Friday, June 9, 2023

யூதர்களின் வரலாறு- 11

--------------------------
ரோமர்களின் அடக்குமுறைகளில் இருந்து தப்பி ஓடிய யூதர்கள் உலகமெங்கும் பரந்து வாழத் தொடங்கி விட்டாலும் பெரும்பாலானவர்கள் மத்திய கிழக்கிலும் ஐரோப்பாவிலுமே வாழ்ந்து வந்தனர். இனி யூதர்களின் வரலாற்றை கிறிஸ்தவ ஆதிக்கத்தில் இருந்த ஐரோப்பாவிலும் இஸ்லாமியர்கள் ஆதிக்கத்தின் கீழ் வரவிருக்கும் மத்திய கிழக்கிலும் தனித்தனியாக பார்க்கவேண்டியிருக்கும். யூதர்கள் இரண்டு பக்கமும் அடி வாங்கும் மத்தளமானார்கள்.
அரேபியர்கள் பல நூற்றாண்டுகளாக பேகன் (Pagan) என்னும் மதத்தை பின்பற்றி சிறு தெய்வ வழிபாடுகளை(Polytheism) மேற்கொண்டு வந்தனர். குறைஷிகள் என்று அழைக்கபப்ட்ட அவர்கள் பிரதானமாக வழிபட்ட 360 சிறுதெய்வங்களின் சிலைகள் அரேபிய பகுதிகளில் அகழ்வாராய்ச்சியின் பொது கண்டெடுக்கப்பட்டு ரோமில் உள்ள அருங்காட்சியகத்தில் (National Museum of Oriental Art, Rome) வைக்கப்பட்டுள்ளது. இந்த சிறுதெய்வ வழிபாட்டு முறை ஆபிரகாமிய வழித்தோன்றல்களான அரேபியர்களுக்கு பொருத்தமில்லாதது என்று கருதி பொ.கா 570 தொடக்கம் பொ.கா632 வரை வாழ்ந்த முகம்மது நபி என்பவர் உருவாக்கியதே இஸ்லாம் மதம் ஆகும்.
கிமு, கிபி என்பதை இனி பொ.மு (பொது காலத்துக்கு முந்தியது BCE , பொ.கா (பொது காலம் CE) என்று அழைப்போம். மதச்சார்பின்மையை பேசுபவர்கள் இதையே தற்பொழுது உபயோகிக்கின்றனர். பொருளளவில் இரண்டுமே ஒன்றுதான் என்பதை ஞாபகம் வைத்திருந்தால் சரி.
இஸ்லாமியர்கள் முகமது நபிகளை இறுதியான இறைதூதர் என்றும், எழுதப்படிக்க தெரியாத முஹம்மது நபிக்கு அவரின் 40 வயதில் இறைவன் வாய்மூலம் அருளிய வாக்குகள் தான் குர்ஆன் என்றும் இஸ்லாமியர்கள் நம்புகின்றனர். அதற்கு முன்பான இறை தூதர்களாக யூதர்களின் தோராவிலும், கிறிஸ்தவர்களின் பைபிளிலும் சொல்லப்பட்ட ஆதாம், ஏவாள், ஆபிரகாம் (இப்ராஹிம்), மோசஸ் (மூஸா), இயேசு (ஈஸா) ஆகியவர்களையும் இஸ்லாமியர்கள் அடையாளம் காண்கின்றனர்.
இஸ்லாம் மதத்திற்கும் யூத மதத்திற்கும் பெரிதும் ஒற்றுமைகளை காணலாம். இஸ்லாத்தில் சொல்லப்படும் ஹலால் உணவு முறைக்கும் யூதர்களின் கோஷர் உணவு வழக்கத்திற்கும் உள்ள ஒற்றுமையை முன்னைய அத்தியாயம் ஒன்றில் எழுதியுளேன்.
எப்படி இயேசு கிறிஸ்துவை யூதர்கள் ஏற்றுக்கொள்ளவில்லையோ அதே போல முகமது நபியையும் மெக்காவில் வாழ்ந்து வந்த குறைஷிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் முகமது நபி மெக்காவில் இருந்து 450கிமீ தூரத்தில் உள்ள மெதீனா என்னும் நகருக்கு இடம்பெயர்ந்து தனது சீடர்களுடன் வாழ்ந்து வருகின்ற காலத்திலேயே இஸ்லாம் மதம் தோற்றம்பெறுகின்றது. அக்காலத்தில் பெருமளவான யூதர்களும் மதீனாவில் வாழ்ந்து வந்ததால் முகமது நபியின் குழுவுக்கும் யூதர்களுக்கும் ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கை செய்யப்பட்டு மெக்காவில் ஆட்சி செய்யும் குறைஷிகளுக்கு எதிராக செயற்பட்டு வந்தனர். ஒரு முறை அந்த உடன்படிக்கையை யூதர்கள் மீறியதால் அங்கிருந்த யூத இனக்குழுவொன்றின் ஆண்கள் முழுப்பேரையும் முகமது நபியை தலைமையாக கொண்ட முஸ்லிம்கள் சிரச்சேதம் செய்தனர் என்றும் பெண்கள் முழுப்பேரும் போர்க்கைதிகளாக பிடிக்கபப்ட்டனர் என்றும் வரலாறு கூறுகின்றது. இதன் பின்னர் பானு குறைஷியா என்ற யூத இனக்குழு முற்றாக அழிந்துபோனது என்று வரலாற்றாசிரியர்கள் எழுதுகின்றனர்.
முகமது நபி அவர்கள் ஒரு செல்வந்த விதவையான, தன்னை விட 15 வயது மூத்தவரான கதீஜா அம்மையாரை தனது 25 வயதில் திருமணம் செய்து அவருடனேயே 25 வருடங்கள் வாழ்ந்தார் என்றும், கதீஜா அம்மையாரின் இறப்புக்கு பின்பு ஒன்றன்பின் ஒன்றாக 12 பெண்களை முகமது நபி அவர்கள் திருமணம் செய்தார்கள் என்றும் வரலாறு மேலும் கூறுகின்றது. இதுவரை எழுதியது வரலாற்றாசிரியர்களால் எழுதப்பட்டு பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட குறிப்புக்களை அடிப்படையாக கொண்டது. இனி எழுதப்போவது குர்ஆனில் சொல்லப்பட்டவை. அவற்றை நம்புவதும் விடுவதும் உங்களைப்பொறுத்தது. யூதர்களின் வரலாற்றை எழுதும்போது இவற்றை தவிர்க்க முடியாதாகையினால் அவற்றையும் சுருக்கமாக தொட்டுச்செல்கின்றேன்.
ஒரு இறைதூதர் என்றால் அவர் சில அற்புதங்கள் செய்திருக்க வேண்டுமல்லவா? யூதர்களோடும் ஜெருசலேதோடும் மிகவும் தொடர்புடையதும், குர்ஆனில் சொல்லப்பட்டதுமான ஒரு அற்புதத்தை இங்கு எழுதலாம் என்று நினைக்கின்றேன்.
இஸ்ரா- மிஃராஜ் பயணம் (Isra and Mi'raj) என்பது இசுலாமிய நம்பிக்கையின்படி பொ.கா 621 இல் முகம்மது நபியால் ஒரே இரவில் நிகழ்த்திய இரவுப் பயண அற்புதம் ஆகும். முகம்மது நபி அவர்கள் அரேபிய பாலைவனத்தின் மக்கா நகரிலிருந்து ஜெருசலேம் நகரில் உள்ள குன்றின் மேல் அமைந்துள்ள அல் அக்சா பள்ளிவாசலுக்கு இரவோடு இரவாக வானவர் ஜிப்ரயீல் மூலம் புராக் என்னும் சிறகுடன் கூடிய குதிரை போன்ற ஒரு வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்ட நிகழ்ச்சி இஸ்ரா (இரவில் கூட்டிச் செல்லுதல்) என்று சொல்லப்படும். பின்னர் அல் அக்சா பள்ளிவாசலில் இருந்து விண்ணுலகத்திற்கு அழைத்துச் சென்று திரும்பிய நிகழ்ச்சி மிஃராஜ் என்று அழைக்கப்படுகின்றது. விண்ணுலகம் சென்ற முகம்மது நபி இறைவனைச் சந்தித்துப் பேசினார் என்பது இசுலாமிய நம்பிக்கை ஆகும். விண்ணுலகத்திற்கு ஏற்கனவே சென்றுவிட்ட இறைதூதர்களான இப்ராஹிம், மூஸா, ஈஷா (ஆபிரஹாம், மோசஸ், யேசு) ஆகியோரையும் சந்தித்து அவர்களின் செய்தியுடன் மீண்டும் புராக் வாகனத்தில் ஜெருசலேமில் உள்ள அல் அக்ஸா பள்ளிவாசலில் வந்திறங்கினார் என்று மேலும் சொல்லப்பட்டுள்ளது. இந்தப்பயணத்தில் தான் இஸ்லாமியர்கள் ஒரு நாளைக்கு 50 தடவைகள் தொழவேண்டும் என்ற கட்டளை அல்லாவால் பிறப்பிக்கப்பட்டதாம். அது பின்பு 5 ஆக குறைக்கப்பட்டது வேறு விடயம்.
