Friday, June 9, 2023

யூதர்களின் வரலாறு-10.1
---------------------------
12-ஆண்டு காடுறை வாழ்க்கையும், ஒரு வருட தலைமறைவு வாழ்க்கையும் மேற்கொண்டு நாடு திரும்பும் பாண்டவர்களுக்கு அவர்களின் நாட்டை திரும்ப கொடுக்க மறுக்கின்றனர் கௌரவர்கள். ஆனால் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் திருதராட்டிரரிடம், பாண்டவர்களுக்கு ஐந்து ஊர்கள் கேட்டு பின்பு ஐந்து கிராமங்கள் கேட்டு இறுதியில் ஐந்து வீடுகளாவது வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். துரியோதனன் பாண்டவர்களுக்கு ஊசி முனை அளவு கூட இடம் அளிக்க முடியாது என ஆணவமாக பேசி, தூது வந்த கிருஷ்ணரை அவமதித்து அனுப்பி விட்டான். பின்னர் பாண்டவர்கள் கௌரவர்களுடன் போரிட்டு இழந்த நாட்டை மீட்பது என முடிவு செய்தார்கள். - இது மகாபாரதக்கதை
2000 ஆண்டுகளுக்கு முன்பாக தமது தமது பூர்வீக பிரதேசமான யூதேயாவில் இருந்து ரோமர்களால் விரட்டப்பட்ட யூதர்கள், அதன் பின்பாக பிரிட்டன் உட்பட பல ஐரோப்பிய நாடுகளிலும் இருந்தும் படிப்படியாக விரட்டப்பட்டு, இறுதியாக ஹிட்லரால் 5 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டு, 1936இல் பீல் (Peel) உடன்படிக்கையின் படி பாலஸ்தீனத்தின் ⅕ இற்கும் குறைவான பகுதியை யூதர்களுக்கான ஒரு தனி நாட்டுக்கு கொடுக்க ஒட்டுமொத்த அரபு நாடுகளும் மறுத்ததால் அதன் பின்பாக 1948 இல் சுதந்திர பிரகடனம் செய்து பின்பு அரபுநாடுகளுடன் போரிட்டு தமது நாட்டை அவர்கள் மீட்டதும் (தக்கவைத்தது) அதன் பின்பாக இன்றுவரை பல போர்களை சந்தித்ததும் வரலாறு.
பெரும்பாலான நாடுகளில் வாக்குரிமையே இல்லாமல் இருந்த யூதர்கள் தமக்கு அது கிடைத்தவுடன் 1848 இல் பிரான்சில் முதல் அரசியல் பிரதிநிதித்துவத்தை பெற்று படிப்படியாக பல நாடுகளிலும் அரசியலில் ஆர்வத்துடன் ஈடுபட்டு பெஞ்சமின் டிஸ்ரேலி (Benjamin Disraeli) என்னும் ஒரு யூதரை பிரித்தானியாவின் பிரதமரின் கதிரையில் அமர வைக்கும்வரை அவர்களின் அரசியல் சாணக்கியம் தொடர்ந்தது. ஆம் 1848 இல் பிரான்சில் அரசியல் பிரவேசம், 1948 இல் சரியாக 100 வருடம் கழித்து இஸ்ரேல் என்னும் தனிநாடு உருவாகின்றது. இக்காலப்பகுதியில் அவர்கள் எப்படியெல்லாம் தமது இனத்தவரை உலகமெல்லாம் இணைத்து வைத்திருந்தார்கள் என்றும், எப்படியெல்லாம் கல்வி, செல்வம் ஈட்டினார்கள் என்றும், பாலஸ்தீனத்தின் வளமான பகுதிகளை எப்படி அவர்களின் நிதி அமைப்புக்கள் 19ஆம் நூற்றாண்டில் இருந்தே காசுக்கு வாங்கி சேர்த்தார்கள் என்பதையும் எழுதவிருக்கின்றேன்.
முடிந்தவரை ஏற்றுக்கொள்ளப்பட்ட வரலாற்றுக் குறிப்புகளுடன் இந்த இரண்டாயிரம் வருட கால சரித்திரத்தை எழுதிக்கொண்டு வருகின்றேன்.
இக்காலப்பகுதியில் இஸ்லாமிய நாடுகளும் கலீபாக்களும் தான் யூதர்களிற்கு பெருமளவில் அடைக்கலம் கொடுத்தவர்கள் என்பதும் பெரும்பாலான கிறிஸ்தவ நாடுகள் அவர்களை வேட்டையாடின என்பதும் பலருக்கும் தெரியாத மறைக்கபப்ட்ட பக்கங்கள்.
நிறைய வாசிப்பு பழக்கம் உடைய எனது நண்பர்கள்களுக்கு இவை புதிதாகவிருக்காதென்பதால் இப்பதிவுகள் அவர்களுக்கானதல்ல என்றும் கூறிக்கொண்டு இந்த 10 வது அத்தியாயத்தை ஆரம்பிக்கின்றேன்.
நிச்சயமாக அவர்களின் மனித உரிமை மீறல்கள் பற்றியும் எழுதுவேன் என்றும் எனது எழுத்து ஒருபக்கச்சார்பானதாக இருக்காது என்றும் உறுதிகூறுகின்றேன்.
குமாரவேலு கணேசன்
12.06.2021


No comments:

Post a Comment

கலாநிதி நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்: விளையாட்டு, கல்வி, மனிதாபிமானத்தின் சிகரம்

கலாநிதி  நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்: விளையாட்டு, கல்வி, மனிதாபிமானத்தின் சிகரம் கலாநிதி குமாரவேலு கணேசன் (STEM-Kalvi) ஏப்ரல் 18, 2024 அன்று,...