காலாவதியான பழைய பட்டப்படிப்புகளை மறுசீரமைத்து புதிய கற்கைநெறிகளைச் சேர்க்க வேண்டிய அவசியம்
ஒரு நாடு தனது பல்கலைக்கழகங்களை எவ்வாறு வடிவமைக்கிறது என்பதே அதன் எதிர்கால பொருளாதாரம், தொழில்நுட்ப முன்னேற்றம், வேலைவாய்ப்பு நிலை, சமூக வளர்ச்சி ஆகியவற்றை நிர்ணயிக்கும். பல்கலைக்கழகம் என்பது வெறும் பட்டம் வழங்கும் இடமல்ல. அது ஒரு நாட்டின் அறிவாற்றல், தொழில்நுட்ப திறன், மனிதவளத் தயாரிப்பு, சமூக முன்னேற்றம் ஆகியவற்றின் அடித்தளம்.
இலங்கையில் பல ஆண்டுகளாகப் பல்கலைக்கழகப் பட்டப்படிப்புகள் பெரும்பாலும் பழைய கட்டமைப்பிலேயே தொடர்கின்றன. சில பாடப்பிரிவுகள் இன்னும் அவசியமானவையாயினும் சில பட்டங்கள் வேலைவாய்ப்பு சந்தையுடன் தொடர்பில்லாதவை. சில பட்டங்கள் பெயரில் நவீனமாகத் தோன்றினாலும், உள்ளடக்கத்தில் பழமையானவையாக உள்ளன. சில பட்டங்கள் அதிகளவில் பட்டதாரிகளை உருவாக்குகின்றன; ஆனால் அந்தத் துறைகளில் வேலைவாய்ப்பு குறைவாக உள்ளது. இதன் விளைவாக பட்டம் பெற்ற இளைஞர்கள் வேலை இன்றி நிற்கின்றனர், அல்லது தமது படிப்புடன் தொடர்பில்லாத வேலைகளில் சேர வேண்டிய நிலை உருவாகிறது.
இலங்கை போன்ற பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் நாடுகளுக்கு இது மிகப் பெரிய பிரச்சினை. அரசாங்க வேலைகளை மட்டுமே இலக்காகக் கொண்டு பட்டதாரிகளை உருவாக்கும் முறை இனி நிலைத்திருக்க முடியாது. உலகம் Artificial intelligence, robotics, automation, biotechnology, semiconductors, clean energy, digital finance, smart agriculture, medical technology, and data-driven public administration போன்ற துறைகளுக்கு நகர்கிறது. இதற்கு ஏற்றவாறு இலங்கையின் பல்கலைக்கழகக் கல்வியும் மாற வேண்டும்.
ஏன் பல காலாவதியான பட்டங்கள்/கற்கைகள் நீக்கப்படவும் புதிய பட்டங்கள்/கற்கைகள் சேர்க்கப்படவும் வேண்டும்?
"பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே"!
இன்றைய உலகில் செயற்கை நுண்ணறிவு ஒரு தனித் தொழில்நுட்பம் மட்டும் அல்ல. அது மருத்துவம், விவசாயம், நிதி, வங்கி, கல்வி, சட்டம், ஊடகம், மொழிபெயர்ப்பு, உற்பத்தி, போக்குவரத்து, சுற்றுலா, பாதுகாப்பு, அரச நிர்வாகம், ஆராய்ச்சி என அனைத்து துறைகளையும் மாற்றிக் கொண்டிருக்கிறது.
முன்னர் ஒரு பட்டதாரிக்கு ஒரு அடிப்படைப் பட்டம் இருந்தால் போதுமானதாக இருந்திருக்கலாம். ஆனால் இப்போது அது போதாது. இன்றைய வேலைவாய்ப்புச் சந்தை கேட்பது வேறு. பிரச்சினையைப் புரிந்துகொள்ளும் திறன், எண்ணிம அறிவு (digital literacy), தரவு கையாள்தல் (data handling), செயற்கை நுண்ணறிவு செயலிகளை (AI tools) பயன்படுத்தும் திறன், தொழில்நுட்பத்தை துறைக்கு ஏற்ப இணைக்கும் திறன், புதிய சூழலுக்கு தன்னை மாற்றிக் கொள்ளும் திறன் ஆகியவை அவசியமாகின்றன.
