Saturday, January 11, 2025

காட்டுத்தீ


காட்டுத்தீ- அழிக்க வரும் தீயை பழங்குடி மக்கள் அணைத்துக்கொள்ள செய்தது என்ன?

“நீங்கள் இயற்கைத்தாயை பராமரித்தால், இயற்கைத்  தாய் உங்களைப் பாதுகாப்பாள்” – ஆஸ்திரேலிய பழங்குடிமக்கள்


அமெரிக்காவின் கலிபோர்ணியா மாநிலத்தில் உள்ள ஹொலிவூட் மலை தொடர்ந்து எரிந்துகொண்டிருக்கின்றது. அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய தீயாக இது கருதப்படுகின்றது. பழங்குடியினர் இந்த காட்டுதீயை எப்படி முறையாக கட்டுப்படுத்தினர் என்று நான் 5 வருடங்களுக்கு முன்பாக எழுதிய கட்டுரை.

ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ  பெருமளவான நிலப்பகுதிகளை பாதிப்பது மாத்திரமல்லாமல்  பெருமளவு  சொத்துச்சேதம் மற்றும் மனித உயிர் இழப்பையும் ஏற்படுத்துகிறது.
2019-20 ஆஸ்திரேலிய காட்டுத்தீ பருவகாலத்தில் 63,000 சதுர கிமீ நிலம் இதுவரை எரிந்துள்ளது. 1300 வீடுகள் உட்பட 2,500 க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் அழிக்கப்பட்டு 25 பேருக்கு மேல் கொல்லப்பட்டுமுள்ளனர்.  இதுவரை தவளைகள் மற்றும் பூச்சிகள் தவிர்த்து 500,000,000 (50 கோடி) வனவிலங்குகள் இறந்துவிட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 
இந்த காட்டுத்தீயால் அழிக்கப்பட்ட  நிலப்பரப்பு இலங்கையின் மொத்த நிலப்பரப்பை விட அதிகமானது. இதேபோல் 2009  பெப்பிரவரியில் விக்டோரியா மாநிலத்தில் நடந்த இருண்ட சனிக்கிழமை (Black Saturday)  காட்டுத்தீயில் 173 பேர் கருகி மாண்டது மிகப்பெரிய சோக நிகழ்வாகும். 
நூற்றுக்கணக்கான அரிய உயிரினங்கள் ஆஸ்திரேலியா கண்டத்தில் மாத்திரமே காணப்படுகின்றன. அவற்றில் பல அழிந்து விட்டன மற்றும் பல அருகிவரும் உயிரினங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளன. கங்காரு, வொலபி, கோவாலா, போசம், ஒப்போசம், வொம்பட், தஸ்மேனியன்  டெவில்  என்பன வயிற்றில் பை உள்ள மார்சூப்பியல் என்று அழைக்கப்படும்  பாலூட்டி விலங்குப்பிரிவை சேர்ந்த விலங்குள் அவுஸ்திரேலியா கண்டத்தில் மாத்திரமே வாழ்கின்றன. இவை போன்று டன்னார்ட் என்றழைக்கப்படும் ஒரு எலியை ஒத்த மார்சூப்பியல் விலங்கினம் கங்காரு தீவில் மாத்திரம் உயிர்வாழ்ந்து  வந்தது. அண்மையில் கங்காரு தீவில் ஏற்பட்ட பாரிய காட்டுத்தீயில் இந்த டன்னார்ட் உட்பட பெருமளவான உயிரினங்கள் உயிரிழந்து இருக்கலாம் என்று கருதப்படுகின்றது. இவை போன்று இன்னும் பல அருகிவரும் உயிரினங்கள் உயிரிழந்திருக்கலாம் இரு அஞ்சப்படுகின்றது.
காட்டுத்தீயினால் ஆஸ்திரேலிய பொருளாதாரத்துக்கு ஏற்பட்டுள்ள இழப்பு இதுவரைக்கும் இருநூறு கோடி டொலர்கள் என்று கணக்கிடப்பட்டாலும்  இந்த பாதிப்பு இன்னும் அதிகரிக்கலாம் என்றும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
காட்டுத்தீயின்  பொதுவான காரணங்களாக மின்னல், மின் ஒழுக்கு, விவசாயத்திற்காக  துப்புரவு செய்தல், அரைக்கும் மற்றும் வெல்டிங் நடவடிக்கைகளில் தற்செயலான பற்றவைப்பு, கேம்ப்ஃபயர், சிகரெட் மற்றும் எறியப்படும் தீக்குச்சிகள், இயந்திரங்களிலிருந்து தீப்பொறிகள் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட தீ வைப்புக்கள் கட்டுமீறி செல்வது ஆகியவற்றை சொல்லலாம். இவற்றுடன் வேண்டுமென்றே தீ வைக்கும் விஷமச்செயலும் நடைபெறுவது மறுக்க முடியாது.
இலங்கையிலும் இந்தியாவிலும் சஞ்சிவி மரம் என்றும் விக்ஸ் மரமென்றும் அழைக்கப்படும் ஆஸ்திரேலியாவை பூர்வீகமாக கொண்ட யூக்லிப்ரஸ் மரங்களே அவுஸ்திரேலிய காடுகளில்  நிறைந்துள்ளன. இவற்றை இங்கு Gum tree என்று அழைப்பர். இவை இயற்கையிலேயே நன்றாக எரியக்கூடிய எண்ணெய்யை கொண்டிருப்பதால், பச்சை மரம் கூட நன்றாக எரியும். இவற்றின் விதைகள் தீயால் பெருமளவில்  பாதிக்கப்படுவதில்லை என்பது இயற்கையின் கொடைகளில் ஒன்று. ஆஸ்திரேலியாவின் சுதேச தாவரங்கள் சில இனப்பெருக்கம் செய்வதற்கான வழிமுறையாக காட்டுத்தீயை நம்பியுள்ளன என்பது ஒரு கொசுறு செய்தி.
இவை போதாதென்று அவுஸ்திரேலிய சுதேச பறவைகள் சில காட்டுத்தீயை பரப்புவது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கக்கூடும். கழுகு இனத்தை சேர்ந்த Whistling Kites, Black Kites மற்றும் Brown Falcons ஆகிய பறவைகளே இதை செய்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எரியும் கொள்ளியை பாதுகாப்பாக தூக்கிச்சென்று வெகு தூரத்தில் உள்ள பற்றைக்காடுகளில்  போட்டு அத்தீயின்  காரணமாக வெளியில் ஓடி வரும் எலி போன்ற பிராணிகளை இவை வேட்டையாடுவதாக சொல்லப்படுகின்றது. 
மேலும், ஒரு இடத்தில் ஏற்படும் தீ, பைரோகுமுலோனிம்பஸ் (pyrocumulonimbus) என்ற ஒரு வகை மேகத்தை உருவாக்கி அதன்மூலம் அயற்பிரதேசங்களுக்கும் மின்னல் மூலம் தீயை பரப்புகின்றது. வழக்கமான இடியுடன் கூடிய மழையைப் போலவே, காற்று மற்றும் வெப்ப நிரலால் ஏற்படும் மேற்காவுகை காற்றின் மூலம் பைரோகுமுலோனிம்பஸ் இடிமுழக்க மழை உருவாகிறது. வெப்பம் மற்றும் ஈரப்பதத்தின் அளவு காரணமாக புகை ஆபத்தான புயல் மேகங்களாக மாறுகிறது. இது நீர் சொட்டுகளுக்கு பதிலாக வானத்திலிருந்து கீழே விழும் நெருப்புத்தணல்களை கொண்டுவருகிறது.
நெருப்பின் வெப்பத்தால் உருவாக்கப்பட்ட மேற்காவுகை காற்றானது நீர் மற்றும் சாம்பலை வானத்தில் உறிஞ்சும்போது இந்த மேகங்களின் உருவாக்கம் நிகழ்கிறது. இந்த மேகங்கள் மேலும் உயரும்போது ஒரு "தீ மேகம்" உருவாகி வழக்கமான இடிமுழக்க மழை போன்று நெருப்பு மழை பெய்யும். இந்த பைரோகுமுலோனிம்பஸ் அடிக்கடி மின்னலை உருவாக்குவைத்தால் அதனால்  உருவாகும் மின்சாரம் புதிய நெருப்பை உருவாக்கி, காட்டுத்தீயை அணைக்கமுடியாதபடி மேலும் பரவச்செய்கிறது.
அவுஸ்திரேலியாவில் ஐரோப்பியர் பெருமளவில் குடியேறத்தொடங்கி கிட்டத்தட்ட 200 வருடங்களே ஆகின்றன. இக்காலப்பகுதியில் ஐரோப்பிய நாடுகளில் கைக்கொள்ளப்பட்ட தீயணைக்கும் முறைகளையே அவர்கள் பயன்படுத்தி வந்தனர். அவை  தகுந்த முறையில் பலனளிக்கவில்லை என்பதைக்  கண்டுகொண்ட ஆராய்ச்சியாளர்கள், பழங்குடிமக்களின் முறைகளை ஆராய்ந்து அவற்றையும் சேர்த்துக்கொள்ள அண்மைக்காலமாக தொடங்கியுள்ளனர். 
 பழங்குடிமக்களின் தீ முகாமைத்துவம் 

