Friday, June 9, 2023

யூதர்களின் வரலாறு-14

-----------------------------
எனது யூதர்களின் வரலாற்றுத்தொடரை தொடருமாறு அன்புத்தொல்லைகள் வந்துகொண்டிருப்பதால் மீண்டும் விட்ட இடத்தில் இருந்து தொடங்கலாம் என்றாலும், காலப்பொருத்தம் கருதி மியூனிக் (தமிழில் மியூனிச் என்றுதான் பலரும் கூறுவர்) ஒலிம்பிக் படுகொலையும் மொஸாட்டின் Operation Wrath of God பற்றியும் இன்று எழுதலாம் என்று நினைக்கின்றேன்.
இன்று ஆகஸ்ட் 8ம் திகதி டோக்கியோ கோடைக்கால ஒலிம்பிக் முடிவுக்கு வருகின்றது. ஒவ்வொரு ஒலிம்பிக் வரும் போதும் 1972ம் ஆண்டு மியூனிக் ஒலிம்பிக்கில் 9 இஸ்ரேலிய விளையாட்டு வீரர்கள் பாலஸ்தீன “கருப்பு செப்டெம்பர்” என்னும் குழுவால் கடத்தப்பட்டு படுகொலை செய்யபப்ட்ட நிகழ்வு ஒவ்வொருவருக்கும் வந்து போவது இயல்பு. இந்த ஒலிம்பிக்கில் (2020/21) ஆரம்ப நிகழ்வின்போது கூட இச்சம்பவத்திற்காக 2 நிமிடங்கள் மௌனாஞ்சலி செலுத்தப்பட்டது.
1972 செப்டெம்பர் 5ம் திகதி இரவு மியூனிக் ஒலிம்பிக் கிராமத்தின் கம்பி வேலிகளை ஏறி வந்த இந்த பயங்கரவாதக்குழு எதிர்த்த 2 பேரை கொன்று 9 இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களை கடத்திச்சென்றது. கடத்தல்கார்கள் எல்லோரும் ஜோர்டான், சிரியா மற்றும் லெபனான் ஆகிய அகதி முகாம்களில் இருந்து வந்தவர்கள். இஸ்ரேல் கைது செய்து வைத்திருக்கும் 234 பாலஸ்தீனியர்களை விடுவிக்க வேண்டும் என்று கடத்தல்காரர்கள் நிபந்தனை விதித்துக்கொண்டிருந்தனர். இத்தருணத்தில் மேற்கு ஜெர்மன் போலீஸ் பணயக்கைதிகளை அதிரடியாக மீட்க முயற்சித்தபோது அத்தனை பணயக்கைதிகளையும் பயங்கரவாதிகள் சுட்டும் குண்டெறிந்தும் கொன்றனர். மூன்று பயங்கரவாதிகள் உயிருடன் பிடிக்கப்பட்டனர். 1972 ஒக்டோபர் 20 ம் திகதி ஒரு லுப்தான்சா விமானத்தை கடத்திய பயங்கரவாதிகள் அதை குண்டு வைத்து தகர்க்கப்போவதாக மிரட்டி சிறையில் இருந்த 3 பயங்கரவாதிகளையும் மீட்டது ஒரு மிகப்பெரிய கேலிக்கூத்தாக முடிந்தது.
அண்மையில் வெளிவந்த சில மேற்கு ஜெர்மன் குறிப்புக்களில் படி பொலிஸாருக்கு இந்த ஒலிம்பிக் தாக்குதல் சம்பந்தமாக முதலே ஒரு உளவுத்தகவல் (tip off) கிடைத்ததாகவும் அதை அவர்கள் தீவிரமாக ஆராயத்தவறிவிட்டதாகவும் தெரிகின்றது.
அப்பொழுது இஸ்ரேலின் பிரதமராக இருந்த பெண் பிரதமர் கோல்டா மேயர் 12 இஸ்ரேலிய உயிரிழப்பிற்கும் காரணமானவர்களை தேடி அழிப்பதற்கு ஒரு இரகசிய மொஸாட் குழுவை நியமித்தார். இந்த இராணுவ நடவடிக்கைக்கு அவர்கள் வைத்த பெயர் கடவுளின் வெஞ்சினம்! (Operation Wrath of God).
பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினுள் (PLO) இருந்த தமது உளவாளிகளினதும் ஐரோப்பிய நாடுகளின் உளவுத்துறைகளினதும் உதவியுடன் ஒரு பட்டியலை தயாரித்த மொஸாட், ஒலிம்பிக் முடிய முதலே தனது வேட்டையை ஆரம்பித்தது. 1988ஆம் ஆண்டு வரை, கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் இந்த வேட்டை தொடர்ந்தது. 35 பேர் வரை இந்த நடவடிக்கைகளில் கொல்லப்பட்டதாக சில குறிப்புக்கள் சொல்கின்றன.
இந்த சம்பவங்கள் எல்லாம் Sword of Gideon (1986) என்னும் திரைப்படமாக முதலில் வந்தது. பின்பு 2005 ஆம் ஆண்டு மியூனிக் (Munich) என்னும் திரைப்படம் ஸ்டிபன் ஸ்பீல்பெர்கால் தயாரிக்கபப்ட்டு சக்கை போடு போட்டது.
அடுத்த அத்தியாயத்தில் மீண்டும் 13ம் நூற்றாண்டுக்கு செல்வோம்.
குமாரவேலு கணேசன்
08-08-2021


No comments:

Post a Comment

கலாநிதி நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்: விளையாட்டு, கல்வி, மனிதாபிமானத்தின் சிகரம்

கலாநிதி  நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்: விளையாட்டு, கல்வி, மனிதாபிமானத்தின் சிகரம் கலாநிதி குமாரவேலு கணேசன் (STEM-Kalvi) ஏப்ரல் 18, 2024 அன்று,...