இலங்கையில் பல மாணவர்கள் பட்டம் பெற்ற பின் வேலை தேடும்போது சந்திக்கும் கேள்வி இதுதான்: “இந்தப் பட்டம் வேலைவாய்ப்பு சந்தையில் என்ன மதிப்பு தருகிறது?” இந்தக் கேள்விக்குப் பல கற்கை நெறிகள் தெளிவான பதில் தர முடியவில்லை. அதனால் பல்கலைக்கழகங்கள் தங்கள் பாடப்பிரிவுகளை கடுமையாக மதிப்பாய்வு செய்ய வேண்டும். (சில செய்கின்றன அல்லது முயற்சிக்கின்றன)
1️⃣வேலைவாய்ப்பு இல்லாத கற்கை நெறிகள் தொடர்ந்து இயங்கக்கூடாது
ஒரு கற்கை நெறி வருடந்தோறும் நூற்றுக்கணக்கான பட்டதாரிகளை உருவாக்குகிறது. ஆனால் அந்தத் துறையில் வேலைவாய்ப்பு குறைவு. அப்படியானால் அந்த கற்கை நெறியை மாற்றாமல் தொடர்ந்து நடத்துவது மாணவர்களுக்கும் நாட்டுக்கும் அநீதி. இலங்கையில் இலவசக் கல்வி என்பது மிகப் பெரிய சமூக முதலீடு. அந்த முதலீடு வேலைவாய்ப்பு, தொழில்முனைவு, ஆராய்ச்சி, சமூக சேவை, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் திரும்பிக் கிடைக்க வேண்டும்.
2️⃣பெயர் நவீனமாக இருந்தாலும் பாடத்திட்டம் பழையதாக இருக்கக்கூடாது
சில பட்டப்படிப்புகள் பெயரில் நவீனமாகத் தோன்றினாலும் பாடத்திட்டம் பழையதாக இருக்கும். உதாரணமாக “Information” என்ற சொல் இருக்கும் பட்டப்படிப்பு ஒன்று உண்மையில் Data Science, Artificial Intelligence, Software Engineering, Cybersecurity, Cloud Computing, Database Systems போன்ற திறன்களை கற்பிக்காமல், பழைய நிர்வாகப் பாடங்களையே கற்பித்தால் அது மாணவர்களுக்கு உதவாது.
3️⃣ ஒரே மாதிரியான கற்கை நெறிகள் பல பெயர்களில் இயங்கக்கூடாது
சில பல்கலைக்கழகங்களில் Management, Public Management, Business Administration, Social Administration, Development Studies போன்ற பாடப்பிரிவுகள் ஒரேமாதிரியாக இருக்கலாம். அவை தனித்த அடையாளம், தனித்த திறன், தனித்த வேலைவாய்ப்பு பாதை இல்லாமல் இருந்தால் அவற்றை ஒன்றிணைக்க வேண்டும். பல பலவீனமான பட்டப்படிப்புகளுக்குப் பதிலாக சில வலுவான, நவீனமான, வேலைவாய்ப்பு மையப்படுத்தப்பட்ட பட்டப்படிப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.
4️⃣ செயற்கை நுண்ணறிவு மூலம் மாற்றமடையும் வேலைகளுக்காக பழைய முறையில் மாணவர்களை உருவாக்கக்கக்கூடாது
வழக்கமான மொழிபெயர்ப்பு (Routine translation), அடிப்படை கணக்கியல் (basic accounting), எளிய எழுதுவினைஞர் பணி (simple clerical work), மாதிரி-அடிப்படையிலான வடிவமைப்பு (template-based design), கீழ்நிலை அறிக்கையிடல் (low-level reporting) , எளிய தரவு உள்ளீடு (simple data entry) , அடிப்படை ஊடகத் தொகுப்பு (basic media editing) போன்ற பல வேலைகள் ஏற்கனவே நுண்ணறிவு தானியக்கம் (AI automation) மூலம் மாறிக்கொண்டிருக்கின்றன. இத்தகைய பணிகளுக்காக மட்டும் மாணவர்களைப் பயிற்றுவிப்பது எதிர்காலத்திற்குப் பொருத்தமற்றது.
