Monday, June 12, 2023

மலரும் புலத்து நினைவுகள் -09

----------------------------------
எனது காலத்தில் யாழ் பல்கலைக்கழகத்தின் பிரசன்னத்தில் நடந்த விவகாரங்களில் பொபி-தாஸ் மோதலும் அதன் பின்பான டெலோவின் அழிப்பும் நினைவு கூரத்தக்கன. 1986 இன் முதற்பாதியில் நடந்த இச்சகோதர படுகொலைகள் பல எமது கண்கள் முன்பாகவே நடந்தேறின. 
படம்: இடமிருந்து வலமாக. 1. சிறி சபாரத்தினம், 2. வே. பிரபாகரன் 3. வே. பாலகுமார் 4. K. பத்மனாபா


வடமராட்சியின் டெலோ பொறுப்பாளரான தாஸ் என்பவருக்கும் இன்னொரு தளபதியான பொபி என்பவருக்கும் இடையில் பலகாலம் நிலவி வந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக யாழ் போதனாவைத்தியசாலையில் உள்ள தேநீர்ச்சாலையில் ஒரு பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வைத்தியசாலையாகையால் ஒருவரும் ஆயுதத்துடன் வரமுடியாது என்பதால் இந்த ஏற்பாடு. தாஸ் குழு அங்கு நிராயுதபாணிகளாக வந்து இருந்தபோது, பொபி குழு வெளியில் இருந்து ஆயுதங்களுடன் உட்புகுந்து அவர்களை வேட்டையாடி கொன்றது. ஈழப்போராட்டத்தில் முதல் முறையாக ஒரு வைத்தியசாலையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் தாஸ், காளி மாத்திரமல்லாமல், வைத்தியத்திற்கு வந்திருந்த ஒரு நீதிபதி, ஒரு தாதி உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டு பெருமளவானோர் காயமடைந்தனர். இது நடந்தது மார்ச் 11, 1986. இது நடந்தபோது, வைத்தியசாலைக்கு அருகில் நான் நின்றிருந்தேன். தங்களின் அனுமதியில்லாமல் ஆலாலசுந்தரம், தர்மலிங்கம் ஆகியோரை தாஸ் கொலை செய்ததாகவும் பல கொள்ளைகளில் ஈடுபட்டதாகவும் அதனாலேயே அவர் கொல்லப்பட்டதாக டெலோ அறிக்கை விட்டது.
13ஆம் திகதி தாஸின் கொலைக்கு நீதி கேட்டு நூற்றுக்கணக்கான மக்கள் வந்து சிறி சபாரத்தினம் தங்கியிருந்த கல்வியங்காடு முகாமுக்கு ஊர்வலமாக செல்லும்போது முத்திரை சந்தியடியில் வைத்து துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டது. இதில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட பலர் காயமடைந்தனர். அந்நேரம் அருகில் EPRLF முகாமில் இருந்த டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இறந்த பொதுமக்களின் உடல்கள் பல்கலைக்கழகத்திற்கு கொண்டுவரப்பட்டு அஞ்சலிக்கு வைக்கப்பட்டு பொது மக்களுக்கும் டெலோவுக்கும் சமரசம் செய்யும் கூட்டமொன்றும் நடைபெற்றது. பொது மக்கள் தம்மீது கைக்குண்டு வீசியதால் தாங்கள் சுடவேண்டி வந்ததாக டெலோ தரப்பில் சொல்லப்பட்டது எம் எல்லோருக்கும் கோபத்தை வரவழைத்தது. அந்நேரம் 35 ஆயுத இயக்கங்கள் இருந்தாலும் பொது மக்களின் ஊர்வலம் ஒன்றின் மீது துப்பாக்கி சூடு நடாத்தியது இதுதான் முதல் முறை. இந்த சம்பவங்களால் EPRLF இயக்கத்தை சேர்ந்த சோதிலிங்கம் போன்றோர் மாணவர்களிடையில் செல்வாக்குப்பெற தொடங்கினர்.
டெலோவின் மீது மக்களின் வெறுப்பு உச்சமாக இருந்த வேளையில் ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி 1986 ஆம் ஆண்டு புலிகளால் அவர்கள் மீது பெரும் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டது. மாத்தையாவின் குழு வன்னியிலிருந்து கொண்டுவரப்பட்டு இத்தாக்குதல்கள் நடாத்தப்பட்டதாக சொல்லப்பட்டது . எங்கிருந்து கொண்டு வந்தார்களோ தெரியாது, ஆனால் அவர்கள் ஒருவரையும் எமக்கு தெரியவில்லை.
29ஆம் திகதி காலை 7 மணி போல் திருநெல்வேலி சந்தையில் டெலோவினால் நடாத்தப்படும் சைக்கிள் பாதுகாப்பிற்கு நின்றிருந்த வெளி மாகாணத்தை சேர்ந்த 15 வயது மதிக்கப்பட்ட இரண்டு சிறுவர்கள் கைகள் கட்டப்பட்டு நடத்திச் செல்லப்பட்டதையும் பக்கத்தில் சிலர் பெட்ரோல் போத்தல்களுடன் பெரியதோரு டயர் ஒன்றை உருட்டி செல்வதையும் எனது அறையின் யன்னலூடாக பயத்துடன் பார்த்துக்கொண்டிருந்ததை தவிர வேறொன்றையும் செய்யமுடியவில்லை. ஆடியபாதம் வீதி-கலாசாலை வீதி சந்தியில் அம்மன் கோவிலுக்கு அருகில் உள்ள மதகில் அச்சிறுவர்களை இருத்தி சுட்டு கொலை செய்து அதிலேயே டயர் போட்டு எரித்தனர். மூன்று நாட்களாக எரிந்துகொண்டிருந்ததை பார்த்து அடைந்த அதிர்ச்சி இன்றும் எனக்கு இருக்கின்றது.
கல்வியங்காட்டில் சிறி சபாரத்தினம் தங்கியிருந்த பிரதேசத்தை தவிர மற்றையவிடங்களில் பெரும் சண்டை நடைபெறவில்லை. சில பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர் சிவத்தம்பி தலைமையில் சில சமரச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாயினும் ஒன்றும் பலனளிக்கவில்லை.
கிட்டு திருநெல்வேலி சந்தியில் பிக்கப் வாகனத்தில் இருந்து மக்களுக்கு உரையாற்றினார். கோவிலுக்கு பக்கத்தில் இக்கொலையை செய்ததை மக்கள் கண்டித்ததிற்கு, அவர்கள் விரைவில் சுவர்க்கம் செல்வார்கள் என்று கிட்டு சொன்னதை நான் கையை கட்டிக்கொண்டு பார்த்துக்கொண்டிருந்தேன்.

மே 5 ஆம் திகதி டெலோவின் தலைவர் சிறி சபாரத்தினமும் கோண்டாவிலில் வைத்து புலிகளால் கொல்லப்பட்டார்.

குமாரவேலு கணேசன்
03/06/2023

No comments:

Post a Comment

கலாநிதி நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்: விளையாட்டு, கல்வி, மனிதாபிமானத்தின் சிகரம்

கலாநிதி  நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்: விளையாட்டு, கல்வி, மனிதாபிமானத்தின் சிகரம் கலாநிதி குமாரவேலு கணேசன் (STEM-Kalvi) ஏப்ரல் 18, 2024 அன்று,...