Friday, June 16, 2023

யூதர்களின் வரலாறு-19

19 ஆம் நூற்றாண்டானது யூதர்களின் வரலாற்றில் ஒரு முக்கியமான காலகட்டமாகும். சியோனிச சித்தாந்தங்களின் தோற்றமும், ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் அரசியலில் பங்கெடுக்கும் முன்னேற்றமும், முதலாவது சியோனிச காங்கிரசின் தோற்றமும், நிலவங்கிகளின் உருவாக்கமும், இதைத்தொடர்ந்தான அலியா என்ற இஸ்ரேல் நோக்கிய பயணமும் வரலாற்றில் முக்கியமானவையாகும்.
19 ஆம் நூண்றாண்டின் ஆரம்பத்தில் பழமைவாத யூத மதம் தோற்றுவிக்கப்பட்டது. இம்மதப்பிரிவைப்பற்றி முன்னைய அத்தியாயம் “யூதர்களின் வரலாறு-16” இல் குறிப்பிட்டிருந்தேன்.
1830 களில் யூதர்களுக்கெதிரான இரண்டு இனக்கலவரங்கள் ஒட்டோமான் பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்த இஸ்ரேல் பிரதேசத்தில் வாழ்ந்த அரேபியர்களாலும், முஸ்லிம்களாலும் முன்னெடுக்கப்பட்டது. இதில் யூதர்கள் பலர் கொல்லப்பட்டும், ஆயிரக்கணக்கான சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டும், பெண்கள் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டும் உள்ளது பதிவாகியுள்ளது. இக்காலப்பகுதியில் இஸ்ரேலின் கலிலி பிரதேசத்தில் ஏற்பட்ட ஒரு மிகப்பெரிய பூகம்பமும் யூதர்களின் வாழ்வில் பெரிய பாதிப்பை ஏற்பட்டுத்தியது. இப்பூகம்பத்தில் 5000-6000 மக்கள் இறந்ததாக வரலாற்றுக்குறிப்புக்கள் சொல்கின்றன.
1960 ஆம் ஆண்டு யூத காங்கிரஸ் என்று அழைக்கப்படும் Alliance Israélite Universelle (AIU) என்னும் ஒரு அமைப்பை பாரிஸ் நகரில் நிறுவினார்கள். இது உலகெங்கிலும் உள்ள யூத சமூகங்களின் நல்வாழ்வு, கல்வி மற்றும் கலாச்சார பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. யூத அடையாளம், கல்வி மற்றும் சமூக ஒற்றுமையை வளர்ப்பதில் இவ்வமைப்பு ஒரு குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்ததுடன் உலகெங்கிலும் உள்ள யூத சமூகங்களில் மிகப்பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தியது.
13ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இங்கிலாந்தில் இருந்து சொத்துக்கள் பறிக்கப்பட்டு முழுமையாக வெளியேற்றப்பட்ட யூதர்கள் 19ம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை திரும்ப அனுமதிக்கப்படவில்லை. பல யூதர்கள் கிறிஸ்தவர்களாக மாறி வாழ்ந்துகொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் தான் பெஞ்சமின் டிஸ்ரேலி (Benjamin Disraeli). இவர் ஒரு யூத பெற்றோருக்கு 1804 இல் பிறந்து பின்பு ஞானஸ்தானம் பெற்று கிறிஸ்தவராக மாறி, 1874 –1880 வரை பிரித்தானியாவின் பிரதம மந்திரியாக உயர்வடைந்திருந்தார். இதே காலப்பகுதியில் பிரான்ஸ் உட்பட பல ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் பாராளுமன்றங்களுக்கு பல யூதர்கள் தெரிவுசெய்யப்பட்டனர். இது பல யூதர்களுக்கும் அவர்களின் தாயகம் நோக்கிய போராட்டதிற்கும் உத்வேகத்தைக் கொடுத்தது.
சியோனிசம் என்பது யூதர்களின் பூர்வீக நிலத்தில் யூத தாயகத்தை நிறுவுவதற்கும் பாதுகாப்பதற்குமாக உருவாக்கப்பட்ட ஒரு அரசியல் சித்தாந்த இயக்கமாகும். நவீன சியோனிசம் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது. சியோன் (Zion) என்பது யூதர்களின் பூர்வீக நிலத்திற்கான இன்னொரு பெயராகும். இவ்வியக்கத்தின் முக்கியமான அம்சமாக அலியா (aliya) என்ற தாயகம் நோக்கிய பயணம் முக்கியமானாது. அலியா என்றால் ஹீபுரு மொழியில் மேலே செல்லுதல் என்னும் அர்த்தம் ஆகும். நவீன சியோனிசத்தின் சிற்பி என்று அழைக்கப்படும் தியோடர் ஹெர்ஸால் (Theodor Herzl) என்பவரே 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் யூத மக்களை வழிநடத்தியோர்களில் முக்கியமானவராவார்.
1897 இல் சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் நடைபெற்ற முதல் சியோனிச காங்கிரஸ், யூதர்களின் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்க்கல்லாகும். இது பாலஸ்தீனத்தில் யூத தாயகத்தை நிறுவுவது குறித்து விவாதிக்கவும் ஊக்குவிக்கவும் பல்வேறு நாடுகளில் இருந்து யூத அமைப்புக்களை ஒன்று சேர்ப்பதற்குமாக தியோடர் ஹெர்ஸாலால் ஏற்பாடு செய்யப்பட்டது . இம்மாநாட்டில் பங்குபற்றிய பிரதிநிதிகளின் ஊடாக உலகெங்கிலும் உள்ள யூத சமூகங்களை ஒன்றிணைக்கவும் அணிதிரட்டவும், சியோனிச இலக்குகளை அடைவதற்குமான ஒரு விரிவான திட்டத்தை வகுக்கவும் இந்த மாநாடு பயன்பட்டது. முக்கியமாக நிலவங்கி என்றழைக்கப்படும் Jewish National Fund என்னும் நிதி நிறுவனத்திற்கான விதை இம்மாநாட்டிலேயே போடப்பட்டு நான்கு ஆண்டுகளிலேயே, 1901ஆம் ஆண்டில், இந்நிதி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டதும் அதன் பின்பு அவ்வங்கியினூடாக பாலஸ்தீன நிலங்களை வாங்கிக்குவித்ததும் வரலாறு. இந்நிதி நிறுவனம் இன்றும் அவுஸ்திரேலியா உட்பட பல நாடுகளில் இயங்குகின்றது.
 