கணினிக்காலத்திற்கு முன்பான 80 களில் (90 களில் கூட) தட்டெழுத்து, சுருக்கெழுத்து கற்றது பலருக்கும் ஞாபகம் இருக்கக்கூடும்.
இதற்கு பதிலாக மாணவர்கள் உயர் திறன்களை (higher-order skills) கற்க வேண்டும். விமர்சன சிந்தனை (Critical thinking) , அறநெறி பகுத்தறிவு (ethical reasoning) , துறைசார் அறிவு (domain knowledge), எண்ணிமக் கருவிகள்/செயலிகள் (digital tools), ஆராய்ச்சித் திறன்கள் (research skills), புத்தாக்கம் (innovation), தொழில்முனைவு (entrepreneurship) ஆகியவை அவசியம்.
5️⃣ பழைய பாடங்களை அழிப்பது நோக்கம் அல்ல; அவற்றை நவீனப்படுத்துவதே நோக்கம்
இங்கு முக்கியமான கருத்து ஒன்று தெளிவாக இருக்க வேண்டும். பழைய பாடங்களை எல்லாம் ஒழிக்க வேண்டும் என்று சொல்ல முடியாது. வரலாறு (History), தத்துவம் (Philosophy), சட்டம் (Law), மொழி (Languages), இலக்கியம் (Literature), சமூகவியல் (Sociology), அரசறிவியல் (Political Science), நுண்கலை (Fine Arts) போன்ற துறைகள் ஒரு சமூகத்திற்கு அவசியமானவை. ஆனால் அவை பழைய முறையில் மட்டும் கற்பிக்கப்படக் கூடாது.
உதாரணமாக, மொழிகளைப் படிக்கும் மாணவர் AI மொழிபெயர்ப்பு செயலிகள் (AI translation tools), சர்வதேச தொடர்பாடல் (international communication), வெளியுறவு/ இராஜதந்திர உறவு (diplomacy), வர்த்தக உறவு (trade relations), சுற்றுலா தொடர்பாடல் (tourism communication), ஊடக பகுப்பாய்வு (media analysis), பிராந்தியக் ஆய்வுகள் (regional studies) ஆகியவற்றையும் கற்க வேண்டும். நுண்கலை படிக்கும் மாணவர் எண்ணிம ஊடகம் (Digital Media), Game Art, Virtual Space Design, Animation Technology, Creative Industries, Copyright Law ஆகியவற்றையும் கற்க வேண்டும். விவசாயம் படிக்கும் மாணவர் Smart Agriculture, Climate Resilient Farming, AgriTech, Soil Data Analysis, Drone Applications ஆகியவற்றையும் கற்க வேண்டும்.
அதாவது, அறிவை நீக்குவது அல்ல; அறிவை எதிர்காலத்திற்குப் பொருத்தமாக மாற்றுவது தான் நோக்கம்.
இலங்கைப் பல்கலைக்கழகங்கள் உலகின் தற்போதைய தேவைகளுக்கு தயாராக இருக்கின்றனவா?
ஒரு பல்கலைக்கழகத்தின் தரத்தை அதன் பழமை, புகழ், கட்டிடங்கள் அல்லது மாணவர் எண்ணிக்கை மட்டும் தீர்மானிப்பதில்லை. இன்று மிக முக்கியமான கேள்வி இதுதான்:
அந்தப் பல்கலைக்கழகத்தின் பீடங்கள் (Faculties) மற்றும் துறைகள் (Departments) இன்றைய உலகின் தேவைகளுக்கு ஏற்ப புதுப்பிக்கப்பட்டுள்ளனவா?
உலகம் இன்று வேகமாக மாறிவருகிறது. செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), தரவு அறிவியல் (Data Science), மென்பொருள் பொறியியல் (Software Engineering), உயிர்மருத்துவ தொழில்நுட்பம் (Biomedical Technology), மருத்துவ தொழில்நுட்பம் (Medical Technology), வணிக பகுப்பாய்வு (Business Analytics), சுற்றுச்சூழல் நிலைத்தன்மை (Environmental Sustainability), ரோபோடிக்ஸ் (Robotics), தானியக்க முறைமைகள் (Automation), புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (Renewable Energy) போன்ற துறைகள் இன்றைய உலகின் மையத் தேவைகளாகிவிட்டன.