பழங்குடி மக்களுக்கு மட்டும்தான் பல இயற்கை நிகழ்வுகளுக்கான அறிவும் விளக்கமும் இருக்கின்றது.  பழங்குடிமக்களுக்கும் நிலங்களுக்கும் உள்ள பிணைப்பு மிகவும் வித்தியாசமானது. 'நீங்கள் இயற்கைத்தாயை பராமரித்தால் , இயற்கைத்  தாய் உங்களைப் பாதுகாப்பாள்' என்பதே அவர்களின் தாரக மந்திரம்.  
அவுஸ்திரேலிய பழங்குடி மக்களின் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் முறையையும் தற்போதைய விஞ்ஞான முறைகளையும் ஒருங்கிணைத்து காடுகளை முகாமைத்துவம் செய்யும் ஒரு முறை சிறிது காலமாக பின்பற்றப்படுகின்றது. மின்னலால் இலகுவாக தீ பற்றிக்கொள்ளாதிருக்கும்படி பழங்குடியின மக்கள் காடுகளை அவ்வப்போது எரித்து அவற்றை நிர்வகித்தனர். தீ ஏற்பட்டாலும், எரிபொருளாக இருக்கக்கூடிய காய்ந்த சருகுகள், மரங்கள் இல்லாதவிடத்து தீயின்  உக்கிரம் குறைவாகவே இருக்கும். உக்கிரம் இல்லாத தீ மரங்களை அதிகம் பாதிப்பதில்லை. 
பழங்குடி கலாச்சாரத்தில் நெருப்பு ஒரு முக்கிய அடையாளமாகும். பாரம்பரியமாக வேட்டை, சமையல், மற்றும் நிலப்பரப்பை நிர்வகித்தல் ஆகியவற்றில்  தீ ஒரு கருவியாக பயன்படுத்தப்பட்டது. தீ என்பது அவர்களுக்கு மிகப்பெரிய ஆன்மீக அர்த்தத்தை கொண்டுள்ளதுடன்   அவர்களின் பல கதைகள், நினைவுகள் மற்றும் நடனம் ஆகியவை தீயை  சுற்றியே  வருகின்றன. 
தீ முகாமைத்துவம் என்பது பழங்குடியின மக்கள் நாட்டை எவ்வாறு கவனித்துக் கொள்கிறார்கள் என்பதன் ஒரு பகுதியாகும் . இது பெரும்பாலும் 'கலாச்சார எரிப்பு' (Cultural burning) என்று அழைக்கப்படுகிறது. 


பழங்குடிமக்களின் வேகமும் உக்கிரமும் குறைந்த மென்தீயால் (Cool burn) தாவரங்களுக்கும் விலங்குகளும் பாதுகாக்கப்படும். இதன்போது வண்டுகள் மற்றும் எறும்பு உள்ளிட்ட விலங்குகள் தப்பிக்க போதுமான நேரம் இருக்கும். இளம் மரங்களும் புல் விதைகளும் அழியாது மீண்டு வரும். பெருந்தீக்களை விட மென்தீயின் வெப்பம், மரத்தின் பட்டைகளில் உள்ள எண்ணெயைப் பற்றவைக்காது. இது "சுற்றுச்சூழலை பசுமையாக வளர்ப்பதற்கான ஒரு கருவி" ஆகும். பழங்குடியினருக்கு மரங்களின் விதானங்கள் (canopy) மிகவும் புனிதமானது. அவர்களின் மென் தீ வைப்பின் போது மரங்களின் விதானங்கள் எரியாதவாறு கவனமாக பார்த்துக்கொள்வார்கள்.
இம்முறையில் மார்ச் மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையேயான வறண்ட காலங்களில் இலக்கு வைக்கப்பட்ட பகுதிகளில் காய்ந்த புற்கள் சருகுகள் என்பன எரிக்கப்பட்டு எரிபற்றும் பொருள்கள் குறைக்கப்படும். இக்காலப்பகுதி இடங்களுக்கு இடங்கள் வேறுபடும். முக்கியமாக மழைக்காலத்துக்கு சற்று முன்பாக இவை எரிக்கப்படும். கலாச்சார தீ ஆபத்து குறைப்பு எரிப்பை (hazard reduction burning) ஐ விட அடிக்கடி செய்யப்படுவதால் மிகவும் நேரமினக்கேடும் செலவுகூடியதுமான ஒருமுறையாகும். 
ஒவ்வொரு வருடமும் காட்டுத்தீயின் அழிவுகள் கூடி வருவது போன்று தோன்றுவதால் இது புவி வெப்பமாதலால் ஏற்படும்  காலநிலை மாற்றத்தோடு தொடர்புடையது என்று பலரும் வாதிடுகின்றனர். தற்போதைய அரசாங்கம் புவி வெப்பமாதலுக்கு எதிரான எந்த நடவடிக்கைகளும் எடுப்பதில்லை என்றும், இம்முறை காட்டுத்தீயின் உக்கிரம் மிகவும் கூடுதலாக இருக்கும் என்று விஞ்ஞானிகளால் எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தும் தேவையான முன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் பலரும் குற்றம் சொல்ல தொடங்கியுள்ளனர். 
சீனா உட்பட பல நாடுகள் புவி வெப்பமாதலுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வரும் வேளையில் மிகவும் முன்னேறிய நாடுகளின் பட்டியலில் இருக்கும் ஆஸ்திரேலியா அதைப்பற்றி அலட்டிக்கொள்ளாமல் இருப்பது வேதனையான விடயம் மாத்திரமல்லாமல் எமது அடுத்த தலைமுறைக்கு காட்டுத்தீயும் , வெள்ளப்பெருக்கும் நிறைந்த ஒரு மோசமான காலநிலையுள்ள நாட்டை நாம் விட்டுச்செல்ல வேண்டியிருக்கும் என்பது ஒரு கசப்பான உண்மையாகும்.

Tuesday, December 31, 2024

விஞ்ஞானம், மருத்துவம் மற்றும் தொழில்நுட்பத்தில் பத்து குறிப்பிடத்தக்க மைல்கற்கள் - 2024

 விஞ்ஞானம், மருத்துவம் மற்றும் தொழில்நுட்பத்தில் பத்து குறிப்பிடத்தக்க மைல்கற்கள் - 2024


2024 ஐப் பிரதிபலிக்கும் வகையில், விஞ்ஞானம், மருத்துவம் மற்றும் தொழில்நுட்பத்தில் பத்து குறிப்பிடத்தக்க மைல்கற்களை தொகுத்துள்ளேன். தவறவிட்ட முக்கிய மைல் கல் ஏதாவது இருந்தால் பின்னூட்டத்தில் குறிப்பிடுங்கள்.

