Friday, June 9, 2023

யூதர்களின் வரலாறு- 07

----------------------------
தறிகெட்டுத் திரிந்த மானிடனை நல்வழிப்படுத்துவதற்காகவே மதங்கள் உருவாக்கப்பட்டன என்று நம்பப்படுகின்றது. வேதாகமத்தில் சொல்லப்பட்ட பத்து கட்டளைகள் என்றால் என்ன, இஸ்லாமியர்களினது குரானின் ஐந்து தூண்கள் என்றால் என்ன பௌத்தர்களின் எட்டு நெறிகள் என்றால் என்ன இந்துமதம் போதிக்கும் அட்டாங்க யோகங்கள் என்றால் என்ன அடிப்படையில் அறவழியைத் தான் போதிக்கின்றன. Ethics என்றும் அறநெறி என்றும் தற்பொழுது மதச்சார்பற்றவர்கள் பேசுவதும் இவற்றில் பலவற்றையே என்றாலும் வரலாற்றில் நடந்தது என்னவோ தலைகீழாகவே. மதங்களுக்கான போர்களும் அவற்றில் இறந்தவர்களும் தான் வரலாற்றில் அதிகம். முக்கியமாக ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளில் நடந்த யூத , கிறிஸ்தவ , இஸ்லாமிய போர்களும் அவற்றால் கொல்லப்பட்டவர்களும் ஏராளம் ஏராளம். அவற்றுள் யூதர்கள் சம்பந்தப்பட்டவற்றை மாத்திரம் இனி பார்க்கப்போகிறோம்.
கி மு 4-2ம் ஆண்டளவில் யூதராக பிறந்து கிபி 30-36ம் ஆண்டளவில் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட யூதரான இயேசு கிறிஸ்து தாம் வாழ்ந்த காலத்தில் ஒரு புதிய மதத்தை தோற்றுவிக்கவில்லையாயினும் அவரின் சீடர்கள் இயேசு கிறிஸ்துவின் போதனைகளைப் பரப்பத் தொடங்கினர். 30 வெள்ளிக்காக இயேசுவைக் காட்டிக்கொடுத்த யூதாஸ் தற்கொலை செய்து கொள்ள, அப்போஸ்தலர்கள் என்றழைக்கப்பட்ட மிகுதி 11 சீடர்களும் பல நாடுகளுக்கும் சென்று கிறிஸ்துவின் போதனைகளைப் பரப்பினார்கள். இதில் பலர் கொலை செய்யபப்ட்டனர். ஆனால் பல யூதர்களும் ரோமானியர்களும் கிறிஸ்தவ மதத்திற்கு சிறிது சிறிதாக மாறிக்கொண்டு வந்தனர்.
கிரேக்க சாம்ராஜ்யம் வீழ்ச்சியடைந்து, கிமு 30களில் இருந்து கிட்டத்தட்ட 300 ஆண்டுகள் கோலோச்சிய ரோம சாம்ராஜ்யம் தற்போதைய இஸ்ரேலுடன் மத்தித்தரை கடலை அண்டிய எகிப்து, ஜோர்டான், சிரியா, இராக், லெபனான், துருக்கி உட்பட பல ஐரோப்பிய நாடுகளைக் கொண்டதாக இருந்தது.
பெரும் கிளர்ச்சி (The Great Revolt), என அழைக்கப்படும் முதலாவது உரோம -யூத போர் கி.பி. 66 – 73 காலப்பகுதியில் யூதேயா என்று அழைக்கப்பட்ட, தற்போதைய இஸ்ரேலில் நடந்தது. இது யூதர்களின் உரோமப் பேரரசுக்கு எதிரான மூன்று பெரும் போர்களில் முதலாவதாகும். இரண்டாவது கிளர்ச்சி கி.பி. 115-117 இலும், மூன்றாவது கிளர்ச்சி கி.பி. 132-135 இலும் இடம்பெற்றன.
கி.பி. 66 இல் ஆரம்பிக்கப்பட்ட இக்கிளர்ச்சியில் இரண்டு முறை யூதர்கள் யூதேயாவை கைப்பற்றி பின்னர் பறி கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கிபி 70 இல் கிட்டத்தட்ட 8 மாத முற்றுகையின் பின்பு சொலமன் கோவில் (இரண்டாவது கோவில்) உரோம தளபதி டைட்டஸ் தலைமையில் இடித்து அழிக்கப்பட்டது. உரோம சக்கரவர்த்தி வெஸ்பாசியனின் மகனான டைட்டஸ் இந்த வீர தீர(?) செயலுக்காக பல விருதுகள் கொடுத்து கௌரவிக்கப்பட்டதுடன் ஜெருசலேத்தை அழித்த ஞாபகமாகச்சின்னமாக டைட்டஸ் வளைவு (Arch of Titus) உரோமில் கட்டப்பட்டது. உரோமில் இன்றும் இந்த போர் வெற்றிச் சின்னத்தை காணலாம். டைட்டஸ் பின்னாளில் உரோம சக்கரவர்த்தியாகினார் என்பது கூடுதல் தகவல்.
