Friday, June 9, 2023

யூதர்களின் வரலாறு-08

-------------------------
யூதர்களுக்கும் உரோமானியர்களுக்கும் நடந்த முதலாவது போரின்போது யூத கோவிலான சொலமன் கோவில் (இரண்டாவது கோவில்) முற்றுகையிடப்பட்டிருந்த வேளை அதற்குள் அகப்பட்டிருந்தவர்களில் யோஹனன் பென் சக்காய் என்னும் ரபியும் ஒருவர். (Rabban Yohanan ben Zakkai). தங்களால் கோவிலை காப்பாற்ற முடியாது என்று கருதிய அவர் அவர்களின் புனித நூலான தல்மார்க்கை மேற்கோள்காட்டி ஒரு தந்திரோபாய சரணடைதலை செய்வதற்கு அக்கோயிலை வெறித்தனமாக காத்து நின்ற போராளி குழுக்களுக்கு அறிவுரை வழங்கினார். அதை அவர்கள் கோபமாக நிராகரித்ததால் தான் இறந்தவர் போல நடித்து ஒரு சவப்பெட்டியில் வெளியேறி அப்போதைய தளபதி வெஸ்பாசியனை சந்தித்து அவர் விரைவில் உரோமின் சக்கரவர்த்தியாக வருவார் என்று எதிர்வு கூறினார். விரைவிலேயே அவர் கூறியது பலித்ததால் அவரிடம் மூன்று வாக்குறுதிகளை இரந்து பெற்றார். இஸ்ரேலில் உள்ள யாப்னா (Jabneh / Yavne ) என்னும் நகரத்தையும் அதில் உள்ள அறிஞர்களையும் அழிக்காது தரும்படி கேட்டதே அவற்றுள் முக்கியமான ஓன்று. அதன் பின்பாக வெஸ்பாசியனின் மகன் டைட்டஸ் கோவிலை அழித்ததும், அதற்காக விருது பெற்றதும், Arch of Titus கட்டப்பட்டதும் வரலாறு.
ஏன் நாம் தொடர்ந்து உரோமானியர்களிடம் தோற்கின்றோம் என்று ஆராய்ந்த பென் சக்காய், உரோமானியர்களின் கல்வியும் பொருளாதார பலமுமே அதற்கு காரணம் என்ற முடிவுக்கு வந்தார். அடுத்த 50 வருடங்களுக்கு யூதர்களை எந்த விதமான கவனச்சிதறல்களும் இல்லாமல் கல்வி பொருளாதாரம் ஆகியவற்றில் மாத்திரம் முழு மூச்சுடன் முன்னேற வழிகாட்டிய அவரின் காலத்திலேயே பல யூத பள்ளிகள் திறக்கப்பட்டன என்று சொல்லப்படுகின்றது. ஆன்மீக கல்வி மாத்திரமல்லாமல் கைத்தொழில், விவசாயம் ஆகியவையும் கற்பிக்கப்பட்டது. யூதர்களின் இன்றைய கல்வி நிலைக்கு அன்று யோஹனன் பென் சக்காய் போட்ட அடித்தளமே காரணம் என்று சொல்வாரும் உள்ளனர்.
கி பி 115இல் மீண்டும் ஒரு போர் வெடித்தது. இம்முறை அது யூதேயா (தற்போதைய இஸ்ரேல்) பகுதியில் இல்லாமல் அதை சூழ உள்ள நாடுகளான சைப்பிரஸ், லிபியா, எகிப்து, சிரியா, ஈராக் (தற்போதைய பெயர்கள்) ஆகிய உரோமின் கட்டுப்பாட்டில் இருந்த நாடுகளில் இடம் பெயர்ந்து வாழ்ந்து வந்த யூதர்களுக்கும் உரோமானிய படைகளுக்கும் இடையில் நடந்தது. இம்முறை இஸ்ரேலில் இருந்த மக்களுக்கு என்ன வென்று தெரியாமலேயே புரட்சி செய்தவர்கள் அனைவரும் கொடுரமாக கொல்லப்பட்டு கிடோஸ் போர் (Kitos War) என்று அழைக்கப்படும் இரண்டாவது போரும் முடிவுக்கு வந்தது. இரண்டு வருடங்கள் நடந்த இப்போரில் இலட்சக்கணக்கான யூதர்களும் உரோமானிய படைவீரர்களும் கொல்லப்பட்டனர்.