 

1. AI என்றழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு மனித செயல்திறனை மிஞ்சுகிறது: செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் மருத்துவ நோயறிதல்களில் மனித மருத்துவர்களை விஞ்சியதுடன் கவர்ச்சிகரமான காணொளிகளை உருவாக்கியதுடன் மேம்பட்ட வானிலை கணிப்புகள் மற்றும் சிக்கலான தர்க்க அமைப்புகளில் AI தேர்ச்சி பெற்றுவிட்டது.
பெரும்பாலான கண்டுபிடிப்புகளுக்கு AI இன் பங்களிப்பு இன்றியமையாததாக இருந்துள்ளது.
2. ரொக்கெட் மீள்பயன்பாடு: SpaceX ராக்கெட்- பிடிக்கும் (interception) தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக நிரூபித்ததுடன் சிக்கனமான மற்றும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய விண்வெளி பயணத்திற்கு வழி வகுத்தது.
3. எய்ட்ஸ் (HIV) சிகிச்சையில் முன்னேற்றங்கள்: Gilead என்னும் நிறுவனம் lenacapavir என்ற ஊசி மருந்தை அறிமுகப்படுத்தியது. இது எச்.ஐ.வி தொற்றுகளை கணிசமாகக் குறைக்கிறது மற்றும் பிற வைரஸ்களுக்கு எதிரான திறனைக் காட்டுகிறது.
4. மெலனோமா தோல் புற்றுநோய் தடுப்பூசி: mRNA-ஐ அடிப்படையாகக் கொண்ட முதல் தனிப்பயனாக்கப்பட்ட மெலனோமா தடுப்பூசி, mRNA-4157/V940, மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளில் நுழைந்தது. இது புற்றுநோய் சிகிச்சையில் ஒரு குறிப்பிடத்தக்க படியைக் குறிக்கிறது. ரஷ்ய விஞ்ஞானிகளால் தனிப்பயனாக்கப்பட்ட mRNA அடிப்படையிலான புற்றுநோய் தடுப்பூசி உருவாக்கப்பட்டு preclinical நிலையை கடந்துள்ளது.
5. மலேரியா தடுப்பூசி: மனிதகுலத்தின் பழமையான மற்றும் கொடிய நோய்களில் ஒன்றான மலேரியாவுக்கு எதிரான தடுப்பூசிகள் 17 நாடுகளில் விநியோகிக்கப்பட்டன.
6. செவிப்புலனை மீட்டெடுப்பதற்கான மரபணு சிகிச்சை(Gene Therapi) : மரபணு சிகிச்சையானது பரம்பரை காது கேளாத தன்மையுடன் பிறந்த ஐந்து குழந்தைகளுக்கு கேட்கும் திறனை அளித்தது. இது மரபணு சிகிச்சையின் திறனை வெளிப்படுத்துகிறது.
7. புதிய ஆண்டிபயாடிக் வகை கண்டுபிடிக்கப்பட்டது: நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கு எதிரான போராட்டத்தில் நம்பிக்கையை அளித்துடன் பல மருந்து எதிர்ப்பு பக்டீரியாக்களுக்கு எதிராக செயல்படும் ஒரு புதிய வகை நுண்ணுயிர் எதிர்ப்பிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
8. செயற்கை நுண்ணறிவு சட்டம் இயற்றப்பட்டது: ஐரோப்பிய ஒன்றியம் செயற்கை நுண்ணறிவுச் சட்டத்தை இயற்றியது, AIக்கான உலகின் முதல் விரிவான சட்டக் கட்டமைப்பை நிறுவியது.
9. நியூராலிங்கின் மனித மூளை உள்வைப்பு: எலோன் மஸ்க்கின் நியூராலிங்க் என்ற ஸ்டார்ட்அப், மனிதர்களை AI உடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்டு, மனித மூளையில் முதல் மைக்ரோசிப்பைப் பொருத்தியது.
10 குவாண்டம் கம்ப்யூட்டிங் : கூகுளின் குவாண்டம் கம்ப்யூட்டர், வில்லோ சிப் மூலம் இயங்குகிறது. சிக்கலான பிரச்சனைகளை பாரம்பரிய சூப்பர் கம்ப்யூட்டர்கள் டிரில்லியன் கணக்கான ஆண்டுகளாகளில் தீர்க்கும் பிரச்சனைகளை வெறும் சில நிமிடங்களில் தீர்த்து ஆச்சரியமூட்டியுள்ளது.
Reflecting on 2024, here are ten significant milestones in science, medicine, and technology:
1. AI Surpasses Human Performance: Artificial intelligence models outperformed human physicians in medical diagnoses, generated impressive videos, improved weather predictions, and mastered complex logical systems.
2. Rocket Reusability Achieved: SpaceX successfully demonstrated rocket-catching technology, paving the way for more economical and reusable space travel.
3. Quantum Computing Leap: Google's quantum computer, powered by the Willow chip, solved complex problems in mere minutes, outperforming traditional supercomputers by trillions of years.
4. Advancements in HIV Treatment: Gilead introduced lenacapavir, an injectable drug that significantly reduces HIV infections and shows potential against other viruses.
5. Personalized Melanoma Vaccine Trials: The first personalized melanoma vaccine based on mRNA, mRNA-4157/V940, entered Phase III clinical trials, marking a significant step in cancer treatment.
6. Malaria Vaccine Distribution: Vaccines against malaria were distributed in 17 countries, targeting one of humanity's oldest and deadliest diseases.
7. Gene Therapy Restores Hearing: Gene therapy enabled five children born with hereditary deafness to hear, showcasing the potential of genetic treatments.
8. New Antibiotic Class Discovered: A novel class of antibiotics effective against multi-drug resistant bacteria was discovered, offering hope in the fight against antibiotic resistance.
9. Artificial Intelligence Act Enacted: The European Union passed the Artificial Intelligence Act, establishing the world's first comprehensive legal framework for AI.
10. Neuralink's Human Brain Implant: Elon Musk's startup, Neuralink, implanted their first microchip into a human brain, aiming to merge humans with AI
-Kumaravelu Ganesan-

Thursday, September 26, 2024

கூலிக்கு மாரடிப்போர் (Professional Mourners)- ஆங்கில மூலம் - அழகு சுப்பிரமணியம், தமிழாக்கம் - ராஜ ஶ்ரீகாந்தன்

ஆங்கில மூலம் - அழகு சுப்பிரமணியம்

தமிழாக்கம் - ராஜ ஶ்ரீகாந்தன்


அன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலேயே கேட்ட அழுகுரலும் பறையொலியும் எம்மைத் துயிலெழுப்பின. ஆடைகளைச் சரிசெய்துகொண்டு பாட்டி வீட்டிற்கு ஓடினோம். வெளி விறாந்தைக்கும் வேலிக்குமிடையில் இருந்த பரந்த முற்றத்தில் அயலவர்கள் குழுமியிருந்தார்கள். அவர்களை விலக்கிக் கொண்டு கூட்டத்தின் மத்திக்குச் சென்றோம். உயிரற்ற பாட்டியின் உடலைக் கிடத்தியிருந்தார்கள். முதல் நாளிரவே அவர் இறந்துவிட்டாராம். பயத்தினால் உடல் வெலவெலத்தது. நான் சென்றிருந்த முதற் செத்தவீடு அதுதான். பறையொலியையும், அழுகுரலையும் மீறி ஒரு முரட்டுக்குரல் ஒலித்தது. அவர்தான் எங்கள் மாமனார். கிராமத்துக் கொட்டிற் பள்ளிக்கூடமொன்றில் ஆசிரியராகவிருந்த அவர்தான் செத்தவீட்டு அலுவல்களை மேற்பார்வையிட்டார். சாதாரணமாகவே அவர் தனது சிம்மக் குரலில் வேகமாகக் கதைப்பார். கோபம் வந்தால் கேட்கவே வேண்டாம், வீராவேசம் கொண்டு ஊரே அதிரும்படி தொண்டை கிழியக் கத்துவார். அன்றும் அவர் கோபத்தின் உச்சிக் கொப்பிலே நடமாடிக் கொண்டிருந்தார். கூலிக்கு மாரடிப்பவர்கள் இன்னும் வந்து சேராததே அதற்குக் காரணம்.