இந்தப் பின்னணியில் இலங்கையின் முக்கிய பல்கலைக்கழகங்களின் பீட/துறை அமைப்புகளைப் பார்த்தால், சில முக்கியமான வேறுபாடுகள் தெரிகின்றன.
🔸மிகவும் புதுப்பிக்கப்பட்ட அமைப்பு: மொரட்டுவை பல்கலைக்கழகம் (University of Moratuwa)
தற்போதைய உலகத் தேவைகளுக்கு மிகவும் பொருத்தமான அமைப்பைக் கொண்ட பல்கலைக்கழகமாக மொரட்டுவை பல்கலைக்கழகம் தெரிகிறது. அங்கு பொறியியல் (Engineering), தகவல் தொழில்நுட்பம் (Information Technology), கட்டிடக்கலை (Architecture), வணிகம் (Business), மருத்துவம் (Medicine), மருத்துவ தொழில்நுட்பம் (Medical Technology) போன்ற துறைகள் ஒரே பல்கலைக்கழக சூழலில் இணைந்திருக்கின்றன.
குறிப்பாக செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), தகவல் தொழில்நுட்பம் (Information Technology), வணிக பகுப்பாய்வு (Business Analytics), வணிக செயல்முறை மேலாண்மை (Business Process Management), மருத்துவ தொழில்நுட்பம் (Medical Technology) போன்ற துறைகள் மொரட்டுவையின் அமைப்பை நவீன உலகத் தேவைகளுடன் நெருக்கமாக இணைக்கின்றன.
இது வெறும் பழைய பொறியியல் பல்கலைக்கழகமாக இல்லாமல், தொழில், தொழில்நுட்பம், மருத்துவம், வணிகம் ஆகியவை சந்திக்கும் இடமாக மாறியுள்ளது.
🔴மற்ற நவீன அமைப்பைக் கொண்ட பல்கலைக்கழகங்கள்
🔸ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் (University of Sri Jayewardenepura) குறிப்பிடத்தக்க முன்னேற்றம் செய்துள்ளது. கணினியியல் பீடம் (Faculty of Computing), தொழில்நுட்ப பீடம் (Faculty of Technology), பொறியியல் பீடம் (Faculty of Engineering) ஆகியவை அதன் அமைப்பை நவீனப்படுத்துகின்றன. கணினி அறிவியல் (Computer Science), மென்பொருள் பொறியியல் (Software Engineering), தகவல் முறைமைகள் பொறியியல் (Information Systems Engineering), அறிவு பொறியியல் (Knowledge Engineering), அறிவியல் கணினியியல் (Scientific Computing) போன்ற துறைகள் இன்றைய தேவைகளுக்கு மிகவும் பொருத்தமானவை.
🔸சப்பிரகமுவ பல்கலைக்கழகம் (Sabaragamuwa University) கூட ஆச்சரியமான அளவில் நவீனப்படுத்தப்பட்ட அமைப்பைக் கொண்டுள்ளது. கணினியியல் (Computing), தொழில்நுட்பம் (Technology), நிலஅளவியல்/புவியியல் தகவல் அறிவியல் (Geomatics), மருத்துவம் (Medicine), தரவு அறிவியல் (Data Science), மென்பொருள் பொறியியல் (Software Engineering) போன்ற துறைகள் அங்கு இடம்பெறுகின்றன.
🔸களனி பல்கலைக்கழகமும் (University of Kelaniya) கணினி மற்றும் தொழில்நுட்ப பீடம் (Faculty of Computing and Technology) மூலம் நவீன துறைகளுக்குள் நுழைந்துள்ளது. பயன்பாட்டு கணினியியல் (Applied Computing), மென்பொருள் பொறியியல் (Software Engineering), கணினி முறைமைகள் பொறியியல் (Computer Systems Engineering) போன்ற துறைகள் அங்கு காணப்படுகின்றன.
🔸 கொழும்பு பல்கலைக்கழகம் (University of Colombo) இலங்கையின் முக்கியமான பல்கலைக்கழகங்களில் ஒன்று. குறிப்பாக கொழும்பு பல்கலைக்கழக கணினி பாடசாலை (University of Colombo School of Computing) அதன் பலமாக உள்ளது. ஆனால், முழு பல்கலைக்கழக அமைப்பில் தொழில்நுட்பம் (Technology), பொறியியல் (Engineering), செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), தரவு அறிவியல் (Data Science) போன்ற துறைகள் ஒருங்கிணைக்கப்பட்ட அளவில் மொரட்டுவை அளவுக்கு தெளிவாக இல்லை.
