Friday, June 9, 2023

யூதர்களின் வரலாறு-09

-------------------------
கடந்த பதிவுகளில் பெரும் கிளர்ச்சிகள் (The Great Revolts ), என அழைக்கப்படும் கி பி 66 தொடக்கம் கிபி 135 வரையான காலப்பகுதியில் நடந்த உரோம-யூத போர்களைப் பற்றியும், ஜெருசலேமில் அமைந்திருந்த யூதக் கோவில் சொலமன் கோவில் இடிக்கப்பட்டு யூதேயாவை மையமாக கொண்ட யூதர்களின் கலாசார, மத, வர்த்தக பிரதேசங்கள் முற்றாக உரோமர்களால் அழிக்கப்ட்டதையும் பார்த்தோம்.
கி.பி 135 இல் பார் கோக்பா கிளர்ச்சியை அடக்கியதைத் தொடர்ந்து ரோம பேரரசர் ஹட்ரியன் ரோமானிய மாகாணமான யூதேயாவுக்கு சிரியா பாலஸ்தீனா என்று பெயர் வைத்தார் என்று முன்பு பார்த்திருந்தோம். பாலஸ்தினா என்பது, பொதுவாக தற்போதைய இஸ்ரேல், மேற்குக் கரை, காசா பகுதி மற்றும் சில மேற்கு ஜோர்டானின் பகுதிகள் ஆகியவை அடங்கும். யூதேயாவையும் ஜெருசலேத்தையும் யூதர்கள் மறக்கவேண்டும் என்பதே இந்த பெயர் மாற்றத்திற்கான காரணம் என்று சொல்லப்படுகிறது.
இதற்கு பின்பாக யூதர்கள் இஸ்ரேலின் வடபகுதியில் அமைந்திருந்த கலிலி பிரதேசத்தை தமது மத, கலாச்சார, வர்த்தக மையமாக தேர்ந்தெடுத்து அமைதியாக ஏறக்குறைய இரண்டு நூற்றாண்டுகள் வாழ்ந்து வந்தனர். இக்காலப்பகுதியில் யூதர்கள் தமது கல்வியையும் பொருளாதாரத்தையும் தமது அழிந்துபோன இனத்தைப் பெருக்குவதிலுமே கவனம் செலுத்தினர் என்று வரலாற்றாசிரியர்கள் சொல்கின்றனர். இக்காலப்பகுதியில் வேகமாக வளர்ந்து வந்த கிறிஸ்தவ மதமும், இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைய யூதர்களே காரணமாக இருந்தார்கள் என்ற பழிச் சொல்லும் யூதர்களுக்கு மேலும் நெருக்கடிகளை கொடுத்துக் கொண்டிருந்தன.
கான்ஸ்டன்டைன் (I) என்னும் உரோம மன்னன் கிபி 306 –கிபி 337 வரை உரோம பேரரசை ஆண்டுவந்த காலத்தில் கிறிஸ்தவத்திற்கு பல முன்னுரிமைகள் வழங்கியதாக சொல்லப்படுகின்றது. கான்ஸ்டன்டைனின் தாய் ஹெலனா கிறிஸ்தவத்தை தழுவியதும், கான்ஸ்டன்டைனும் தனது பாகன் மதத்தை கைவிட்டு கிபி 312 இல் கிறிஸ்தவத்தை தழுவியதும் இதற்கு காரணமாக சொல்லப்படுகின்றது. இவர்தான் ரோம சாம்ராஜ்யத்தின் முதலாவது கிறிஸ்தவ சக்கரவர்த்தி ஆகும். இவராலேயே ஜெருசலேமில் இயேசு கிறிஸ்துவின் கல்லறை உள்ளதாக நம்பப்படும் இடத்தில் Church of the Holy Sepulchre தேவாலயம் கட்டப்பட்டது.
கான்ஸ்டன்டைன் யூதர்களுக்கு எதிராக பின்வரும் சில புதிய சட்டங்களை உருவாக்கினார் எனினும் அவை முன்பு இருந்தவைகள் போல் கடுமையானதாக இருக்கவில்லை. யூதர்கள் கிறிஸ்தவர்களை மதம் மாற்றுவதோ அல்லது கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய மற்ற யூதர்களைத் தாக்குவதோ சட்டவிரோதமானது என்று ஒரு சட்டம் இயற்றப்பட்டது. யூதர்கள் கிறிஸ்தவ அடிமைகளை வைத்திருப்பதற்கு தடை விதிக்கப்பட்டதுடன் தமது அடிமைகளை விருத்தசேதனம் (சுன்னத்து) செய்யவும் தடை விதிக்கப்பட்டது.