இறுதியாக, சாக்கடல் கரையோரம் கி பி 73 இல் நடந்த மசாடா கோட்டை முற்றுகையில் யூதர்களும் அவர்களின் குடும்பங்களுமாக 960 பேர் தற்கொலை செய்துகொண்டு இறந்தனர். ஆனால் யூதர்கள் தற்கொலை செய்வது தடைசெய்யப்பட்டுள்ளதால் ஆளை ஆள் நீரில் முக்கி கொன்றனர் என்றும் சொல்லபப்டுகின்றது. இக்கோட்டையானது சிகிரியா போன்று ஒரு குன்றின் மீது ரோமானியர்களால் கட்டபப்ட்டு பின்பு யூத தீவிரவாத பிரிவொன்றான சிக்காரிகளால் கைப்பற்றப்பட்டு அவர்களும் அவர்களின் குடும்பங்களும் அடைக்கலம் பெற்றிருந்தனர். சாக்கடல் (Dead sea) கரையில் அமைந்துள்ள இந்த மசாடா கோட்டையை ஆயிரக்கணக்கான யூத கைதிகளையும் ரோம போர்வீரர்களையும் கொண்டு சாய்தள பாதை (Ramp) அமைத்து ரோமர்கள் கைப்பற்றிய விதத்தை இன்றும் அங்கு போனால் பார்க்கலாம்.
இந்த முதலாவது பெருங்கிளர்ச்சியின் முடிவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான யூதர்கள் கொல்லப்பட்டும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான யூதர்கள் சிறைப் பிடிக்கப்பட்டும் இருந்தனர். சிறைப் பிடிக்கப்பட்டவர்கள் எல்லோரும் பின்னர் அடிமைகளாக விற்கப்பட்டனர்.
----------------------------
வினோத யூத வழக்கங்கள்
கடந்த பதிவில் யூதர்களின் கோஷர் உணவு விதிகளையும் அவற்றுள் பல வினோதமாக இருப்பதையும் கண்டிருப்பீர்கள். இனி வரும் அத்தியாயங்களில் அவர்களின் வினோத வழக்கங்களில் ஒன்றை இறுதி துணுக்காக எழுதலாம் என்று இருக்கின்றேன். இவைகளை எங்கோ பார்த்தது போல் இருக்குதே என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.
முற்றிலும் அந்நியரான யூதர்கள் இருவர் சந்திக்கும்போது நீர் எவடம் என்று தொடங்கி இருவரும் தமக்கு தெரிந்த பெயர்களை சொல்லி அவரைத் தெரியுமா , இவரைத் தெரியுமா என்று கேட்டு ஒருவரையாவது பொதுவாக கண்டுபிடிக்கும்வரை நிறுத்தமாட்டார்களாம். இதை "Play Jewish Geography” என்பார்கள்.
--------------------
படம்: மசாடா கோட்டை அமைந்துள்ள பகுதியில் உள்ள சாக்கடல். இதன் நீர் சாதாரண கடல் நீரைப்போல் 10 மடங்கு உப்புத்தன்மை கொண்டதும் சாதாரணமாகவே மிதக்க வைக்கும் தன்மை கொண்டதுமாகும்.
குமாரவேலு கணேசன்
2.05.2021




No comments:

Post a Comment

கலாநிதி நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்: விளையாட்டு, கல்வி, மனிதாபிமானத்தின் சிகரம்

கலாநிதி  நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்: விளையாட்டு, கல்வி, மனிதாபிமானத்தின் சிகரம் கலாநிதி குமாரவேலு கணேசன் (STEM-Kalvi) ஏப்ரல் 18, 2024 அன்று,...