 “நானே போய் அவளவையின்ரை சிண்டைப் பிடிச்சு இழுத்து வாறன்” 

என்று தனக்குத்தானே பலமாகச் சொல்லிக்கொண்டு புறப்பட்டார். கூலிக்கு மாரடிப்போரைப் பற்றி பல கதைகளை நான் கேட்டிருக்கிறேன். அவர்களைப் பார்க்கவேண்டுமென்ற ஆவலினால் உந்தப்பட்டவனாக நானும் அவரைப் பின்தொடர்ந்தேன்.

மணல் ஒழுங்கைகளூடாகவும், புழுதி படிந்த ஒற்றையடிப் பாதைகளூடாகவும் சென்று கொண்டிருந்தோம். தூரத்தே நரிகளின் ஊளையொலி கேட்டது. பற்றைகளிலிருந்த சருகுகளிடையே பாம்புகள் சரசரத்து ஓடின. மாமனாரை ஒட்டி உரசிக்கொண்டு நடந்தேன்.

 "ஓ! அதுகள் சாரைப்பாம்புகள். ஒரு நாளும் கடியாது, நீ பயப்பிடாதை. சின்னஞ்சிறு குடிசைகள் தென்பட்டன. அவை நேராக, ஒரே சீராக அமைக்கப்பட்டிருந்தன. கடற்கரைப்பகுதிக்கு வந்துவிட்டோம், சில மீனவர்கள் மனைவிமாரின் உதவியுடன் மீன்பிடி வலைகளைச் செப்பஞ் செய்துகொண்டிருந்தனர். இன்னுஞ்சிலர் கட்டுமரங்களைக் கடலிற் தள்ளிக்கொண்டிருந்தனர்.

 "டேய்! நில்லுங்கோடா அயோக்கியப் பயல்களே." 

மாமனார் கோபத்தோடு கத்தினார்.

 “இண்டைக்கென்ரை குஞ்சியாத்தேன்ரை செத்தவீடென்று உங்களுக்குத் தெரியாதோ? கீழ் சாதிப்பயல்களே எல்லாரும் அங்கை நடவுங்கோடா."

 "எங்களுக்குத் தெரியாது ஐயா! 'நாம்' கோவிக்கக்கூடாது நாங்கள் இப்பவே வாறம்" 

வலைகளைப் போட்டுவிட்டுப் பெளவியமாக வந்து கைகட்டி நின்று கொண்டு சொன்னார்கள். அவர்களைக் கடந்து கூலிக்கு மாரடிப்பவர்களைத் தேடிச் சென்றோம். நாம் முன்பு பார்த்த குடிசைகளை விடச் சிறிய குடில்கள் சில தெரிந்தன 

"அந்த ஈனப்பெண்டுகள் இங்கினைதான் இருக்கிறவளள்” 

என்றார் மாமனார். ஒரு குடிலின் முன்னே நின்றுகொண்டு சத்தமிட்டுக் கூப்பிட்டார். கிடுகுப்படலையைத் திறந்துகொண்டு இரண்டு பெண்கள் வெளியே வந்தனர். மணிக்கட்டிலிருந்து முழங்கை வரை அணிந்திருந்த வளையல்கள் கிலுகிலுத்தன. அழுக்கேறிய சேலைகளை மார்பின் குறுக்கே வரிந்து கட்டியிருந்தார்கள். 

"என்ர குஞ்சியாத்தையின்ரை செத்தவீடு இண்டைக்கென்று சொல்லி அனுப்பினனானெல்லோ, இன்னும் அங்கை வராமல் இங்கை என்னடி செய்யிறியள்?" 

மாமனார் பொரிந்துதள்ளினார். 

"நயினார் கோவிக்கக்கூடாது. நாங்கள் அங்கை வாறதுக்குத் தான் வெளிக்கிடுறம். சுணங்கினதுக்கு நயினார் மன்னிக்க வேணும்" 

அவர்களில் ஒருத்தி சொன்னாள்.

 "மற்றவள்களெல்லாம் எங்கை போயிட்டாளுகள்?”

 “இப்ப இங்கை எங்களைவிட ரெண்டுபேர்தான் இருக்கினம். ரெண்டு பேரும் அக்கா, தங்கைகள் அவவையைவிட வேறை ஒருத்தருமில்லை. அதுகளும் வரமாட்டுதுகள் இண்டைக்கு விடியக் காத்தாலை அதுகளின்ரை தாய் மனிசி செத்துப்போச்சு" 

"சே! கொஞ்சங்கூட அறிவில்லாத சனங்களாக் கிடக்கு. அவளள் எங்கை இருக்கிறவளள்?” “உதிலை கிட்டத்தான் நயினார்”

 “எனக்கொருக்கால் அவளளின்ரை குடிலைக் காட்டு” 

அவ்விரு பெண்களையும் பின்தொடர்ந்து சென்றோம். ஒரு குடிசையிலிருந்து விசும்பலொலி கேட்டது. அதன் முன்னாற்சென்று நின்றோம். எம்முடன் வந்த பெண்கள் அங்குள்ளோரைக் கூப்பிட்டனர். கண்ணீரால் நனைந்து நெகிழ்ந்திருந்த சேலைகளை குத்திட்டு நிற்கும் மார்பின் குறுக்கே இறுக்கிச் செருகியவாறு அச்சகோதரிகள் வெளியே வந்தனர்.

"நயினார் எங்களைப் பொறுத்துக் கொள்ள வேணும். எங்கடை ஆத்தை காலமை மோசம் போயிட்டா. இந்த நிலமேலை நாங்கள் மற்றவயின்ரை செத்தவீட்டுக்கு எப்படி வாறது?"

 "மானங்கெட்ட நாய்களே என்ர குஞ்சியாத்தேயின்ற செத்தவீட்டிற்கு ரண்டு மாரடிக்கிறவளள் என்னத்துக்குக் காணும்? அவ ஆரெண்டு தெரியுமல்லே" மாமனார் சீறி விழுந்தார். 

"நயினார் கொஞ்சம் பொறுக்கவேணும்” 

அயலிலுள்ள பெண்ணொருத்தி அவர்களுக்காகப் பரிந்து பேசினாள்.

 “சொந்தத் தாய் சீவன் போய்க்கிடக்கேக்கை அந்தத் துக்கத்தில இருக்கிறதுகளை உங்கடையிடத்துக்கு வந்து போலியாக அழச்சொல்லிறது நல்லா இல்லப் பாருங்கோ." 

மாமனாரின் உதடுகள் கோபத்தால் துடித்தன. கண்கள் ஓடிச்சிவந்தன, உடல் பதறியது. பரிந்து பேசிய பெண் தலைகுனிந்து நிலம் நோக்கினாள். அவர்களுடைய நிலையை எண்ணி எனது கண்கள் பனித்தன. கவலையுடன் தலையை அசைத்தேன். அவருடைய கோபம் என்மேற் திரும்பியது. 

