Friday, June 9, 2023

யூதர்களின் வரலாறு 05

-------------------------
புதியதொரு நாட்டுக்கு போகும் போது உணவு ஒரு பிரச்சனையாக இருப்பது எல்லோருக்கும் வழமை தான். ஜெருசலேத்தில் போய் இறங்கியவுடன் நானும் அதை உணர்ந்தேன். எங்கு போனாலும் இலகுவாக வாங்கக்கூடியது பீட்சா தான். அவை எல்லா நாட்டிலும் ஒரே மாதிரித்தான் இருக்கும். ஆனால் இஸ்ரேலில் அப்படியில்லை . மெனுவை பார்த்தால் தலை சுத்தியது. சீஸ் போட்டால் இறைச்சி இல்லை, இறைச்சி போட்டால் சீஸ்இல்லை! அவர்களின் கஷ்ரத் என்னும் உணவு விதிகளின்படியே உணவு விடுதிகளில் உணவு விற்கப்படும். அதென்ன கஷ்ரத் உணவு விதி என்று பார்ப்போம்.
யூதர்கள் கடந்த 3000 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்களின் பழக்க வழக்கங்களை பெரிதும் மாற்றாமல் இருந்து வருகின்றனர். அவர்களின் உணவு வழக்கத்தை Kashrut என்னும் உணவு விதிகள் தீர்மானிக்கின்றன. இந்த விதிகளுக்கு அமைவான உணவை கோஷ(ர்) (Kosher) என்று அழைப்பர். இது கிட்டத்தட்ட இஸ்லாமியர்களின் ஹலால் போன்ற ஒன்றுதான் என்றாலும் நிறைய வித்தியாசம் உள்ளது. கோஷவுக்கும் ஹலாலுக்கும் உள்ள வித்தியாசங்களை பார்ப்போம்.
கோஷர் சட்டம் மட்டி (shell fish) , செதில்களுடன் கூடிய விலங்குகள், முயல் மற்றும் வேட்டையாடும் பறவைகள் ஆகியவற்றை தடை செய்கிறது, ஆனால் ஹலால் அவ்வாறு செய்யவில்லை. கோஷர் மற்றும் ஹலால் விதிகள் இரண்டும் பன்றி இறைச்சியை சாப்பிடுவதை தடை செய்கின்றன.
ஹலால் விதிகள் வைன் , மதுபானம், பியர் மற்றும் போதைப்பொருளை தடை செய்கின்றன, ஆனால் கோஷர் சட்டம் அவ்வாறு செய்யவில்லை. ஆம் கஷ்ரத் சட்டத்தில் நன்றாக மது குடிப்பது ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
கோஷர் சட்டம் பால் மற்றும் இறைச்சியைக் கலப்பதைத் தடைசெய்கிறது. அத்துடன் அவற்றை ஒன்றாக சமைப்பது, பரிமாறுவது மற்றும் அவற்றுக்குப் பயன்படுத்தப்படும் பாத்திரங்களை ஒன்றாக சுத்தம் செய்வது போன்றவற்றை தடை செய்கிறது, ஆனால் ஹலால் சட்டம் அவ்வாறு தடை செய்யவில்லை.
மயங்கிய நிலையில் உள்ள (stunned ) ஒரு மிருகத்தை கொலை செய்வது ஹலால் சட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது, ஆனால் கோஷர் விதிகளில் இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஹலால் விதிகள் முழு விலங்கையும் சாப்பிட அனுமதிக்கின்றன, ஆனால் கோஷர் சட்டம் விலங்கின் பின் பகுதியை சாப்பிடுவதை தடை செய்கிறது. அது மட்டுமல்லாமல் விலங்கின் உள் பகுதிகள், முள்ளந்தண்டு, நரம்பு ஆகியனவும் கோஷரில் தடைசெய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மிருகமும் கொல்லப்படுவதன்போதோ அல்லது அதற்கு முன்பாகவோ ஹலால் சட்டத்தில் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய வேண்டும், ஆனால் கோஷருக்கு ஒவ்வொரு கொலைக்கும் முன் பிரார்த்தனை தேவையில்லை.
கோக்ஷருக்கு ஒரு யூதரான ஷோஷெட், அல்லது சிறப்பாக பயிற்சி பெற்ற ராபி, விலங்கைக் கொல்ல வேண்டும், அதே நேரத்தில் எந்த வயது முஸ்லீம், கிறிஸ்தவர் அல்லது யூதரும் ஹலால் சட்டத்தில் விலங்கைக் கொல்லலாம்.
இறைச்சியில் எஞ்சியிருக்கும் இரத்தம் ஹலால் விதிகளின்படி பிரச்சனையில்லை, ஆனால் கோஷர் விதிகளில் இரத்தத்தை விரைவாக, முழுமையாக வெளியேற்ற வேண்டும். மிகுதியான இரத்தத்தை உப்பு தடவி வெளியேற்றுவர்.
கோஷர் இறைச்சி ஹலால் சட்டத்தில் ஏற்றுக்கொள்ளத்தக்கது, ஆனால் கோஷர் விதிகளைப் பின்பற்றுபவர்களுக்கு ஹலால் இறைச்சி ஏற்றுக்கொள்ள முடியாது.
இவற்றை விட பல விசித்திரமான சட்டங்களும் உள்ளன. உதாரணத்திற்கு முட்டையில் சிவப்பு இரத்தம் இருக்கக்கூடாது. ஆனால் சிவப்பு இரத்தம் உள்ள முட்டையுடன் அப்படியில்லாத முட்டைகள் சிலவற்றை போட்டு அவித்தால் அவற்றையெல்லாம் சாப்பிடலாம்.
(படம்: சினாய் பாலைவனம்)
குமாரவேலு கணேசன்

30.05.2021


No comments:

Post a Comment

கலாநிதி நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்: விளையாட்டு, கல்வி, மனிதாபிமானத்தின் சிகரம்

கலாநிதி  நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்: விளையாட்டு, கல்வி, மனிதாபிமானத்தின் சிகரம் கலாநிதி குமாரவேலு கணேசன் (STEM-Kalvi) ஏப்ரல் 18, 2024 அன்று,...