட்டு மோதலின் போது தனது மக்கள் அனுபவித்த துன்பங்களைக் காரணம் காட்டி, அவ்விருதை

நிராகரித்திருந்தார். அவரது முடிவு சமூக நீதிக்கான அவரது ஆழ்ந்த பச்சாதாபத்தையும் அர்ப்பணிப்பையும்

அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

எதிரின் தனிப்பட்ட வாழ்க்கை அவரது தொழில் முயற்சிகளைப் போலவே சிறப்பாகவும் நிறைவாகவும் இருந்தது.

அவர் சியரா லியோன் நாட்டில் இருந்த காலத்தில், 1965ஆம் ஆண்டு ஜூலியற் ஆன் பவர் (Juliet Ann Power)

என்ற அமெரிக்காவில் இருந்து வந்து அங்கு தொண்டுப்பணி செய்துகொண்டிருந்த பெண்ணை  காதலித்து

திருமணம் செய்து கொண்டார்.


எதிர்- ஜூலியட் தம்பதியருக்கு மூன்று பிள்ளைகளும் அவர்களினூடாக எட்டு பேரக்குழந்தைகளும் உள்ளனர். 

அமெரிக்க குடியுரிமைக்கு தகுதியுடையவராக இருந்தும் கடைசிவரை இலங்கை மண்ணின் மைந்தனாக

இலங்கைக் குடியுரிமையுடன் வாழ்ந்து தனது வாழ்க்கையை எதிர் நிறைவு செய்து கொண்டார். 

கலாநிதி நாகலிங்கம் எதிர்வீரசிங்கத்தை நாம் நினைவுகூரும்போது, ​​அவர் படைத்த சாதனைகளைகளையும்

அவர் பெற்ற பாராட்டுகளையும் மட்டும் அல்லாது ஒடுக்கப்பட்டோர், ஏழைகள் மீதான அவரின்  கருணை, கல்வி

பற்றிய அவரின் தொலைநோக்குப் பார்வை, மனித மாண்பு மற்றும் தேசியத்தின்  மீதான அவரின் அசைக்க

முடியாத நம்பிக்கைகளையும் நாம்  நினைவுகூர்வது அவசியமாகின்றது.  அவரது வாழ்க்கை வரலாறு

நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகவும், விடாமுயற்சி மற்றும் மனிதநேயத்தின் சக்திக்கு சான்றாகவும்

உள்ளது.

மலர் வளையங்களுக்கு பதிலாக, அவரது குடும்பத்தினர் இலங்கைத் தொண்டு நிறுவனங்களுக்கு

நன்கொடைகளை வழங்குமாறு கோருகின்றனர்.  கலாநிதி எதிர்வீரசிங்கம் யாழ்ப்பாணத்தின் ஒரு சிறிய

கிராமத்திலிருந்து உலக அரங்கிற்கு அவர் மேற்கொண்ட பயணமும், உலகில் அவர் ஏற்படுத்திய ஆழமான

தாக்கமும், அவரை அறியும் அல்லது அவரது செல்வாக்கை உணரும் பாக்கியம் பெற்ற அனைவராலும்

நினைவுகூரப்பட்டு போற்றப்படும்.


கலாநிதி நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்: விளையாட்டு, கல்வி, மனிதாபிமானத்தின் சிகரம்

கலாநிதி  நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்: விளையாட்டு, கல்வி, மனிதாபிமானத்தின் சிகரம் கலாநிதி குமாரவேலு கணேசன் (STEM-Kalvi) ஏப்ரல் 18, 2024 அன்று,...