இந்த அற்புதம் காரணமாகவே யூதர்களின் சொலமன் கோவிலின் இடிபாடுகளில் மேல் கட்டப்பட்டுள்ள இந்த அல் அக்ஸா பள்ளிவாசல் முஸ்லிம்களின் மூன்றாவது புனிதமான பள்ளிவாசலாகக் கருதப்படுகிறது மாத்திரமல்லாமல் அது அமைந்துள்ள ஜெருசலேம் நகரையும் விட்டுக்கொடுக்காமல் உள்ளனர்.
முகமது நபி தனது வாழ்வின் இறுதிக்காலத்தில் கிட்டத்தட்ட 10 வருடங்கள் இஸ்லாமியர்களின் தலைவராக மதீனாவையும் பின்பு மெக்காவையும் ஆட்சி செய்கின்றார். இக்காலப்பகுதியில் பல போர்களை வென்றார் என்றும் அவற்றுள் பல போர்கள் அரேபிய இனக்குழுக்களுக்கெதிரானவையே என்றும் கூறப்படுகின்றது. பொ.பி 628 இல் முகம்மது நபி தலைமையிலான படைகள் கைபர்(Khaybar)என்னும் பாலைவனப் பசும்சோலைப் பிரதேசத்தில் (Oasis) விவசாயம் செய்து செல்வச் செழிப்போடு வாழ்ந்து வந்த யூதர்கள் மீது போரிட்டு நூறுக்கும் மேற்பட்ட யூதர்களை கொன்றார்கள் என்றும் அவர்களின் விளை பொருட்களின் 50% ஐ கப்பமாக அவர்கள் கொடுக்க ஒப்புக்கொண்ட பின்பாகவே அவர்களை தொடர்ந்து அங்கு விவசாயம் செய்து வாழ அனுமதித்ததாக ஒரு சரித்திரக்குறிப்பு கூறுகின்றது. இந்த யூதர்கள் ரோமர்களுடனான சண்டைகளின் விளைவாக ஓடித்தப்பி அகதிகளாக வந்து இங்கு வாழ்ந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பொ.கா 630 இல் மெக்கா நகரையும் கைப்பற்றியதுடன் குறைஷிகளுடனான முகமது நபியின் சண்டைகள் முடிவுக்கு வருகின்றது.
முகமது நபியின் பின்பாக இஸ்லாத்தின் தலைவர்களாக வருபவர்கள் கலீபாக்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள். முகமது நபியின் இறப்புக்கு பின்பாக கலீபாவாக அபுபக்கர் நியமிக்கபப்டுகின்றார். அவரின் பின்பாக உமர், உதுமான், அலி ஆகியோர் கலீபாக்களாக ஆட்சி செலுத்துகின்றனர். இந்த கலீபாக்களின் காலத்தில் பாரசீகம் மற்றும் ரோமர்களால் ஆளப்பட்டு கிறிஸ்வ மதம் நன்றாக வளர்ந்து விட்டிருந்த கிழக்கு ரோம சாம்ராஜ்யம் அல்லது பாசன்டைன் சாம்ராஜ்யங்களில் இஸ்லாம் வேகமாக பரவி யூதர்களுக்கு மேலும் நெருக்கடியை கொடுக்கின்றது. மிகுதியை அடுத்த பகுதியில் பார்ப்போம்.
படம்: Al Aqsa Mosque (source- wikipedia)
குமாரவேலு கணேசன்
18.06.2021


No comments:

Post a Comment

கலாநிதி நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்: விளையாட்டு, கல்வி, மனிதாபிமானத்தின் சிகரம்

கலாநிதி  நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்: விளையாட்டு, கல்வி, மனிதாபிமானத்தின் சிகரம் கலாநிதி குமாரவேலு கணேசன் (STEM-Kalvi) ஏப்ரல் 18, 2024 அன்று,...