🔴பீட/துறை அமைப்பின் நவீனத்தன்மை அடிப்படையிலான தரவரிசை
இது கல்வித் தரவரிசை அல்ல. இது பல்கலைக்கழகங்களின் பீடங்கள் (Faculties), துறைகள் (Departments), பாடநெறிகள் (Degree Programs), மற்றும் அவை இன்றைய உலகத் தேவைகளுடன் எவ்வளவு பொருந்துகின்றன என்பதைக் காட்டும் ஒரு அமைப்பு சார்ந்த மதிப்பீடு.
1. மொரட்டுவை பல்கலைக்கழகம் (University of Moratuwa) — மிகவும் புதுப்பிக்கப்பட்ட அமைப்பு
2. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் (University of Sri Jayewardenepura)
3. சபரகமுவ பல்கலைக்கழகம் (Sabaragamuwa University)
4. களனி பல்கலைக்கழகம் (University of Kelaniya)
5. கொழும்பு பல்கலைக்கழகம் (University of Colombo)
6. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் (University of Ruhuna / University of Jaffna)/ ருஹுணு பல்கலைக்கழகம்
7. ரஜரட்ட பல்கலைக்கழகம் / ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம் / வயம்ப பல்கலைக்கழகம் (Rajarata University / Uva Wellassa University / Wayamba University)
8. பேராதனை பல்கலைக்கழகம் (University of Peradeniya) — மிகவும் பாரம்பரியமான அமைப்பு
இந்த தரவரிசை பல்கலைக்கழகங்களின் மொத்த கல்வித் தரத்தைக் குறிக்கவில்லை. இது அவற்றின் அமைப்பு செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), தரவு அறிவியல் (Data Science), தானியக்கம் (Automation), சுகாதார தொழில்நுட்பம் (Health Technology), பொறியியல் பயன்பாடுகள் (Applied Engineering), வணிக பகுப்பாய்வு (Business Analytics), தொழில்முனைவு (Entrepreneurship), மற்றும் தொழில் இணைப்பு (Industry Linkage) போன்ற இன்றைய தேவைகளுடன் எவ்வளவு பொருந்துகிறது என்பதையே பார்க்கிறது.
மிகவும் பாரம்பரியமான அமைப்பு: பேராதனை பல்கலைக்கழகம் (University of Peradeniya)
பேராதனை பல்கலைக்கழகம் இலங்கையின் மிகப் புகழ்பெற்ற, வரலாற்று சிறப்புமிக்க பல்கலைக்கழகங்களில் ஒன்று. அதன் ஆசிரியர்கள், ஆராய்ச்சிகள், பழைய மாணவர்கள், கல்வி மரபு ஆகியவை மிக உயர்ந்தவை. ஆனால், பீட மற்றும் துறை அமைப்பைப் பார்த்தால், அது இன்னும் பெரும்பாலும் பாரம்பரிய அமைப்பிலேயே உள்ளது.
அங்கு விவசாயம் (Agriculture), கலை (Arts), மருத்துவம் (Medicine), பொறியியல் (Engineering), அறிவியல் (Science), பல் மருத்துவம் (Dental Science), மிருக மருத்துவம் (Veterinary Medicine), மேலாண்மை (Management), துணை சுகாதார அறிவியல் (Allied Health Sciences) போன்ற பாரம்பரிய பீடங்கள் வலுவாக உள்ளன.
ஆனால் தனியான கணினியியல் பீடம் (Faculty of Computing), தகவல் தொழில்நுட்ப பீடம் (Faculty of Information Technology), செயற்கை நுண்ணறிவு துறை (Artificial Intelligence Department), தரவு அறிவியல் துறை (Data Science Department), தொழில்நுட்ப பீடம் (Faculty of Technology), மருத்துவ தொழில்நுட்பம் (Medical Technology) போன்ற தெளிவான நவீன அமைப்புகள் இன்னும் போதுமான அளவில் தெரியவில்லை.
