Friday, June 9, 2023

யூதர்களின் வரலாறு- 13

---------------------------
புனித பூமியான ஜெருசலேத்தை கிட்டத்தட்ட 400 வருடங்களாக ஆட்சி செய்து கொண்டிருந்த முஸ்லிம்களிடம் இருந்து மீட்கவேண்டும் என்று விரும்பிய கிறிஸ்தவர்களின் தலைவரான பாப்பரசரின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்த ஐரோப்பிய கிறிஸ்தவ மக்களால் பொ.கா 1096 இல் ஆரம்பிக்கப்பட்டு மூன்று வருடங்களாக நடந்த சிலுவைப்போர் பொ.கா1099 இல் ஜெருசலேத்தை கைப்பற்றியவுடன் முடிவுக்கு வந்தது. அதன் பின்பாக ஜெருசலேம் பேரரசு ஸ்தாபிக்கப்பட்டு கிட்டத்தட்ட 200 வருடங்கள் வெற்றிகரமாக கிறிஸ்தவர்களின் ஆட்சி நடந்தது.
உண்மையில் கிறிஸ்தவ திருச்சபை யூதர்களின் மீதான தாக்குதல்களை பகிரங்கமாக ஆதரிக்கவில்லையாயினும் பல பாதிரிமார்களும், போரில் பங்கெடுத்த மத வாதிகளுமே யூதர்களின் கொலைகளுக்கு காரணம் என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். முதலாவது சிலுவைப்போர் ஆரம்பமாவதற்கு சிறிது காலத்துக்கு முன்பாகவே கிஸ்தவம் கிழக்கு மேற்காக பிளவுபட்டு மேற்கு பகுதி பாப்பரசரின் கீழான (Papal) கிறிஸ்தவமாகவும், கிழக்கு பகுதி மரபுவழி (Orthodox) கிறிஸ்தவமாகவும் தொடர்ந்தது. ஜெருசலேம் பேரரசும் மரபுவழி கத்தோலிக்கரின் ஆட்சியிலேயே தொடர்ந்து இருந்து வந்தது. இன்றும் கிறிஸ்து பிறந்ததாக கருதப்படும் பெத்தலஹேமில் உள்ள தேவாலயங்களில் கிறித்துமஸ் டிசம்பர் 25இல் அல்லாமல் ஜனவரி 7இல் தான் கொண்டாடப்படுகின்றது.
முதலாவது சிலுவைப்போரை தொடர்ந்து கிட்டத்தட்ட 200 வருடங்கள் கத்தோலிக்க திருச்சபையின் அனுசரணையுடன் அல்லது நெறிப்படுத்தலில் நடந்த மதம் சார்ந்த போர்களின் தொடர்களை சிலுவைப்போர்கள் என்று பொதுவாக அழைப்பர். இவற்றுள் பெரும்பாலானவை ஜெருசலேத்தை மையமாக வைத்து நடந்தவைகளாக உள்ளதால் யூதர்களுடன் மிகவும் தொடர்புபடுகின்றன. இந்த ஜெருசலேம் கிறிஸ்தவ பேரரசில் யூதர்களும் வாழ்ந்தார்களாயினும் அவர்களுக்கு எந்த உரிமையும் இருக்கவில்லை. அவர்கள் மன்னனின் சொத்தாகவே கருதப்பட்டார்கள். பொ.கா 1187 இல் சலாவுதீன் என்னும் எகிப்திய முஸ்லீம் மன்னன் படையெடுத்து வந்து ஜெருசலேத்தை கைப்பற்றியவுடன் யூதர்களை அழைத்து ஜெருசலேம் நகரில் குடியேற அனுமதித்ததுடன் அவர்களுக்கு பதவிகளும் கொடுத்தான். சலாவுதீன் ஜெருசலேத்தில் இருந்த கிறிஸ்தவ தேவாலயங்கள் எல்லாவற்றையும் குதிரை லாயமாக மாற்றியதுடன் அவற்றின் கோபுரங்களையும் இடித்தான் என்கின்ற செய்தி கேட்ட ஐரோப்பிய கிறிஸ்தவ மன்னர்கள் மூன்றாவது சிலுவைப்போரை பொ.கா 1189–1192 வரை நடாத்தி புனித நகரை மீட்டனர்.
