Monday, June 12, 2023

மலரும் புலத்து நினைவுகள் -07

------------------------------------------------
யாழ்ப்பாணக் கல்லூரியின் ஆரம்பம் பற்றி எழுதியதில் தவறுகள் இருப்பதாக சில நண்பர்கள் அதிருப்தி வெளியிட்டதை தொடர்ந்து தேடலை மேற்கொண்டதன் பயனாக அவுஸ்திரேலியாவில் இயங்கும் Ceylon Society of Australia என்ற அமைப்பின் காலாண்டு சஞ்சிகையான The Ceylanka வில் கடந்த மாதம் அல்பிரட் என்பவர் எழுதிய (The American-Ceylon Mission and English education in Jaffna- by D.M. Alfreds -May 2020) ஆய்வுக்கட்டுரையை பின்னூட்டத்தில் இணைத்துள்ளேன்.
முன்பே சொன்னது போல யாழ்ப்பாண கல்லூரி பங்கர் விடுதி சகல வசதிகளுடன் கூடியது. அது தான் 70களின் பிற்பகுதிகளில் யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் மாணவர்களின் விடுதியாக(undergraduate section) இருந்தது. தற்போதைய யாழ் பல்கலைக்கழக பதில் உப வேந்தர்(competent authority-2020) பேராசிரியர் கந்தசாமி அந்த பட்டதாரி மாணவர்களில் ஒருவர் என்றும் பின்பு வார்டானாக இருந்ததாகவும் Kando go home என்று சிங்கள மாணவர்கள் தனக்கெதிராக போராட்டம் நடத்தியதாகவும் சொல்வார்.
இரவு சாப்பாட்டை முடித்து விட்டு டானியல் புவர் நூலகத்திற்கு ஒரு 100 மீட்டர் நடந்து சென்று எங்கள் பாடங்களை படிக்க வேண்டும். அதை night study time என்று சொல்வார்கள். மணியடித்தவுடன் வரிசையாக செல்லவேண்டும். சிலர் சாப்பிட்டவுடன் போய் அறையை பூட்டிக்கொண்டு படுத்து விடுவார்கள். சப் வார்டன் வந்து கதவை தட்டி திறக்கச்செய்து நூலகத்துக்கு அனுப்பி விடுவார். நாங்கள் இருந்த காலத்தில் காராட்டியில் கருப்பு பட்டி எடுத்த ஒரு ஆசிரியர் அங்கு உப விடுதி காப்பாளராக இருந்தார். எங்களுக்கு அவரை சீண்டுவதில் ஒரு சந்தோசம். ஒரு நாள் நாங்கள் கொஞ்சப்பேர் 2ம் மாடியில் உள்ள எமது அறைகளின் கதவுகளை உட்பக்கமாக பூட்டிக்கொண்டு யன்னலின் ஊடாக வெளியில் போய் தண்ணீர் குழாயை பிடித்து இறங்கி போய்விட்டோம். காராட்டி மாஸ்டர் வந்து கதவு உட்பக்கமாக பூட்டப்பட்டுள்ளதை அவதானித்து தட்டியுள்ளார் (கதவுகளுக்கு ஆமப்பூட்டுதான்). ஒருவரும் திறக்காததால் கோபப்பட்டு கதவு கண்ணாடிக்கு ஒரு பன்ச் விட்டு உடைச்சு பார்த்தபோது உள்ளுக்குள் ஒருவரும் இல்லாததால் இன்னும் டென்ஷன் ஆனதுதான் மிச்சம். கண்ணாடி வெட்டி பிளாஸ்டர் போட்டிருந்ததை அடுத்தநாள் பார்த்து எங்களுக்குள் சிரித்துக்கொண்டோம்.
யாழ்ப்பாணக்கல்லூரியின் முதலாவது அதிபரின் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட டானியல் புவர் நூலகம் யாழ்ப்பாண பொது நூலகத்திற்கு இணையான மிகப்பெரிய நூலகமாகும். சுவடிகள் கூட பாதுகாக்கப்பட்டு இருந்தன. நான் அங்கு சிலகாலம் உதவி நூலகராக வேலை செய்தேன். என்னுடன் வேலை செய்த மற்றவர்களில் நீதிதேவன் (இந்தியா), தேவகி (மெல்பர்ன்), மணிமாறன்(டொரொண்டோ). லெறோய்(UK) என்பவர்கள் ஞாபகத்தில் வருகின்றனர்.
நாங்கள் கணித பாட டியூஷனுக்கு தவச்செல்வம் மாஸ்டரின் வீட்டுக்கு அயல்கிராமமான சுழிபுரத்திற்கு வாரத்தில் சில நாட்கள் செல்வதுண்டு.இதே காலப்பகுதியில் தான் (1984/85) சுழிபுரத்தில் சுவரொட்டி ஒட்டுவதற்காக சென்ற விடுதலைப்புலி உறுப்பினர்கள் 7 பேரை புளொட் இயக்கத்தை சேர்ந்த சங்கிலி (கந்தசாமி) தலைமையிலான குழு சித்திரைவதை செய்து கொன்று புதைத்ததும் நடந்தது. இது தான் புலிகளுக்கும் புளட்டிற்கும் இடையில் ஏற்பட்ட முதல் முறுகல் என்று நினைக்கின்றேன்.


(Photo- Daniel Poor Library,, Jaffna College)

குமாரவேலு கணேசன்
16/05/2023

No comments:

Post a Comment

கலாநிதி நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்: விளையாட்டு, கல்வி, மனிதாபிமானத்தின் சிகரம்

கலாநிதி  நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்: விளையாட்டு, கல்வி, மனிதாபிமானத்தின் சிகரம் கலாநிதி குமாரவேலு கணேசன் (STEM-Kalvi) ஏப்ரல் 18, 2024 அன்று,...