இதனால் பேராதனை பல்கலைக்கழகம் கல்வித் தரத்தில் குறைவானது என்று அர்த்தமல்ல. ஆனால் அதன் அமைப்பு உலகம் இன்று நகரும் திசையை ஒப்பிடும்போது மெதுவாகப் புதுப்பிக்கப்படுகிறது என்று சொல்லலாம்.
நான் பேராதனை பல்கலைக்கழகத்தில் எனது Masers in Materials Science பட்டத்தை 30 வருடங்களுக்கும் முன்பாக பெற்றேன். இன்றும் அதைப்போன்றதொரு அழகான புவியியல் தோற்றமுடைய ஒரு பல்கலைக்கழகத்தை நான் வேறெங்கும் காணவில்லை.
🔴இது ஏன் முக்கியம்?
இன்றைய மாணவர்கள் வெறும் பட்டம் பெறுவதற்காக மட்டும் பல்கலைக்கழகத்துக்கு போவதில்லை. அவர்கள் எதிர்கால வேலைவாய்ப்பு, தொழில்முனைவு (Entrepreneurship), புதுமை (Innovation), ஆராய்ச்சி (Research), தொழில் இணைப்பு (Industry Linkage), உலகளாவிய போட்டித்திறன் (Global Competitiveness) ஆகியவற்றுக்காக படிக்கிறார்கள்.
எனவே பல்கலைக்கழகங்கள் இன்னும் பழைய பீட அமைப்புகளிலேயே நின்றுவிட்டால், மாணவர்கள் உலக சந்தையில் பின்தங்கிவிடுவார்கள்.
🔴 இலங்கைக்கு தேவையான மாற்றங்கள்
இலங்கைப் பல்கலைக்கழகங்கள் பின்வரும் துறைகளை உடனடியாக வலுப்படுத்த வேண்டும்:
செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), தரவு அறிவியல் (Data Science), மென்பொருள் பொறியியல் (Software Engineering), சைபர் பாதுகாப்பு (Cybersecurity), உயிர்மருத்துவ பொறியியல் (Biomedical Engineering), மருத்துவ தொழில்நுட்பம் (Medical Technology), புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (Renewable Energy), காலநிலை அறிவியல் (Climate Science), உணவு தொழில்நுட்பம் (Food Technology), ரோபோடிக்ஸ் (Robotics), தானியக்க முறைமைகள் (Automation), வணிக பகுப்பாய்வு (Business Analytics), தொழில்முனைவு (Entrepreneurship) ஆகியவை இன்றைய உலகின் அடிப்படைத் தேவைகளாகிவிட்டன.
🔴முடிவாக
இலங்கையில் மிகப் பழமையான பல்கலைக்கழகம் என்பதற்காக மட்டும் அது மிக நவீனமானது ஆகிவிடாது. அதேபோல் புதிய பல்கலைக்கழகம் என்பதற்காக மட்டும் அது தரமற்றது என்றும் சொல்ல முடியாது.
பீடங்கள் (Faculties), துறைகள் (Departments), பாடநெறிகள் (Degree Programs), தொழில் இணைப்புகள் (Industry Linkages), ஆராய்ச்சி மையங்கள் (Research Centres) ஆகியவற்றின் அமைப்பை வைத்து பார்த்தால், மொரட்டுவை பல்கலைக்கழகம் தற்போதைய உலகத் தேவைகளுக்கு மிகவும் நெருக்கமாக உள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர, சபரகமுவ, களனி, கொழும்பு போன்ற பல்கலைக்கழகங்களும் பல முக்கியமான மாற்றங்களைச் செய்துள்ளன.
ஆனால் பேராதனை போன்ற பாரம்பரிய பல்கலைக்கழகங்கள் தங்கள் புகழைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டுமானால், புதிய உலகத் தேவைகளுக்கு ஏற்ப பீட மற்றும் துறை அமைப்பை வேகமாகப் புதுப்பிக்க வேண்டும்.
இது பல்கலைக்கழகங்களுக்கான விமர்சனம் அல்ல. இது மாணவர்களின் எதிர்காலத்துக்கான அவசரமான கல்வி மறுசீரமைப்பு வேண்டுகோள்.
-Dr Kumar Ganesh
No comments:
Post a Comment