Monday, June 12, 2023

மலரும் புலத்து நினைவுகள் -08

----------------------------------------
மீண்டும் யாழ் பல்கலைக்கழகத்திற்கு போகலாம்.
நாம் 1985இல் புதியவர்களாக ராக்கிங்கிற்கு பயந்து நடுங்கி புகுந்த வேளையிலே அங்கு பல விதமான அரசியல் போராட்ட முன்னெடுப்புக்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. அதில் முக்கியமாக யாழ் பல்கலைக்கழக கலாச்சார குழுவின் மண்சுமந்த மேனியர் நாடகத்தையும் அத்தோடு நடைபெற்ற கவிதா நிகழ்வையும் சொல்லலாம்.


 மண்சுமந்தமேனியர் குழந்தை சண்முகலிங்கத்தால் எழுதப்பட்டு சிதம்பரநாதனால் நெறிப்படுத்தப்பட்டது. அதன் கரு முக்கியமாக இராணுவத்தால் கொல்லப்பட்டவர்களை ஏறி மிதித்துக்கொண்டு வெளிநாட்டுக்கு தப்பியோடும் மக்களை எள்ளிநகையாடுவதாகவும், இந்தியா எங்களுக்கு ஈழம் பெற்றுத்தரும் என்று மற்றவர்கள் சும்மா இருக்கக்கூடாது என்ற எண்ணக்கருவை மக்களிடம் கொண்டு செல்வதாகவும் இருந்தது. கவிதா நிகழ்வில் சேரன் உருத்திரமூர்த்தியினது கவிதைகள் முக்கிய பங்கெடுத்திருந்தன. நுஃமானின் ஒரு கவிதையும், ஊர்வசியின் ஒரு கவிதையும் உள்ளது.
அப்பொழுது எமக்கு அண்ணன்மாராக, அக்காமாராக இருந்த பலர் பிற்காலத்தில் நண்பர்களாக இருந்தனர். மோகன்ராஜா (அமெரிக்கா) , யோகர்& செல்வி (அவுஸ்திரேலியா), சேரன்(கனடா) ஆகியோருடன் பழகும் வாய்ப்பு பிற்காலத்தில் கிடைத்தது. கவிதா நிகழ்வில் பயன்படுத்தப்பட்ட கவிதைகள் சுதந்திர உணர்வை ஊட்டுவதாக இருந்தன. இவற்றைப்பார்த்து அந்நேரத்தில் இருந்த 35 ஆயுத போராட்ட இயக்கங்களில் சேர்ந்தவர்கள் ஆயிரக்கணக்கில் இருப்பார்கள். சேரனும், என்னைப்போன்ற மற்றவர்களும் வெளி நாட்டுக்கு தப்பியோடிவிட மிகுதியானோர் இயக்கங்களாலோ அல்லது இராணுவதாலோ கொல்லப்பட்டு, மிகுதியானோர் முள்ளிவாய்க்காலில் ஆகுதியானார்கள்.
86ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைக்கைதிகளை விடுவிக்க கோரி ஒரு சுழற்சிமுறை உண்ணாவிரதப்போராட்டம் நடந்தது. அதில் நானும் 3 நாட்கள் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டேன். எனது குழுவில் உண்ணாவிரதம் இருந்தவர்களில் IPKF ஆல் பிரம்படியில் கொல்லப்பட்ட திருபாகரன், Dr தியாகேசன்(அவுஸ்திரேலியா), வாகீசன் (லண்டன்), பரந்தாமன்(SL), நாகேந்திரன்(AU), பிரபா(AU), மதி அக்கா (திருகோணமலை), ஸிடெல்லா அக்கா (nun, மட்டக்களப்பு) ஆகியோர் ஞாபகம் வருகின்றனர். ஒவ்வொரு நாளும் திரு (திருநாவுக்கரசு, அரசறிவியல் துறை உதவி விரிவுரையாளர்) அவர்களின் அரசியல் பேச்சு நடைபெறும். திரு இந்த சுழற்சி முறை உண்ணாவிரதத்தில் பேசிய பேச்சுக்கள் பின்பு புத்தகமாக வெளியிடப்பட்டது.
இந்த உண்ணாவிரத போராட்டங்களிலும், அதன் பின்பு நடந்த பாத யாத்திரைகளிலும் மண்சுமந்த மேனியர் , கவிதா நிகழ்வில் இடம்பெற்ற கவிதைகள் முக்கிய இடம்பெற்றன. முக்கியமாக சேரனின் ‘மூன்று நூற்றாண்டுகள்’ பாடல் மிகவும் பிரபல்யம்
மூன்று நூற்றாண்டுகள் சென்றன_
ஆயினும் அம்மா அம்மா
உன்னுடைய மென்கழுத்தில்
இன்னும் விலங்கு, இன்னும் விலங்கு, இன்னும்விலங்கு- மூன்று
நேற்றொரு காலம் உனது புதல்வரின்
விழிகளை பிடுங்கியே வீசினர் ,
இன்றொரு நேரம் உனது வீட்டின்மேல்
நெருப்பே எரியும் தினமும் -மூன்று
அந்நியன் கரங்கள் எம் குரல்வளை நசுக்கினும்
பாடுவோம் உயர்த்திய குரல்களில்
இன்னும் எம் குருதி இந்த மண் நனைத்தபோதிலும்
நடக்கலாம் நீண்டதோர் பயணமே -மூன்று
மண்சுமந்த மேனியர் மற்றும் கவிதா நிகழ்வு 60 இற்கும் மேற்பட்ட முறை மேடையேற்றப்பட்டதாயினும், அவர்களின் பாகம்-02 ஒரு சில மேடையேற்றங்களுடன் நின்றுவிட்டது அல்லது நிறுத்தப்பட்டது. இன்றுவரை ஏன் என்பதற்கு என்னிடம் பதில் இல்லை.

மண்சுமந்த மேனியர் கவிதா நிகழ்வின் "மூன்று நூற்றாண்டு" பாடலின் youtube ஓன்று கிடைத்துள்ளது.(பின்னூட்டத்தில்) 

https://youtu.be/b93DwonWPfY 

குமாரவேலு கணேசன்
20/05/2023

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. //அதன் கரு முக்கியமாக இராணுவத்தால் கொல்லப்பட்டவர்களை ஏறி மிதித்துக்கொண்டு வெளிநாட்டுக்கு தப்பியோடும் மக்களை எள்ளிநகையாடுவதாகவும்//
    அதை எழுதியவர்கள், எழுதிவிட்டு வேறு நாட்டிற்கு ஓடிவிட்டனர்
    பிற்காலத்தில், யாரோ இப்படிப் பாடுவதைக் கேட்டேன்
    அந்நியன் கரங்கள் எம் குரல்வளை நசுக்கினும்
    நடக்கலாம் நீண்டதோர் பயணமே - கனடா நோக்கி

    ReplyDelete

கலாநிதி நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்: விளையாட்டு, கல்வி, மனிதாபிமானத்தின் சிகரம்

கலாநிதி  நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்: விளையாட்டு, கல்வி, மனிதாபிமானத்தின் சிகரம் கலாநிதி குமாரவேலு கணேசன் (STEM-Kalvi) ஏப்ரல் 18, 2024 அன்று,...