Friday, June 9, 2023

யூதர்களின் வரலாறு-12

-------------------------
கடந்த எனது பதிவுகளில் இருந்து சில வரலாற்று உண்மைகளையும், தோரா, பைபிள், குர் ஆன் ஆகியவற்றில் சொல்லப்படடவைகளையும் யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் ஜெருசலேம் ஏன் முக்கியத்துவமானது என்பதையும் பார்த்திருப்பீர்கள். நண்பர் ஒருவர் உட்பெட்டியில் ஒரு கேள்வி கேட்டிருக்கின்றார். அதற்கு அடுத்த பதிவில் பகிரங்கமாக எனது பதிலை எழுதுகின்றேன் என்று கூறியிருந்தேன். கேள்வி இது தான்.
“குர் ஆனின் படி முகம்மது நபி அவர்கள் விண்ணுலகம் சென்று திரும்பியதாக நம்பப்படும் ஆண்டு பொ.கா 621. முகமது நபி இறந்த ஆண்டு பொ.கா 632. ஆனால் இஸ்லாம் மதமானது மெக்கா, மெதீனாவுக்கு வெளியில் பரவியது முகமது நபியின் பின்பான கலீபாக்களின் காலத்திலேயே. அப்படியானால் எப்படி பொ.பி 621 இல் மெக்காவில் இருந்து 1500 கிமீ தூரத்தில் உள்ள ஜெருசலேத்தில் ஒரு பள்ளிவாசல் (அல் அக்ஸா) இருந்திருக்கும்?”
எனது பதில் கீழே.
“மிகத்தூரத்தில் உள்ள ஒரு பள்ளிவாயலில் இருந்து” (Al-Masjid al-Aqsa translates from Arabic into English as "the farthest mosque") என்றுதான் குர் ஆனில் சொல்லப்பட்டுள்ளது. முகமது நபியின் பின் வந்த உமர் ரலி அவர்கள் காலத்திலேயே ஜெருசலேம் வெற்றி கொள்ளப்பட்டதும் அவராலேயே இங்கு ஒரு சிறு பள்ளிவாயல் கட்டப்பட்டதும் பின்பு 70 வருடங்களின் பின்பு Al Aqsa பெரிதாக கட்டப்பட்டதாகவும் வரலாறு மேலும் கூறுகின்றது. மத நம்பிக்கைகளுக்கு விஞ்ஞான விளக்கம் கொடுக்க முயற்சிக்கக்கூடாதாகையால் இதை இவ்விடத்திலேயே விட்டுச்செல்கின்றேன்.
யூதர்களைப்பொறுத்தவரையில் கலீபாக்களின் காலம் ஒரு பொற்காலம் என்று சில வரலாற்றாசிரியர்கள் எழுதுகின்றனர். பொ.கா 7ம் நூற்றாண்டின் பின்பாக ஆட்சிசெய்த கலீபாக்களின் காலத்தில் உமர் உடன்படிக்கை என்று ஓன்று செய்யப்பட்டதாகவும் இவ்வுடன்படிக்கையின்படி, குர் ஆனில் சொல்லபப்ட்ட இனங்களான (People of the book) யூதர்கள், கிறிஸ்தவர்களுக்கு திம்மிகள் (Dhimmi) என்னும் பாதுகாப்பு வழங்கபட்டதாகவும் முஸ்லிம்களின் இராணுவத்தில் சேர்ந்து அவர்களுக்கு சார்பாக போரிட்டவர்களுக்கு சமவுரிமை வழங்கப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது.