இதே காலப்பகுதிகளில் இங்கிலாந்திலும் யூதர்களுக்கு எதிராக படுகொலைகள் நடந்ததாக வரலாற்று குறிப்புக்கள் சொல்கின்றன. மூன்றாம் சிலுவைப்போருக்கு புறப்பட்ட இங்கிலாந்து சிலுவை வீரர்கள் பல யூதர்களை மதம் மாற்ற முயற்சித்தபோது அவர்கள் குடும்பங்களாக கொலை-தற்கொலை செய்துகொண்டார்கள் என்றொரு குறிப்பும் பெருமளவானோர் வன்முறையில் கொல்லப்பட்டனர் என்று இன்னொமொரு குறிப்பும் குறிப்பிடுகின்றது.
ஏறக்குறைய 100 ஆண்டுகளின் பின்பாக பொ.கா 1290 இல் இங்கிலாந்தை ஆண்ட மன்னன் முலாவது எட்வார்ட் முழு இங்கிலாந்தில் இருந்தும் யூதர்களை வெளியேற்றும் கட்டளையொன்றை பிறப்பித்தான். இக்கட்டளை Edict of Expulsion என்று வரலாற்றில் இடம்பெறுகின்றது. உடுத்த உடுப்புடன் ஆயிரக்கணக்கான யூதர்கள் முழு இங்கிலாந்து பேரரசிலும் இருந்து வெளியேற்றப்பட்டனர். யூதர்கள் சட்டத்தால் பாதுகாக்கப்பட்டிருந்த போலந்து நாட்டுக்கு அவர்கள் அனைவரும் சென்று வாழ்ந்தனர். கிட்டத்தட்ட 350 வருடங்கள் இங்கிலாந்து பேரரசில் ஒரு யூதர் கூட இருக்கவில்லை என்பதும் 1655 ஆம் ஆண்டிலேயே இங்கிலாந்து பேரரசிற்குட்பட்ட பிரதேசங்களுக்கு யூதர்கள் திரும்புவதற்கு அனுமதியளிக்கபட்டது என்பதும் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.
யூத விநோதங்கள்
--------------------
யூதர்கள் தமது புனித நூலான தோராவை மிகவும் மரியாதையாக கையாள்வார்கள். தோராவை முன் மட்டை கீழே இருக்குமாறு கூட வைக்கமாட்டார்கள். புனித நூலை திறந்தபடி வைப்பதோ அல்லது வேறொரு புத்தகத்தை அதன் மேல் வைப்பதுகூட இறை நிந்தனையாக கருதப்படும். யூதர்கள் தமது புனித நூலை தவறுதலாக விழுத்தி விட்டாலோ அல்லது மிதித்து விட்டாலோ அப்புத்தகத்தை எடுத்து முத்தம் கொடுப்பார்கள்.
--------
படம்: தற்பொழுது பாலஸ்தீனத்தில் உள்ள பெத்தலஹேம் தேவாலயம் (Church of the Nativity- Bethlehem, Palastine) இல் காணப்படும் சிலுவைப் போர் வீரனின் சிலை.
**குமாரவேலு கணேசன் **
27.06.2021




No comments:

Post a Comment

கலாநிதி நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்: விளையாட்டு, கல்வி, மனிதாபிமானத்தின் சிகரம்

கலாநிதி  நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்: விளையாட்டு, கல்வி, மனிதாபிமானத்தின் சிகரம் கலாநிதி குமாரவேலு கணேசன் (STEM-Kalvi) ஏப்ரல் 18, 2024 அன்று,...