"மடப்பயலே! இதுகளைப் பற்றியெல்லாம் உனக்கென்ன தெரியும்? செத்தவீட்டுக்குக் கொப்பற்றை கூட்டாளிமார் சுப்பிறீம் கோட்டு நீதவான், பொலிஸ், கோட்டு நீதவான், பிரக்கிராசிமார், அப்புக்காத்துமார் எல்லாரும் வருவினம். போதுமான மாரடிப்பவளள் இல்லாட்டில் அவையெல்லாம் எங்களைப்பற்றி என்ன நினைப்பினம்?" 

அவ்விரு சகோதரிகளும் முழந்தாளிட்டுக் கெஞ்சினார்கள். 

"நயினாற்றை சொல்லுக்கு மாறாக நடக்கிறமெண்டு நினைக்க வேண்டாம். உங்களைக் கும்பிட்டம். இம்முறை மட்டும் எங்களை மன்னிச்சுக் கொள்ளுங்கோ. அடுத்தமுறை நயினார் வீட்டுச் செத்த வீட்டுக்கு எங்கடை தொண்டைத்தண்ணி வத்துமட்டும் அழுவம்"

“கர்வம் பிடிச்சவளே! என்ரை வீட்டிலை இன்னுமொரு சவம் விழவேண்டுமெண்டு விரும்பிறியோடீ அற்பப் பிராணிகளே, உந்தச் சொல்லுக்காக உங்களைக் கோட்டுக்கேத்துவேன்” கோபாவேசம் மிகுந்தநிலையில் கையைப் பிடித்துத் தரதரவென்றிழுத்துச் சென்றார். 

"நயினார்! கையை விடுங்கோ நயினார். நாங்கள் இப்பவே வாறம்" 

அப்பெண்கள் நால்வரையும் முன்னேவிட்டு அலுவல்காரர் பின்னாற் சென்றார். அவரைத் தொடர்ந்து நானும் சென்றேன். பாட்டி வீட்டை நெருங்கிவிட்டோம் அப்பெண்களின் நடையில் ஒரு வேகம் காணப்பட்டது. கூந்தலை அவிழ்த்துத் தலையை விரித்துக்கொண்டு, இரு கைகளையும் வானோக்கி உயர்த்தியவாறு 'ஓ..' வென்று கதறியபடி உட்சென்றார்கள். அங்கே அயலவர்களும் உறவினர்களுமாகிய பெண்கள் சிறு, சிறு குழுக்களை அமைத்துக்கொண்டு ஒருவரின் தலையை அடுத்தவரின் கழுத்திற் சாய்த்துக்கொண்டு அழுதவண்ணம். இருந்தார்கள். அவர்களுக்குச் சிறிது ஒதுக்கமாய் அமர்ந்து கொண்டு மாரடிக்கும் பெண்கள் அழுதார்கள். கைகளை மேலே தூக்கித் தலையில் அடித்தார்கள். பாட்டியின் நற்பண்புகளைச் சொல்லி ஒப்பாரி வைத்தார்கள். பாட்டியின் அன்புக்குப் பாத்திரமான பேரப்பிள்ளை தம்பு மலேசியாவிலிருந்து வரும்வரை பாட்டியை விட்டுவைத்த முழுமுதற் கடவுள் சிவனின் கருணையே கருணை என்று சொல்லி உறவினர் சிலர் அழுவதை அவதானித்த மாரடிக்கும் பெண்கள் அதனைக் கருவாகக் கொண்டு ஒப்பாரி வைத்தனர்.

 "வாயைத் திறவனணை நீ வளர்த்தவர் வந்துவிட்டார் - உன் 

வளத்தினைச் சொல்லனணை 

கண்ணைத் திறவனணை நீ வளர்த்தவர் வந்துவிட்டார் - உன் 

கதையைச் சொல்லனணை"

அதே வேளையில் அலுவல்கார மாமனார் தனது நண்பர், குழாத்தில் தனது கெட்டிக்காரத்தனத்தைப் பறைசாற்றினார் மாரடிக்கும் பெண்களை இழுத்துவந்ததனைச் சுவையாக விபரித்தார் அவருடைய மனிதாபிமானமற்ற செயல்களை நண்பர்கள் மறுதலித்தனர். அந்த ஈனச்செயலுக்காக அவ்விரு பெண்களிடமும் மன்னிப்புக் கோருமாறு வற்புறுத்தினர். வந்திருந்த பலர் அப்பெண்- களுக்காக வருந்தினர். அவர்களை வீட்டிற்கு அனுப்பும்படி எனது தந்தையார் சொன்னார். அலுவல்காரர் பொங்கியெழுந்து அப்பெண்களிடம் சென்றார். ஏதோவெல்லாம் கூறி அதட்டினார். இறுதியில் மரணச் சடங்கு முடியும்வரை நின்று தங்கள் கடமையைச் செய்து முடிக்க அவர்கள் இணங்கினார்கள். அலுவல்காரர் முன்பைவிடச் சுறுசுறுப்பாக ‘அலுவல்' பார்த்தார். அவருடைய கொடூரச் செயலை விஷயமறிந்த ஒவ்வொருவரும் விமர்சித்தனர். அவரோ எதையும் காதிற் போடாமல் சுழன்று, சுழன்று அலுவல் பார்த்தார். பறையடிப்பவர்களிடம் சென்று மாரடிக்கும் பெண்களின் குரலைவிடச் சத்தமாக வேகமாகப் பறையை முழக்கச் சொன்னார். பின்பு ஒரு பை நிறைய அரிசியையும் மரணச் சடங்கிற்குத் தேவையான சமித்து முதலிய முக்கிய பொருட்களையும் எடுத்துக்கொண்டு பிரேதக் கட்டிலருகே வந்தார். நன்றாக வியர்த்துக் களைத்தது, மாரடிக்கும் பெண்களைக் கட்டிலருகே கூட்டிவரக் காலடி எடுத்துவைத்த போது உடல் தள்ளாடியது. கைகளாற் தலையைப் பிடித்துக்கொண்டு தடால் என்று வீழ்ந்து விட்டார். சுற்றிலுமிருந்தவர்கள் கலவரப் பட்டனர். சிலர் அவரை ஓர் ஒதுக்குப்புறமாகத் தூக்கிச் சென்றனர். இன்னுஞ் சிலர் உதவிக்கு விரைந்தனர். ஒருவர் முகத்திற் தண்ணீர் தெளித்தார். வேறொருவர் விசிறி கொண்டு விசுக்கினார். சிறிது நேரம் சிசுருஷையின்பின் மாமனார் கண்களைத் திறந்து, எழுந்திருக்க முயன்றார். நண்பர்கள் விடவில்லை. நன்றாக ஓய்வெடுக்கும்படி வற்புறுத்தினர். மாரடிப்போரிடையே அவ்விரு சகோதரிகளின் குரல்கள் வெகு துல்லியமாகக் கேட்டன. நயினாரின் குஞ்சியாத்தையின் செத்த வீட்டில் ஒன்றிவிட முடியவில்லை. 

“ஏழையள் எம்மைவிட்டு எங்கை போனாய் 

ஏந்திழையே ஏழையள் நாம் எங்கு போவோம் எழுந்துவாராய் 

எங்கதாயே" 

அவர்களுடன் மற்றைய இருவரும் சேர்ந்து கொண்டனர். குருக்கள் வந்து மரணச்சடங்கை ஆரம்பித்தபோது அழுகுரல் விண்ணையொட்டி ஓய்ந்தது. குருக்கள் பாட்டியின் அன்புப் பேரனான தம்புவை அருகிலழைத்துத் தேவாரம் பாடச் சொன்னார். குரல் கரகரத்துக் தளதளத்தது. கண்கள் குளமாகிப் பார்வையை மறைத்தது. ஈற்றடிகளை முற்றாகப் பாடிமுடிக்க முடியவில்லை. பிரேதத்தின் மேல் தலையைப் புதைத்து அழுதார். 

