Friday, June 9, 2023


யூதர்களின் வரலாறு- 06

-------------------------
யூதர்களின் வரலாற்றை எழுதத் தொடங்கினால் உலக வரலாற்றின் 50% வந்துவிடும். எல்லாவற்றையும் எழுதிவிடவும் முடியாதாகையால் ஆர்வமானவர்கள் மிகுதியை தேடி வாசித்துக் கொள்ளுங்கள்.
கி.மு. 586-இல் ஜெருசலேம் ஆலயம் பாபிலோனியர்களால் இடிக்கப்பட்டது என்றும் பெரும்பாலான யூதர்கள் பாபிலோனியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர் என்றும் ஐம்பது ஆண்டுகளுக்கு பின்பு, பாரசீக அரசர் சைரஸ், பாபிலோனியாவைக் கைப்பற்றி யூதர்களுக்கு மீண்டும் ஜெருசலேத்தை நிர்மாணிக்கும் அனுமதியை அளித்து, அதில் குடியிருக்கும் உரிமையையும் வழங்கினார் என்றும் வரலாறு சொல்கின்றது.
கி.மு. 520-515-இல் ஜெருசலேம் ஆலயம் இரண்டாவது முறையாகக் கட்டப்பட்டது. கி.மு.333-இல் அலெக்ஸாண்டரின் படைகளால் கைப்பற்றப்பட்ட இஸ்ரேல் கி.மு. 63 வரை கிரேக்கர்களின் பிடியில் இருந்தது. அதன் பின்பு கிமு 60 அளவில் ரோமர்களின் எழுச்சி ஆரம்பமாகி இஸ்ரவேல் இருந்த காணான் தேசம் அவர்களின் பிடிக்குள் வருகின்றது. கிமு40 இல் இருந்து கிபி 4 வரை ஆண்டரோம மன்னனான ஏரோது (Herod) மன்னன் காலத்திலேயே இயேசு கிறிஸ்து பிறக்கின்றார்.
இனி நான் எழுதப்போகும் இயேசு கிறிஸ்துவின் வரலாற்றுக்கு பைபிள் கதைகள் மாத்திரமே ஆதாரம் ஆகும். அவற்றுக்கு எந்த விதமான விஞ்ஞான, அகழ்வாராய்ச்சி ஆதாரங்களும் கிடையாது என்பதையும் கூறிக் கொள்ள விரும்புகின்றேன். விஞ்ஞானத்தையும் அஞ்ஞானத்தையும் இவ்வத்தியாயத்தில் போட்டுக் குழப்பாமல் அடுத்த அத்தியாயங்களில் அவற்றை சிறிது தொட்டு செல்லலாம் என்று நினைக்கின்றேன். கிறிஸ்தவ மத நம்பிக்கையுள்ளவர்களை நானும் நோகடிக்காமல் பின்னூட்டங்களும் நோகடிக்காமல் பார்த்துக்கொள்வேன் என்று கூறி ஆரம்பிக்கின்றேன்.
மகாபாரத கதையில் குந்திதேவி இளவரசர் பாண்டுவை திருமணம் செய்வதற்கு முன்னரே சூரியக் கடவுள் மூலமாக கர்ணன் பிறந்தான். அதேபோலவே, நாசரேத்தை (தற்போதைய வடக்கு இஸ்ரேலில் உள்ளது) சேர்ந்த யூதப்பெண் மரியாள் மற்றொரு யூதரான அவரது கணவர் ஜோசப்பை திருமணம் முடிப்பதற்கு முதலே பரிசுத்த ஆவியால் கர்ப்பவதியாகி, இயேசுவை பெறுகிறார். தீர்க்கதரிசிகளால் ஏற்கனவே சொல்லப்பட்டபடி யூதர்களின் அரசன் இயேசு பிறந்த செய்தி அறிந்த ரோம அரசன் ஏரோது, இயேசுவை கொல்ல வேண்டும் என்று கட்டளையிட்டான். தூதன் மூலம் தகவல் அறிந்த ஜோசப்பும், மரியாளும் இயேசுவை தூக்கிக் கொண்டு எகிப்துக்கு சென்றனர். ஏரோது மரணிக்கும் வரை அங்கிருந்து பின், கலிலியோவில் உள்ள நாசரேத் நகரில் தங்கி வசித்தனர்.
இயேசு கிறிஸ்து கி.பி., 30ல் தனது 30 வயதில் தன்னை முழுமையாக கடவுள் பணியில் ஈடுபடுத்தி கொண்டார். பேதுரு, அந்திரேயோ, பிலிப் பு, யாக்கோபு, தோமா, யோவான், மத்தேயு, யாக்கோபு, யூதாஸ், பர்தொலொ என்னும் 12 சீடர்களுடன் மக்களுக்கு அற்புத பணிகளை ஆற்றினார்.