மூன்றாவதாக கிபி 132–136 வரை நடந்த உரோம-யூத போரை சைமன் பார் கோக்பா (Simon Bar Kokhba) என்னும் தளபதி தலைமையேற்று நடத்தியதால் வரலாற்றில் இதை பார் கோக்பா புரட்சி என்று அழைப்பார்கள். யூதர்கள் இந்த கோக்பாவை ஒரு இறைதூதர் என்று கொண்டாடியதால் அக்காலப்பகுதியில் இயேசு கிறிஸ்துவை இறைதூதர் என்று கொண்டாடிவந்த கிறித்தவ யூதர்கள் இப்புரட்சியை ஆதரிக்கவில்லை.
இந்த போரில் 6 இலட்சம் யூதர்கள் கொல்லப்பட்டும் 50 நகரங்கள் தரைமட்டமாக்கப்பட்டதுடன் மேலும் 1000 கிராமங்களும் அழிக்கப்பட்டதாக வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். கி.பி 135 இல் பார் கோக்பா கிளர்ச்சியை அடக்கியதைத் தொடர்ந்து உரோம சக்கரவர்த்தி ஹட்ரியன் ரோமானிய மாகாணமான யூதேயாவுக்கு “சிரியா பாலஸ்தீனா” என்று பெயர் வைத்து யூதேயா என்ற பெயரை யூதர்களின் மனதில் இருந்து அகற்றும் முயற்சியிலும் ஈடுபட்டதாக வரலாறு மேலும் சொல்கின்றது. அது மாத்திரமல்லாமல் யூதர்களின் புனித நூலான தோராவை இடிக்கப்பட்ட சொலமன் கோவில் வளாகத்தில் வைத்தது எரித்து அந்த இடிபாடுகளின் மேல் ஜூபிட்டர் கடவுளுக்கு ஒரு கோவில் கட்டி அதில் தனது சிலையையும் வேறு பிரதிட்டை செய்தான். கைது செய்யப்பட யூதர்கள் ஹாட்ரியன் சந்தையில் ஒரு குதிரையின் விலையை விட குறைந்த விலைக்கு அடிமைகளாக விற்கப்பட்டனர். ஜெருசலேமை யூதர்களுக்கும், யூத கிறிஸ்தவர்களுக்கும் தடைசெய்யப்பட்ட பிரதேசமாக அறிவித்ததுடன் அது ஹட்ரியன் கிபி 138 இல் மரணிக்கும் வரை தொடர்ந்தது.
இப்போரில் அழிக்கப்பட்ட யூதேயா பிரதேசம் யூதர்களின் மத, கலாச்சார, அரசியல் மையமாக மீண்டும் வருவதற்கு ஏறக்குறைய 2000 வருடங்கள் எடுத்தது என்பது மிகப்பெரும் சோகம்.
---------------------
யூத விநோதங்கள்
யூதர்கள் ஜெபிக்கும்போது அல்லது தமது புனித நூல் தோராவை படிக்கும் போது தமது தலையை முன்னும் பின்னும் வெகமாக அசைத்தவாறே ஜெபிப்பார்கள். இம்முறையில் ஒருவரின் மன ஒருமைப்பாடும் பக்தி சிரத்தையும் அதிகரிக்கின்றது என்று கூறுகின்றனர். இதை 3000 வருடங்களுக்கு மேலாக செய்கின்றனர் என்று சொல்லப்படுகின்றது.
--------------------
படம்: At Mount Scopus. பின்னணியில் உரோமர்களால் இடிக்கப்பட்ட சொலமன் கோவிலுக்கு மேல் இஸ்லாமியரால் கி.பி. 689 – 691 காலப் பகுதியில் கட்டப்பட்ட Dome of the Rock மசூதி.
குமாரவேலு கணேசன்
4.06.2021


No comments:

Post a Comment

கலாநிதி நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்: விளையாட்டு, கல்வி, மனிதாபிமானத்தின் சிகரம்

கலாநிதி  நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்: விளையாட்டு, கல்வி, மனிதாபிமானத்தின் சிகரம் கலாநிதி குமாரவேலு கணேசன் (STEM-Kalvi) ஏப்ரல் 18, 2024 அன்று,...