பொ.கா 810 அளவில் பக்தாத்தை தலைநகராக கொண்டு ஆண்ட அப்பாஸிய கலீபாக்களின் காலத்தில் யூதர்கள் தம்மை அடையாளம் காட்ட மஞ்சள் நிறத்திலான பட்டிகள் அணியுமாறு பணிக்கப்பட்டனர். அதேபோல கிறிஸ்தவர்கள் நீல நிறத்திலான பட்டிகள் அணியுமாறு பணிக்கப்பட்டனர். இந்த நடைமுறையை பின்பாக பல நூற்றாண்டுகளுக்கு பின்பாக கிறிஸ்தவர்களின் ஆதிக்கத்தில் இருந்த ஐரோப்பிய நாடுகளும் கைக்கொள்வதை பார்க்கலாம். அதன் பின்பாக பொ.கா 850 இல் ஆண்ட அல் முத்தவாக்கில் என்ற அப்பாஸிய கலீபா இன்னும் ஒரு படி மேலே சென்று யூதர்களும் கிறிஸ்தவர்களும் முஸ்லிம்கள் போல உடை அணிவதற்கு தடை விதித்ததுடன் அவர்களின் வணக்கஸ்தலங்களையும் அழிக்குமாறு உத்தரவிட்டதுடன் அவர்கள் அரசாங்க வேலைகள் செய்யமுடியாது என்றும் பிரகடனப்படுத்தினார். 8 ம் நூற்றாண்டளவில் ஸ்பெயினையும் இஸ்லாமிய கலீபாக்கள் கைப்பற்றி ஆண்டனர் என்பதும் அக்காலத்தில் அங்கு வாழ்ந்த யூதர்களும், கிறிஸ்தவர்களும் பெரிதும் அடக்குமுறைக்குட்படுத்தப்பட்டு மதமாற்றம் செய்யப்பட்டனர் என்றும் வரலாறு கூறுகின்றது. இப்படியாக சில கலீபாக்கள் யூதர்களுக்கு வில்லன்களாக இருந்தாலும் ஒப்பீட்டளவில் கலீபாக்களின் காலத்தில் யூதர்களின் உயிர்களுக்கு பெரும் அச்சுறுத்தல் இருக்கவில்லையென்றே சொல்லப்படுகின்றது. அதற்கு “People of the Book” என்று அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு கொடுக்கபப்ட்டதே காரணம் என்று தெரிகின்றது.
இப்பொழுது ஐரோப்பா பக்கம் எமது கவனத்தை திருப்புவோம். 11ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இஸ்லாம் கிழக்கே ஆப்கானிஸ்தானில் இருந்து மேற்கு ஆப்பிரிக்கா வரை பரவிஇருந்தது. இக்காலப்பகுதியில் துருக்கியை ஆண்ட இஸ்லாமிய மன்னரின் ஆதிக்கத்தில் ஜெருசலேம் வந்துவிட்டதால் காலாகாலமாக ஜெருசலேத்திற்கு யாத்திரை செல்லும் கிறிஸ்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட, ரோமை மையமாக கொண்டு இயங்கிய கிறிஸ்தவ திருச்சபையின் தலைவரான பாப்பாண்டவர் (Pope Urban II) பொ.பி 1095 இல் சிலுவைப்போருக்கான பிரச்சாரத்தை முதன்முதலில் முன்னெடுத்தார் என்கின்றனர். இந்த சிலுவைப்போரில் பங்கேற்பவர்களுக்கு அவர்கள் இதுவரை செய்த பாவங்களுக்கெல்லாம் பாவமன்னிப்பு (Absolution) கிடைக்கும் என்று அவர் உறுதியளித்தார். உடனடியாகவே பிரான்சில் இருந்து பீற்றர் ஹெர்மிற் (Peter the Hermit) என்னும் ஒரு பாதிரியார் இதற்கு தலைமையேற்க முன்வந்ததுடன் வறுமையில் வாடிய பெண்கள், குழந்தைகள் உட்பட ஒரு இலட்சம் மக்களை திரட்டி மக்களின் சிலுவை போர் (People's Crusade) என்று ஒன்றை ஏப்ரல் 1096இல் ஆரம்பித்தார். இந்தப்படை ஐரோப்பாவில் இருந்து கிளம்பும்போது வழியில் கண்ட யூதர்களை எல்லாம் படுகொலை செய்து கொண்டு சென்றது. இதில் முக்கியமானது ஜெர்மனியில் நடந்த ரைன்லேண்ட் படுகொலையாகும் (Rhineland massacres). இந்த படுகொலையை “இனப்படுகொலை (Pogrom)” என்று பல வரலாற்றாசிரியர்கள் சொல்கின்றனர். நாம் ஏன் ஆயிரக்கணக்கான