இயேசு கிறிஸ்து யூதராக பிறந்து யூதராகவே வளர்ந்து யூத மதத்தில் பல சீர்திருத்தங்கள் செய்ய முயற்சிக்கும்போது வழமைபோல் யூத மதகுருக்களுடன் தகராறு ஏற்படுகின்றது. அவர் ஒரு தந்தை பேர் தெரியாதவன் (illegitimate) என்றும் சூனியக்காரன்(Sorcerer) என்றும் ஒதுக்கிவைக்கின்றனர். யூதர்களின் பத்து கட்டளைகளில் ஒன்றான ஓய்வு நாளான ஸபத் பற்றிய விமர்சனமும், சொலமன் கோவிலில் நடைபெற்றுவந்த வர்த்தக நடவடிக்கைகளை தனது சீடர்களுடன் சென்று நிறுத்தியதும் யூத மதகுருக்களை கோபப்படுத்தி விட்டது. நான் முன்பே கூறியது போல் மதகுருக்கள் அரசில் பாரிய செல்வாக்கு செலுத்திய காலம் அது. அது மாத்திரமல்லாமல் யூதர்கள் எந்தவித மாற்றத்தையும் தமது தோராவில் செய்ய மாட்டார்கள். அவர்கள் கூட்டாக சேர்ந்து அப்போதைய உரோம ஆளுநரான பொந்தியு பிலாத்துவிடம் முறையிட்டு இயேசு கிறிஸ்துவுக்கு மரணதண்டனை விதிக்க கோரினார்கள். முதலில் மறுத்த பிலாத்துவும் இறுதியில் அவர்களின் வற்புறுத்தலுக்கு அடிபணிந்து சிலுவையில் அறைந்து மரண தண்டனை நிறைவேற்ற ஒப்புக்கொண்டான்.
பன்னிரு சீடர்களில் ஒருவனான யுதாஸால் காட்டிக் கொடுக்கப்பட்ட இயேசு கிறிஸ்துவுக்கு சவுக்கால் அடிக்கப்பட்டு தலையில் முட்கிரீடம் சூட்டப்பட்டு சிலுவையில் அறையப்பட்டு கல்வாரி மலையில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. மூன்று நாட்களின் பின்பாக உயிர்த்தெழுந்து சீடர்களுக்கு காட்சி தந்தார் என்று பைபிள் மேலும் சொல்கின்றது. இது நடந்தது கிபி 30-33 அளவில் என்கின்றனர். யூதராக பிறந்து யூதராகவே வளர்ந்து யூதராகவே மரணிக்கும் இயேசு கிறிஸ்துவின் பெயரால் அவர்களின் சீடர்களால் பின்பு உருவாக்கப்படுவதே கத்தோலிக்க கிறிஸ்தவ சமயம் ஆகும்.
இயேசு கிறிஸ்துவை முஸ்லிம்கள் ஈஸா என்று அழைப்பார்கள். ஈஸாவின் இறுதிக்காலம் தொடர்பாக இஸ்லாம் விவரிக்கும் போது அவர் சிலுவையில் அறையப்படவில்லை மாறாக யார் அவரைக் காட்டிக் கொடுத்தாரோ அவரை ஈஸாவின் உருவ அமைப்பில் மாற்றி ஈஸா (இயேசு) கொல்லப்படாமலேயே வானுக்கு உயர்த்தப்பட்டார் என்கிறது.
படம் : திருக்கல்லறைத் தேவாலயம் -இயேசு சிலுவையிலறையப்பட்டு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட இடம் என்று நம்பப்படும் இடத்தில் கட்டப்பட்டுள்ள Church of the Holy Sepulchre தேவாலயம்.
குமாரவேலு கணேசன்
31.05.2021


No comments:

Post a Comment

கலாநிதி நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்: விளையாட்டு, கல்வி, மனிதாபிமானத்தின் சிகரம்

கலாநிதி  நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்: விளையாட்டு, கல்வி, மனிதாபிமானத்தின் சிகரம் கலாநிதி குமாரவேலு கணேசன் (STEM-Kalvi) ஏப்ரல் 18, 2024 அன்று,...