"எத்தனையோ வருஷங்களாக எனக்காகக் காத்திருந்தியே. கடைசீல என்னோடு ஒரு சொல்லுக்கூடப் பேசாமல் அறிவற்ற நிலையிலேயே செத்துப் போனியே என்ரை ஆச்சி” 

 தம்பு உணர்ச்சிவசப்பட்டு ஓலமிட்டார். 

மாரடிக்கும் பெண்கள் ஒப்பாரியைத் தொடர்ந்தனர்.

 "அப்புக்காத்தினருமைத் தாயே நீயின்று அசையாமலிருப்பதேனோ? 

அசையாமலிருப்பதாலே அன்பானோர்  அல்லல் கொண்டழுகிறார்கள். 

ஓ……….

 கண்ணைத் திறந்துந்தன் கயல்விழியைக் காட்டனம்மா 

கண்ணைத் திறந்திந்தக் காட்சியினைப் பாரனம்மா

 ஓ……….

வாயைத் திறவனம்மா, நீ வளர்த்தவர் வந்துவிட்டார் 

உன் வளத்தினைச் சொல்லனம்மா 

கண்ணைத் திறவனம்மா நீ வளர்த்தவர் வந்துவிட்டார் 

உன் கதையளைச் சொல்லனம்மா."


Sunday, April 28, 2024

கலாநிதி நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்: விளையாட்டு, கல்வி, மனிதாபிமானத்தின் சிகரம்

கலாநிதி  நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்: விளையாட்டு, கல்வி, மனிதாபிமானத்தின் சிகரம்

கலாநிதி குமாரவேலு கணேசன் (STEM-Kalvi)

ஏப்ரல் 18, 2024 அன்று, எதிர் என்று அன்புடன் அழைக்கப்படும் கலாநிதி நாகலிங்கம்

எதிர்வீரசிங்கம், கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அவரது இல்லத்தில், அவரது குடும்பத்தினர்

சூழ அமைதியாக காலமானார். 89 வயதில், கலாநிதி எதிர்வீரசிங்கம், விளையாட்டு, கல்வி மற்றும்

அர்ப்பணிப்புள்ள மனிதாபிமானப் பணிகள் மூலம் வாழ்க்கையைத் தொட்டு, கண்டங்கள் கடந்தும்

ஒரு மரபை விட்டுச் சென்றுள்ளார்.

1934 ஆம் ஆண்டு யாழ் குடாநாட்டில் ஒரு சிறிய கிராமமான பெரியவிளான் என்ற இடத்தில் ஒரு

சாதாரண ஒரு அறை மண் குடிசை வீட்டில் பிறந்த எதிரின் வாழ்க்கைப்பயணம் எதிர்கால சந்ததிக்கு

ஒரு வழிகாட்டியாகும். இந்த எளிய தொடக்கத்திலிருந்து, அவர் உலக அரங்கில் முன்னேறி இரண்டு

ஒலிம்பிக் போட்டிகளில் உயரம் தாண்டுதல் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தியது

மாத்திரமன்றி 1958 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நாட்டின்

முதலாவது தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.

இதற்காக அவர் கடந்து வந்த பாதை மிக நீண்டது. என்ன தான் சிறந்த விளையாட்டு வீரனாக இருந்தாலும்

இலங்கையில் நிலவ் வந்த இனத்துவேசம் அவரி பலமுறை புறக்கணித்தது. அதை அவரது புதல்வர்

அர்ஜுனன் பின்வருமாறு எழுதுகின்றார். 

“ யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நடந்த போட்டி ஒன்றில் அவருக்குப் பரிசாகக் கிடைத்த தடகள

மெய்வல்லுனர் புத்தகமொன்றில் இருந்த படங்களைக் கவனமாக ஆராய்ந்து உயரம் பாய்வது எப்படி

என்று தமது சிறிய பின்வளவில் எதிர் தானாகவே கற்றுக்கொண்டார். யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு

திரையரங்கில் 1948 ஒலிம்பிக் போட்டிகள் குறித்த செய்திப்படம் ஒன்றைப் பார்த்த பின்னர் இப்படியான

ஓர் ஒலிம்பிக் போட்டிக்குத் தானும் போவேன் என்று ஓர் உறுதியை எதிர் தனக்குள் எடுத்துக்கொண்டார்.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, 17 வயதான எதிர் ஹெல்சிங்கி - பின்லாந்து 1952 ஒலிம்பிக் போட்டிகளில்

பங்கேற்றார். மெல்பேண் - அவுஸ்திரேலியா 1956 ஒலிம்பிக் போட்டிகளினூடாகத் தொடர்ந்த அவரது

தடகளப் பயணத்தில், ரோக்கியோ - ஜப்பான் 1958ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் எ

திர் கண்ட வெற்றி எந்த விளையாட்டிலும் இலங்கை பெற்ற முதல் தங்கப் பதக்கம் என்ற பெருமையையும்

பெற்றது. நான்கு ஆண்டுகளின் பின்னர், ஜகார்த்தா - இந்தோனேசியா 1962ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப்

போட்டிகளில் எதிர் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் உயரம் பாய்தல் போட்டிகளில் எதிர் கலந்து கொண்ட ஒவ்வொரு வயதுப் பிரிவிலும் இருந்த சாதனைகளை முறியடித்தார். பழைய பஸ் வண்டி அச்சுகள் மற்றும் பிற பஸ் பாகங்களைப் பயன்படுத்தி வீட்டில் உருவாக்கிய பொருட்களைத் தனது உடலை வலுப்படுத்தும் பயிற்சிகளுக்காக எதிர் பயன்படுத்தினார். கொழும்பில் 1951ஆம் ஆண்டு நடந்த தேசிய மட்டத்திலான  போட்டியில் வென்ற பின்னர் அவருக்கு முதற்தடவையாக ஒரு சிறப்பு தடகள பயிற்சியாளரான பி. இ. ராஜேந்திராவின் நெறிப்படுத்தலும்  கட்டமைப்பான உடற்பயிற்சி வழிமுறைகளும் கிடைத்தன. பின்னர்,

1952 ஒலிம்பிக் போட்டிகளுக்கான  அணியில் எதிர் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்லாந்து நாட்டிலுள்ள

ஹெல்சிங்கி நகரத்தை அடைய ஒரு மாதத்திற்கும் மேலாகக் கடற்கப்பலிற் பயணம் செய்து எதிர் அதிலே

கலந்து கொண்டார். 1954 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அவருக்குப் பதக்கம் ஏதும் கிடைக்காவிட்டாலும்,

தங்கம் - வெள்ளி - வெண்கலம் என்று பதக்கங்கள் வென்ற வீரர்கள் தாண்டிய 1.95 மீற்றர் உயரத்தை அவரும்

தாண்டியிருந்ததால் அவருக்கு விதிகளின்படி நான்காவது இடம் கிடைத்ததுடன், வெற்றியாளர்களுடன் புதிய

உயரம் பாய்தல் ஆசிய சாதனையை எதிர் மூன்று வீரர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

உயரம் பாய்தலில் இலங்கைக்கான சாதனையை மட்டுமன்றி ஆசிய மட்டத்திலும் சாதனையைக் கொண்டிருந்த

போதிலும், 1958ஆம் ஆண்டு ரோக்கியோ - ஜப்பான் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான அணியில்

எதிர் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. இருந்தாலும், டெய்லி நியூஸ் பத்திரிகையின் விளையாட்டுப்  பிரிவு

செய்தியாசிரியர் காள்ரன் செனிவிரத்தின தொடர்ந்து எழுதி வந்த கட்டுரைகளின் அழுத்தம் காரணமாகத்

தெரிவுக்குழு இறுதியில் தன்னைத் தளர்த்திக்கொண்டு கொண்டு எதிர் இந்த போட்டிகளிற் கலந்து கொள்ள

