Friday, June 9, 2023

யூதர்களில் வரலாறு -04

--------------------
ஜெருசலேமில் உள்ள ஒரு ஹொட்டேலின் 14வது மாடியில் தங்கியிருந்த நான் இரவு சாப்பாட்டிற்கு போவதற்காக லிப்ட்டில் புகுந்தபோது ஒரு பட்டனும் வேலை செய்யவில்லை. ஆனால் அது ஒவ்வொரு மாடியிலும் நின்று நின்று கதவு திறந்து மூடியது. பலர் உள் வந்து வெளியேறிக்கொண்டே இருந்தனர். பட்டன்கள் பழுதாகிவிட்டதாக்கும் என்று நினைத்து ரிசப்ஷனுக்கு போய் சொன்னபோது, இண்டைக்கு வெள்ளிக்கிழமை , ஸபத் எண்டான் ஒருத்தன். சரி எண்டு வந்து அது என்னவெண்டு பார்த்தால் யூதர்களின் பத்து கட்டளைகளில் நாலாவதான ஒய்வு நாளாம் ! அதென்ன பத்து கட்டளைகள் என்று பார்ப்போம்.
யூதர்களின் சமய நூலான ஹீப்ரு பைபிள் அல்லது தோரா /தானாக் இன் படி பத்துக் கட்டளைகள் என்பது எகிப்தில் இருந்து இஸ்ரவேலர்கள் தமது பூர்வீக நிலமான காணான் தேசம் என்று சொல்லப்பட்ட தற்போதைய இஸ்ரேலுக்கு திரும்பி வரும்போது சினாய் மலை மீது கடவுளால் கற்பலகை மேல் எழுதி மோசஸ் மூலமாக கொடுக்கப்பட்ட சமய, அறநெறி விதிகளின் பட்டியலாகும்.
பழைய ஏற்பாடு பைபிளிற்கு அடிப்படை இந்த யூதர்களின் தானாக் என்பதால் இந்த 10 கட்டளைகளையும் கத்தோலிக்க, புரடஸ்தாந்து கிறிஸ்தவ மதப்பிரிவுகளும் சிறிய மாற்றங்களுடன் இன்றும் கைக்கொள்கின்றன.
பத்து கட்டளைகள்:
நானே உன் கடவுளாகிய ஆண்டவர்: என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது, கடவுளின் சிலையையோ ஓவியத்தையோ நீ உருவாக்க வேண்டாம், உன் கடவுளாகிய ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதே, ஓய்வு நாளைத் தூயதாகக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு, உன் தந்தையையும் உன் தாயையும் மதித்து நட, கொலை செய்யாதே, விபச்சாரம் செய்யாதே, களவு செய்யாதே, பிறருக்கு எதிராகப் பொய்ச்சான்று சொல்லாதே, பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக.
ஆனால் இஸ்லாமோ 5 தூண்கள் என்ற மார்க்கக் கடமைகளை மாத்திரம் போதிக்கின்றது. அவையாவன இறை நம்பிக்கை, ஐவேளை தொழுகை, நோன்பு, தர்மம், ஹஜ் கடமை.
பண்டைய எகிப்திய, கிரேக்க, ரோம சாம்ராஜ்யங்கள் மாத்திரமல்லாமல் இந்திய இலங்கை வரலாறுகளையும் பார்த்தீர்கள் என்றால் அரசாங்கத்தில் மதகுருக்களின் ஆதிக்கம் பெருமளவில் இருந்திருக்கும். (இப்ப மட்டும் என்ன வாழுதாம்?) மத நிந்தனை என்பது மன்னிக்க முடியாத குற்றமாக கருதப்பட்டு மரண தண்டனை வழங்கப்பட்டது. சோக்கிரட்டீசுக்கு கிரேக்கர்களால் வழங்கப்பட்ட மரணதண்டனையும் அவ்வாறான தொன்றே. 17ம் நூற்றாண்டில் கூட பூமி சூரியனை சுற்றி வருகின்றது என்று கூறியதற்காக இத்தாலிய விஞ்ஞானி கலிலியோ கலிலிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
ஓய்வு நாள் அல்லது ஸபத் (Shabbat ) என்பது யூத சமயத்தைப் பொறுத்த வரை ஏழாவது நாள் ஆகும். ஆறு நாட்களில் உலகைப் படைத்த இறைவன் ஏழாம் நாள் ஓய்வு எடுத்ததை இது அடிப்படையாய்க் கொண்டுள்ளது. ஓய்வு நாள் வெள்ளிக்கிழமை சூரிய அஸ்தமனதிலிருந்து சனிக்கிழமை இரவு வரையிலான காலம் ஆகும். இந்த ஒய்வு நாளில் அவர்கள் செய்யக்கூடாத பலவற்றை பட்டியல் இட்டுள்ளனர். அதில் விளக்கு ஏற்றக் கூடாது, நெருப்பு அணைக்கக்கூடாது என்பதில் இருந்து நாற்று நடுவது, விதை விதைப்பது, உழுவது என்று 39 தொழிற்பாடுகள்(Melachot) பட்டியலிடப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை பொழுது சாய்வதற்குள் விளக்கு (லைட்) எல்லாம் ஏற்றப்பட்டு, உணவு சமைக்கப்பட்டு விடும். பத்துக் கட்டளைகளின் அடிப்படையில் ஓய்வு நாளின் போது இறைவனை ஆராதிப்பதைத் தவிர எந்த வேலையும் செய்யக் கூடாது; பெரும்பாலான இயந்திரங்களை இயக்கக் கூடாது.
2000 வருடங்களுக்கு முன்பாக இது எழுதப்பட்டிருந்தாலும் இப்பொழுதும் அதை பின்பற்றுகின்றனர். இயந்திரங்களை இயக்க கூடாது என்பதற்காக லிப்ட் பட்டனைக்கூட அழுத்த மாட்டார்கள். வெள்ளிக்கிழமை ஸபத் ஆரம்பித்த நேரத்தில் இருந்து சனிக்கிழமை முடியும் வரை லிப்ட்களை ஒவ்வொரு மாடிக்கும் தாமாக நின்று நின்று செல்வது போல் புரோகிராம் செய்து வைத்துள்ளனர். (சிரிக்காதேங்கோ).
படம்: King David (மன்னன் தாவீதின் சிலை அவரின் சமாதிக்கு வெளியில்)
குமாரவேலு கணேசன்
29.05.2021






No comments:

Post a Comment

கலாநிதி நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்: விளையாட்டு, கல்வி, மனிதாபிமானத்தின் சிகரம்

கலாநிதி  நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்: விளையாட்டு, கல்வி, மனிதாபிமானத்தின் சிகரம் கலாநிதி குமாரவேலு கணேசன் (STEM-Kalvi) ஏப்ரல் 18, 2024 அன்று,...