படம்: The first Jewish National Congress - Basel, Switzerland.- 1897 
  
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒன்றுகூடல் எதிர்கால சியோனிச நடவடிக்கைகளுக்கு அடித்தளமாக அமைந்ததுடன் இறுதியில் 1948 இல் இஸ்ரேல் அரசை நிறுவுவதற்கான அடித்தளத்தை அமைத்தது.
19 ஆம் நூற்றாண்டின் யூதர்களின் சியோனிச சிந்தாந்தத்தை தமிழ் விடுதலை இயக்கங்களும் பின்பற்றி பலவற்றை செய்ய முயற்சித்தனராயினும் ஒற்றுமையின்மை என்ற ஒரு முக்கிய காரணத்தால் அவையெல்லாம் அடிபட்டுப்போயின. யூதர்கள் மதம் என்ற ஒரு விடயத்தை ஒற்றுமைக்கு உபயோகித்தனர் என்று கூறுவோரும் உள்ளனராயினும் அதே மதம் பாலஸ்தீனியர்களுக்கு உதவவில்லை என்பது கண்கூடு. இன்று உலகமெங்கும் தமிழர்களும் அரசியலில், பொருளாதாரத்தில், கல்வியில் கொடிகட்டிப்பறக்கின்றனர். முதல் சியோனிச காங்கிரஸ் நடைபெற்ற அதே பாசல் நகர் இன்று யூதர்கள் இல்லாமல் தமிழர்களால் நிறைந்துள்ளது.
—--------------------------------------------
யூத வினோதங்கள்
யூதர்கள் நீண்ட பயணங்களிற்கு முன்பாக சட்டைக் கொலர் அல்லது வேறோர் இடத்தில் சட்டை ஊசி ஒன்றை வெளியில் தெரியாத மாதிரி குத்திக்கொள்வார்களாம். உலோகம் தீய சக்திகளை வெற்றிகரமாக விரட்டும் ஒரு சக்திவாய்ந்த பாதுகாப்புப் பொருளாக அவர்களால் கருதப்படுகின்றது.
—----------------------------------------------




No comments:

Post a Comment

கலாநிதி நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்: விளையாட்டு, கல்வி, மனிதாபிமானத்தின் சிகரம்

கலாநிதி  நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்: விளையாட்டு, கல்வி, மனிதாபிமானத்தின் சிகரம் கலாநிதி குமாரவேலு கணேசன் (STEM-Kalvi) ஏப்ரல் 18, 2024 அன்று,...