அனுமதித்தது. இருந்தாலும், பிந்தி அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார் என்ற காரணத்தைக் காட்டிய

தெரிவுக்குழு இந்தப் போட்டிகளிற் கலந்து கொள்வதற்காக லொஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருந்து ரோக்கியோ

சொல்வதற்கான செலவை அவரே பார்த்துக் கொள்ளவேண்டும் என்று அறிவித்தது. அப்போது அவருக்கு

ஆதரவாக புரவலர் டொனவன் அந்திரே கொடுத்த ஐயாயிரம் அமெரிக்க டொலர்களின் உதவியுடன் அந்தப்

பயணத்தை எதிர் மேற்கொண்டு, போட்டிக்குச் சில நாட்கள் மட்டுமே இருக்கையில் ரோக்கியோவில் அணியுடன் 

இணைந்து கொண்டார். இந்தப் போட்டிகளின் போது அவருக்கான சீருடைகளை இலங்கை வழங்கவில்லை

என்பதால், அவரது பல்கலைக்கழகத்தின் விளையாட்டுச் சீருடையில் இலங்கை அணியின் இலச்சினையை

குத்திக்கொண்டு எதிர் அந்தப் போட்டிகளிற் கலந்து கொண்டார். இவற்றையெல்லாம் தாண்டி, இலங்கையின்

அணியிலிருந்த மற்றைய போட்டியாளர்கள் அவரையே இலங்கை அணியின் தலைவராகத்  தீர்மானித்தார்கள்.”

எதிரின் கல்வித் தேடல்கள் அவரது தடகள சாதனைகளைப் போலவே சிறப்பாக இருந்தன. லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் (UCLA) உதவித்தொகையில் அவர் அமெரிக்காவிற்குச் சென்று பின்னர் கார்னெல் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். அவரது கல்வி மற்றும் தடகள திறமை அவரை விளையாட்டில் மட்டுமல்ல, கல்வி சீர்திருத்தம் மற்றும் சமூக மேம்பாட்டிலும் எல்லோரலும் மதிக்கப்படும் ஒரு மாமனிதனாக மாற்றியது.

இலங்கையில், குறிப்பாக அதன் மிகவும் கொந்தளிப்பான போர் நடந்துகொண்டிருந்த  90களில்  தனது

மக்கள் பணிகளை மீண்டும் ஆரம்பித்தார். வெளிநாட்டில் புகழ்பெற்ற கல்வித் தொழிலில் இருந்து ஓய்வு

பெற்ற பின்னர், அவர் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்குத் திரும்பினார். அங்கு,

போரினால் பாதிக்கப்பட்ட சமூகங்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் சமாதானத்தை வளர்ப்பதற்கும்

இலக்காகக் கொண்ட மனிதாபிமான மற்றும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு இரண்டு தசாப்தங்களுக்கும்

மேலாக அர்ப்பணித்தார்.

2009 இல் ஈழப்போர் முடிவடைந்ததன் பின்பாக உலகளாவிய தமிழ் அமைப்புக்களை ஒருங்கிணைக்கும்

நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட Global Tamil Forum என்னும் அமைப்பின் தலைவராக எதிர் தெரிவு

செய்யப்பட்டு ஒரு வருடம் கடைமையாற்றினார் என்பது பலருக்கு தெரியாத ஒரு உண்மை. 

எதிரின் முன்முயற்சிகள் பரந்ததாகவும் மாறுபட்டதாகவும் இருந்தன. உள்ளூர் மொழிகளில் விநுபொக

கல்வி (STEM-Education) காணொளிகளை உருவாக்குவதன் மூலம் கல்வியை மேம்படுத்துவதற்கான

முயற்சிகளை அவர் முன்னெடுத்தார். அக்காணொளிப் பாடங்களே கோவிட்-19 காலத்தில் பல வறிய

பிந்தங்கிய பிரதேச மாணவர்களுக்கு விரலிகளின் ஊடாகவும் இணையம் ஊடாகவும் கற்றலுக்கு  உதவி

செய்தது என்றால் மிகையாகாது.  

இலங்கை முழுவதிலும் உள்ள இளம் தடகள திறமைகளை கண்டறிந்து வளர்ப்பதை இலக்காகக் கொண்டு

பல பாசறைகளை நடத்தினார். 2004 சுனாமி மற்றும் இலங்கை உள்நாட்டுப் போரைத் தொடர்ந்து மீட்புக்

காலத்தில் அவரது பணி முக்கியமானதாக இருந்தது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மிகவும் தேவையான

நிவாரணம் வழங்கப்படுவதை ஒருங்கிணைத்ததில் அவரின் பங்கு முக்கியமானது.  

கலாநிதி எதிர்வீரசிங்கத்தின் செல்வாக்கு எண்ணிமக் கல்வி மற்றும் தடகள சாதனைகளுக்கு அப்பாற்பட்டது.

அவர் வடமாகாணத்தில் புரையோடிப்போயிருந்த சாதி அமைப்புக்கு எதிராக ஒரு உறுதியான செயற்பாட்டாளராக

இருந்து சமூகத்தின் ஒடுக்கட்டப்பட்ட பிரிவினரை உயர்த்த அயராது உழைத்தார். 

வடமாகாணத்தின் கல்வி நிலை கீழ் நோக்கி சென்றுகொண்டிருப்பதை உணர்ந்து 2014 ஆம் ஆண்டு அவர்

தலைமையிலான குழு தயாரித்த "வடக்கின் கல்வி முறைமை மீளாய்வு" என்னும் 250 பக்க அறிக்கை அப்போதைய

கல்வியமைச்சர் முன்னிலையில் வெளியிடப்பட்டது. 

01. மாணவர்களுக்கு வழங்கப்படும் உடல் ரீதியான தண்டனைகள் சகல பாடசாலைகளிலும் தாமதமின்றி

நிறுத்தப்பட வேண்டும். இதற்குப் பதிலாக ஆசிரியர்கள், அதிபர், மாணவர் தலைவர் உள்ளடக்கிய

மாணவர்களுக்கான வகுப்பறை நிர்வாகம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

02. தற்பொழுது முன்னிலைப்படுத்தப்படும் எழுத்து மூலமாக விடையளிக்கும் பரீட்சை முறைக்குப் பதிலாக

மாணவர்களின் எண்ணக்கருவை அடிப்படையாகக் கொண்ட செயன்முறையை ஆராய்ந்து அறியும் திறமையை

மையமாகக் கொண்ட செயற்றிட்டம் போன்றவற்றை ஆசிரியர்களினால் முன்னிலைப்படுத்தி ஊக்குவிப்பதை

மையமாகக் கொண்டு தேசிய பரீட்சைகள் மீளமைக்கப்பட வேண்டும்.

03. பொது நிர்வாகம், நியமனங்கள், இடமாற்றம், பதவியுயர்வு மற்றும் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்

சம்பந்தமாக முன்வைக்கபட்ட அனைத்து சிபார்சுகளையும் நடைமுறைப்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் மற்றும்

உத்தியோத்தர்கள் தமது துறைகளில் முதுமாணிப் பட்டங்களைப் பெறவோ அல்லது துறைசார் கல்வியை

விருத்தி செய்யவோ அவர்களுக்கு 1-4 வருடங்களுக்கு உயர்கல்வி பெறும் வாய்ப்பை உருவாக்கி கொடுக்கக்

கூடியவாறு 10 வருட காலத்திற்கான உத்தியோகத்தர்களின் விருத்தி சார்ந்த திட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும்.

04. பாடசாலை நேரத்தில் ஆசிரியர்களும் மாணவர்களும் தனியார் கல்வி நிலையங்களுக்கு செல்வதை தடுத்து

நிறுத்த வேண்டும்.

05. கல்வி சம்பந்தமான சகல தரவுகளையும் சேகரித்து வழங்கக் கூடியதாக கல்வி முகாமைத்துவ தகவல்

முறையொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும்.