மைல்கள் கஷ்டப்பட்டு சென்று எமது சமயத்தின் எதிரிகளான (non-believers) முஸ்லிம்களுடன் சண்டையிடவேண்டும் என்று தர்க்கித்த சிலுவைப்படை வீரர்கள், எமக்கு பக்கத்திலேயே எமது ஜேசுவின் கொலைக்கு காரணமான யூதர்கள் உள்ளார்களே, அவர்களை கொல்வோம் என்று யூதர்களின் மீது வன்முறையை ஏவினார்கள் என்று சொல்லப்படுகின்றது. அக்காலப்பகுதியில் ஜேசு கிறிஸ்துவின் கொலைக்கு காரணம் யூதர்கள் தான் என்று திருச்சபை பிரசாரம் செய்துவந்தது. 15ம் நூற்றாண்டுவரை கிறிஸ்தவர்கள் வட்டிக்கு பணம் கொடுப்பது திருச்சபையால் தடுக்கப்பட்டிருந்ததால், ஐரோப்பாவில் யூதர்கள் மாத்திரமே வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து செல்வந்தர்களாகவிருந்தார்கள். அவர்களிடம் கடன் பெற்றவர்களும், அவர்களின் சொத்துக்களை சூறையாட விரும்பியவர்களும், சிலுவைப்போருக்கு பணம் சேர்க்க விரும்பியவர்களும் இந்த இனப்படுகொலைக்கு முக்கியமான காரணகர்த்தாக்கள் என்று வரலாற்றாசிரியர்கள் சொல்கினறனர். பல யூதர்கள் பிஷப்களிடமும் கிறிஸ்தவ தேவாலயங்களிலும் அடைக்கலம் தேடினாலும் அவர்களும் கொல்லப்பட்டு பலர் தற்கொலை செய்தார்கள் என்றும் ஏறக்குறைய 5000 யூதர்கள் இந்த ரைன்லேண்ட் படுகொலை சம்பவத்தில் கொல்லப்பட்டதாகவும் வரலாற்றுக்குறிப்புக்கள் சொல்கின்றன. இந்த சிலுவைப்போர் வீரர்கள் ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் இருந்து நான்கு பெரும் பிரிவாக துருக்கியை சென்றடைந்து பின் அங்கிருந்து ஜெருசலேத்திற்கு சென்று அங்கிருந்த முஸ்லீம் படைகளையும் மக்களையும் ஒன்றுவிடாமல் வெட்டிச்சாய்த்து ஆறு மாதங்களில் முதலாவது சிலுவைப்போர் வெற்றிபெற்றது. இந்த வெற்றி எவ்வளவு நாளைக்கு நீடித்தது என்று அடுத்த பகுதியில் பார்ப்போம்.
யூத வினோதங்கள்
------------------
யூத திருமணங்களின் இறுதியில் கண்ணாடிப்பாத்திரம் ஒன்றை போட்டு உடைப்பது ஒரு சம்பிரதாயம். வேறு இடங்களிலும் யாராவது தவறுதலாக கிளாஸை போட்டு உடைந்துவிட்டாலும் “mazel tov!” (“Congratulations!”) என்று வாழ்த்துவார்களாம் !
படம்: சிலுவைப்படையை பிரான்சில் இருந்து நடாத்திச்சென்ற பீற்றர் த ஹெர்மிட் என்னும் பாதிரியார் சிலுவைப்படை வீரர்களுடன்- (Avignon, 14th century)
குமாரவேலு கணேசன்

22.06.2021


No comments:

Post a Comment

கலாநிதி நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்: விளையாட்டு, கல்வி, மனிதாபிமானத்தின் சிகரம்

கலாநிதி  நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்: விளையாட்டு, கல்வி, மனிதாபிமானத்தின் சிகரம் கலாநிதி குமாரவேலு கணேசன் (STEM-Kalvi) ஏப்ரல் 18, 2024 அன்று,...