Friday, June 9, 2023



யூதர்களின் வரலாறு 10.2

-------------------------------
யூத-ரோம பெரும் புரட்சிகள் தோல்வியில் முடிந்து யூதர்கள் அவர்களின் பாரம்பரிய பிரதேசமான யூதேயாவையும் ஜெருசலேத்தையும் விட்டு விரட்டப்பட்டதுமல்லாமல் ஜெருசலேத்துக்கு சென்று தமது வணக்கஸ்தலமான சொலமன் கோவிலையும் வணங்குவதற்கு ரோமர்கள் தடை விதித்திருந்தனர். அத்தோடு ஜெருசலேம் உள்ளிட்ட யூதேயா மாகாணத்துக்கு பாலஸ்தீனா என்றும் பெயர் மாற்றியும்விட்டனர் என்பதை முன்பு பார்த்தோம்.
அதன் பின்பு இரண்டு நூற்றாண்டுகள் வட பகுதியான கலிலியை மையமாக வைத்து வாழ்ந்து வந்த யூதர்கள் கிபி 350 அளவில் மீண்டும் ரோம பேரரசின் ஆட்சிக்கு எதிராக ஒரு புரட்சியை செய்தார்கள். அப்போதைய ரோம சக்கரவர்த்தி கொன்ஸ்டான்டியஸ் கலியஸ் தலைமையில் யூதர்களின் கலிலி பிரதேச முக்கியமான நகரமான செப்போரிஸ் (Sepphoris) முற்றாக அழிக்கப்பட்டு இப்புரட்சி ஒடுக்கப்பட்டது. இந்நகரத்தின் அழிபாடுகளை ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் கண்டுபிடித்துள்ளனர்.
ரோமை மையமாக வைத்து அவர்கள் ஆட்சி செய்ததால் இதை உரோம சாம்ராஜ்ஜியம் என்று அழைத்தாலும் கிபி 2ம் நூற்றாண்டில் அவர்கள் வடக்கு ஆப்பிரிக்கா, மேற்கு அரேபியா, பிரித்தானியா உட்பட மத்தியதரை கடலை சூழவுள்ள பெரும்பாலான நாடுகளை இணைத்து ஆட்சி செய்தனர். கிபி 361இல் ரோம சாம்ராச்சியத்திற்கு ஒரு தத்துவவியலாளனும் எழுத்தாளனுமான கிரேக்கத்தை சேர்ந்த ஜூலியன் என்பவன் சக்கரவர்த்தியாகியவுடன் காட்சிகள் மாறுகின்றன. ஜூலியன் கிறிஸ்தவத்தை நிராகரித்ததுடன் ரோம சாம்ராஜ்யத்தின் ஆரம்ப காலம் போல மதச்சார்பின்மையை கையிலெடுத்ததுடன், எல்லா மதமும் சமன் என்று அறிவித்து கிறிஸ்தவ மதபோதகர்களின் வயிற்றில் புளியை கரைத்தான். அதுமாத்திரமல்லாமல் இரண்டுதரம் இடிக்கப்பட்ட யூதர்களின் பிரதான வணக்கஸ்தலமான சாலமன் கோவிலை மீண்டும் கட்டுவதற்கு ஆணை பிறப்பித்தான். ஆம், மூன்றாம் கோவில் கட்டுவதற்கு தேவையான சகல ஆணைகளையும் பிறப்பித்தான். இதன் நோக்கம் யூதர்களுக்கு ஆதரவளிப்பது என்பதிலும் பார்க்க கிறிஸ்தவத்தின் ஆதிக்கத்தை குறைப்பதே நோக்கமானது என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். பாரசீக படையெடுப்பொன்றில் கிபி 365 இன் இறந்துபோன இந்த சக்கரவர்தியுடன் 3ம் கோவில் கட்டும் முயற்சியும் தடைப்பட்டுவிட்டது. அதற்கு இக்காலப்பகுதியில் இடம்பெற்ற ஒரு பாரிய பூகம்பமும் காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இக்காலப்பகுதியில் ரோம சாம்ராஜ்யம் இரண்டாக பிரிந்து கிழக்கு பகுதி பாசாந்தின் சாம்ராஜ்யம் (Byzantine Empire) என்று அதன் தலைநகரம் துருக்கியின் கொன்ஸ்டாண்டிநோபிள் நகருக்கு இடம்பெயர்கின்றது.
கிபி 438 இல் பசாந்தின் சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவத்தினியாக முடிசூடும் யுடோஸியா யூதர்களுக்கு ஜெருசலேத்தில் தமது இடிக்கபப்ட்ட கோவில் பகுதியில் இருந்துவந்த தொழுவதற்கான தடையை அகற்றி வரலாற்றிலும் யூதர்களின் மனதிலும் இடம் பிடித்தாள் என்று தெரியவருகின்றது.
அதன் பின்பான காலத்தில் பசாந்தின் சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சியும் 7ம் நூற்றாண்டில் இஸ்லாமின் தோற்றமும் அரேபியர்களின் எழுச்சியும் எப்படி யூதர்களை பாதித்தது என்று இனிப் பார்ப்போம். இப்ராஹிம்- ஆகார் தம்பதிகளின் மகன் இஸ்மாயிலின் வாரிசுகள் சிறுதெய்வ வழிபாடுகள் செய்து அரேபியர் என்ற பெயரில் அரேபியாவில் இதுவரை வாழ்ந்து வந்தனர். யார் இந்த இப்ராஹிம்? யூதர்களின் தோராவிலும், கிறிஸ்த்தவர்களின் பைபிளிலும் சொல்லப்பட்ட அதே ஆபிரகாம் தான் குர்ரானில் இப்ராஹிம் என்று சொல்லப்படுகின்றது. முகமது நபி என்னும் இறைதூதரின் வருகையையும் அவரின் பின்னான இஸ்லாத்தின் தோற்றத்தையும் அடுத்த பகுதியில் பார்ப்போம்.
யூத விநோதங்கள்
--------------------
அநேகமான எல்லா மதத்தவர்களும் கல்லறைகளுக்கு விஜயம் செய்யும்போது பூக்கொத்து வாங்கிச்சென்று வைத்து வழிபடுவார்கள். ஆனால் யூதர்கள்?
யூதர்கள் கல்லறைகளுக்கு தமது அன்புக்குரியவரை பார்த்து மரியாதை செலுத்த செல்லும்போது ஒரு கல்லை கொண்டுசென்று வைப்பார்கள். ஒருவேளை பூ வாடிவிடும், கல்லு வாடாது என்பதாலோ!
படம்: கிபி 3ம் நூற்றாண்டில் ரோம சாம்ராஜ்யம்.
குமாரவேலு கணேசன்
14.06.2021

No comments:

Post a Comment

கலாநிதி நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்: விளையாட்டு, கல்வி, மனிதாபிமானத்தின் சிகரம்

கலாநிதி  நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்: விளையாட்டு, கல்வி, மனிதாபிமானத்தின் சிகரம் கலாநிதி குமாரவேலு கணேசன் (STEM-Kalvi) ஏப்ரல் 18, 2024 அன்று,...