06. தமிழ்மொழி மூலம் கற்றலுக்கான நிறுவனம் ஸ்தாபிக்கப்பட வேண்டும். இந்நிறுவனம் நாட்டின் சகல

தமிழ்மொழியில் கற்பிக்கும் பாடசாலைகளிலும் ஆசிரியர்களுக்கான பயிற்சியை வழங்கல். பாடவிதானம்

தயாரித்தல், அதற்கான நூல்கள், கற்பித்தல் முறை. தமிழ்மொழி மூலம் கற்றல் கற்பித்தலில் சம்பந்தமான

நூல்களை வழங்குவதற்குப் பொறுப்பாக இருக்கும்.

07. வலய மட்டத்தில் நிர்வகிக்கப்படும் பாடசாலைகளின் நிர்வாகம் மாற்றியமைக்கப்பட வேண்டும். வலய

மட்டத்தில் கல்விச் சபையொன்று அமைக்கப்பட வேண்டும். இச்சபை நியமிக்கப்பட்ட அங்கத்தவர்களையும்

தெரிவு செய்யப்பட்ட அங்கத்தவர்களையும் உள்ளடக்கியதாக இருக்கும். வலய மட்டத்தில் இயங்கும்

பாடசாலைகளை நிர்வகித்தல் அவை சம்மந்தமான தீர்மானம் எடுத்தல்

இச்சபையைச் சார்ந்ததாக இருக்கும். 

08. வலய மட்டத்தில் தற்பொழுது இயங்கும் முறைசாரா கல்விமுறை மாற்றப்பட்டு இதற்குப் பதிலாக

தொடர்கல்விப் பாடசாலைகள் அமைக்கப்பட வேண்டும். இப்பாடசாலையில் 16 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள்

கற்றுப் பயன்பெறும் வகையில் பாடவிதானம் தயாரிக்கப்பட்டு அமுல்படுத்தப்பட

வேண்டும்.

09.தற்போதைய நிதிமுகாமைத்துவ முறை உயர்நிலையில் வினைத்திறனுடன் செயற்படும் வகையில்

மாற்றியமைக்கப்பட வேண்டும்.

10. தற்பொழுது அமுலில் இருக்கும் தை மாதத்தில் தொடங்கி மார்கழியில் முடிவடையும் வரை கல்வி வருடத்தை

செப்டம்பரில் தொடங்கி ஓகஸ்டில் முடிவடையக் கூடியதாக மாற்றியமைத்து.


மேலே தரப்பட்டுள்ள அவ்வறிக்கையின் முக்கியமான 10 பரிந்துரைகளில் சிலவற்றை வட மாகாணசபை

ஆரம்பித்திருந்தாலும் எவற்றையும் தொடர்ந்து முன்னெடுக்கவில்லை என்பது துரதிஷ்டவசமானது. EMIS

தரவுத்தளம் மற்றும் வலயக் கல்வி வாரியம் என்பன அவற்றுள் குறிப்பிடத்தக்க இரண்டாகும். 


வட-மாகாணசபையில் கல்வியமைச்சின் ஆலோசகராக அவர் வகித்த பதவியானது 2017 இல் ஏற்பட்ட

மாகாண அமைச்சரவை மாற்றத்தின் பின்பாக வந்த புதிய மாகாண கல்வியமைசரினால் துரதிஷ்டவசமாக

நீடிக்கப்படவில்லை.  அது மட்டுமல்லாமல் பாடசாலைகளுக்கு விஜயம் செய்வதற்கு அவருக்கு

வழங்கப்பட்டிருந்த அனுமதியும் நீடிக்கப்படவில்லை. அதன் பின்பு அவர் அமெரிக்கா திரும்பிச்சென்றுவிட்டாலும்

பல விளையாட்டு, கல்விசார் தொண்டு நடவடிக்கைகளை இலங்கையில் தொடர்ந்தார். 


எதிரின் சமூகப் பங்களிப்புகளை கௌரவிக்கும் வகையில், கலாநிதி எதிர்வீரசிங்கத்திற்கு இலங்கை

அரசாங்கத்தினால் 'தேசபந்து' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது . அவரது குணாதிசயத்திற்கு உண்மையாக,

அவர் உள்நாட்டு மோதலின் போது தனது மக்கள் அனுபவித்த துன்பங்களைக் காரணம் காட்டி, அவ்விருதை

நிராகரித்திருந்தார். அவரது முடிவு சமூக நீதிக்கான அவரது ஆழ்ந்த பச்சாதாபத்தையும் அர்ப்பணிப்பையும்

அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

எதிரின் தனிப்பட்ட வாழ்க்கை அவரது தொழில் முயற்சிகளைப் போலவே சிறப்பாகவும் நிறைவாகவும் இருந்தது.

அவர் சியரா லியோன் நாட்டில் இருந்த காலத்தில், 1965ஆம் ஆண்டு ஜூலியற் ஆன் பவர் (Juliet Ann Power)

என்ற அமெரிக்காவில் இருந்து வந்து அங்கு தொண்டுப்பணி செய்துகொண்டிருந்த பெண்ணை  காதலித்து

திருமணம் செய்து கொண்டார்.


எதிர்- ஜூலியட் தம்பதியருக்கு மூன்று பிள்ளைகளும் அவர்களினூடாக எட்டு பேரக்குழந்தைகளும் உள்ளனர். 

அமெரிக்க குடியுரிமைக்கு தகுதியுடையவராக இருந்தும் கடைசிவரை இலங்கை மண்ணின் மைந்தனாக

இலங்கைக் குடியுரிமையுடன் வாழ்ந்து தனது வாழ்க்கையை எதிர் நிறைவு செய்து கொண்டார். 

கலாநிதி நாகலிங்கம் எதிர்வீரசிங்கத்தை நாம் நினைவுகூரும்போது, ​​அவர் படைத்த சாதனைகளைகளையும்

அவர் பெற்ற பாராட்டுகளையும் மட்டும் அல்லாது ஒடுக்கப்பட்டோர், ஏழைகள் மீதான அவரின்  கருணை, கல்வி

பற்றிய அவரின் தொலைநோக்குப் பார்வை, மனித மாண்பு மற்றும் தேசியத்தின்  மீதான அவரின் அசைக்க

முடியாத நம்பிக்கைகளையும் நாம்  நினைவுகூர்வது அவசியமாகின்றது.  அவரது வாழ்க்கை வரலாறு

நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகவும், விடாமுயற்சி மற்றும் மனிதநேயத்தின் சக்திக்கு சான்றாகவும்

உள்ளது.

மலர் வளையங்களுக்கு பதிலாக, அவரது குடும்பத்தினர் இலங்கைத் தொண்டு நிறுவனங்களுக்கு

நன்கொடைகளை வழங்குமாறு கோருகின்றனர்.  கலாநிதி எதிர்வீரசிங்கம் யாழ்ப்பாணத்தின் ஒரு சிறிய

கிராமத்திலிருந்து உலக அரங்கிற்கு அவர் மேற்கொண்ட பயணமும், உலகில் அவர் ஏற்படுத்திய ஆழமான

தாக்கமும், அவரை அறியும் அல்லது அவரது செல்வாக்கை உணரும் பாக்கியம் பெற்ற அனைவராலும்

நினைவுகூரப்பட்டு போற்றப்படும்.


செயற்கை நுண்ணறிவுக் காலத்துக்கேற்ற பல்கலைக்கழகக் கல்வி:

காலாவதியான பழைய பட்டப்படிப்புகளை மறுசீரமைத்து புதிய கற்கைநெறிகளைச் சேர்க்க வேண்டிய அவசியம் ஒரு நாடு தனது பல்கலைக்கழகங்களை எவ்வாறு வடிவமைக்கி...