தற்பொழுது அடிமைகள் என்று ஒருவரும் இல்லாவிட்டாலும் ஸபத் காலத்தில் அத்தியாவசிய தேவைகளுக்கு முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையுமே யூதர்கள் நம்பியுள்ளதை நான் நேரடியாக பார்த்தேன். தற்பொழுது இஸ்ரேலில் 20% ஆனவர்கள் யூதர்கள் அல்லாதவர்கள் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாகவிருக்கலாம்.
கான்ஸ்டன்டைனிற்கு பிற்பாக கிபி 337 –கிபி 361இல் ரோம சக்கரவர்த்தியான அவரின் புத்திரனான கான்ஸ்டான்டியஸ் வெளியிட்ட யூத சம்பந்தப்பட்ட கட்டளைகள் மேலும் கடுமையானவை. யூதர்கள் வர்த்தகத்தில் கொடி கட்டிப்பறந்ததும், ரோமர்களின் வர்த்தகத்திற்கு கடும் போட்டியாக இருந்ததும் இவற்றுக்கு முக்கியமான ஒரு காரணம் என்று சொல்லப்படுகின்றது. அவற்றுள் சிலவற்றை கீழே தந்துள்ளேன்.
1.அரசாங்கத்திற்காக செய்த நெசவு வேலையை விட்டு யூதர்களிடம் வேலைக்கு சேர்ந்த பெண்கள் மீண்டும் அரச வேலையில் சேர்க்கப்பட வேண்டும்.
2.யூதர்கள் கிறிஸ்தவ பெண்களை திருமணம் செய்து கொள்ளக்கூடாது.
3.கிறிஸ்தவ பெண்களை மதம் மாற்ற யூதர்கள் முயற்சிக்கக்கூடாது.
4.ஒரு யூதரால் வாங்கப்பட்ட எந்த யூதரல்லாத அடிமையும் அரசால் பறிமுதல் செய்யப்படும்.
5.யூதரல்லாத ஒரு அடிமையை ஒரு யூதர் விருத்தசேதனம் (சுன்னத்) செய்ய முயன்றால், அடிமை விடுவிக்கப்பட்டு, யூதருக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.
6.ஒரு யூதருக்கு சொந்தமான எந்த கிறிஸ்தவ அடிமைகளும் அரசால் விடுவிக்கப்படுவார்கள்.
7.கிறித்துவத்திலிருந்து யூத மதத்திற்கு மாறியதாக நிரூபிக்கப்பட்ட ஒரு நபரின் சொத்துக்கள் அரசால் பறிமுதல் செய்யப்படும்.
கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகள் அமைதியாக இருந்த யூதர்கள் கிபி 351–352 காலத்தில் மீண்டும் ஒரு கிளர்ச்சியை பாலஸ்தீன பிரதேசத்தில் ஆரம்பித்தனர். அதைப்பற்றி அடுத்த பகுதியில் பார்க்கலாம்.
குமாரவேலு கணேசன்
8.06.2021
Photo: The Church of the Holy Sepulchre




No comments:

Post a Comment

கலாநிதி நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்: விளையாட்டு, கல்வி, மனிதாபிமானத்தின் சிகரம்

கலாநிதி  நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்: விளையாட்டு, கல்வி, மனிதாபிமானத்தின் சிகரம் கலாநிதி குமாரவேலு கணேசன் (STEM-Kalvi) ஏப்ரல் 18, 2024 அன்று,...