Monday, June 12, 2023

மலரும் புலத்து நினைவுகள் -06

------------------------------------------------
மீண்டும் யாழ்ப்பாணக்கல்லூரி. அப்பொழுது 35 ஆயுத குழுக்கள் இயங்கிவந்த காலம். வட்டுக்கோட்டை சந்தியில் டெலோ ஒரு கொத்துரொட்டி கடை போட்டிருந்தது.
அருமையான கொத்து போடுவார்கள். படிக்கும்போது எங்களிடம் பெரிதாக காசு புளங்காது என்பதால் எப்பவாவது கொத்துச்சாப்பிடுவோம். பங்கர் விடுதிக்கு பக்கத்தில் மெத்தபால என்றோரு சிங்களவர் தேத்தண்ணி கடை வைத்திருந்தார். அங்கு பிளேன்டீ குடிப்போம். இரவு சாப்பாட்டுக்கு போய் வரும் போது அந்த ஒழுங்கையில் உள்ள வீடுகளில் உள்ள மாம்பழம், பப்பாப்பழம் எல்லாம் களவு போனது. விடுதியிலும் முட்டைமா, வீட்டில் இருந்து வந்த இறைச்சிக்கறி எல்லாம் பூட்டிய அறைக்குள் இருந்து கொள்ளை போனது. யாரோ ஹாட்லி ஹாஸ்ட்டலில் இருந்த வந்த ஒரு பூட்டு திறக்கும் எக்ஸ்பேர்ட் எல்லாற்றையும் கதவு பூட்டுக்களையும் ஒரு கீறலும் இல்லாமல் திறந்து உதவிக்கொண்டிருந்ததாக ஒரு வதந்தி உலாவினாலும் வார்டன் வரை செய்தி போகவில்ல்லை.

 
விடுதிச்சாப்பாடு பரவாயில்லை என்றாலும் ஹாட்லி விடுதியில் கொடுத்ததை விட மூன்று மடங்கு விடுதிக்கட்டணம் இருந்தது. பின்ன ஆளுக்கொரு தனியறையும் சியஸ்ற்றா மெத்தையும், buffet சாப்பாடும் எண்டால் காசும் குடுக்கோணும் தானே. ஒருமுறை அரிசி, பருப்பு சரியில்லை என்று கொடுத்த புகாரை பெரிதாக எடுக்காமல் பொறுப்பாக இருந்தவர் சிங்கங்களை சீண்டி விட்டுட்டார். அடுத்தநாள் பாடசாலையில் உள்ள எல்லா நோட்டீஸ் போர்டிலும் விடுதி சாப்பாட்டில் உள்ள குறைகள் எழுதப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் கவனமாக குத்தப்பட்டிருந்தன.. நோட்டீஸ் போட்டிற்கு போட்டிருந்த பூட்டு அப்படியே இருக்க துண்டுப்பிரசுரம் உள்ளுக்கு எப்படி வந்திருக்கும் என்று எல்லோரும் தலையை பிச்சுக்கொண்டனர். முழு மாணவர்களும் ஆசிரியர்களும் அதைப்பார்த்ததால் ரொம்ப அவமானமாகி விடயம் பெரிய இடத்துக்கு போய் உடனடியாக எல்லா அரிசி, பருப்பு மூட்டையும் புதிதாக மாற்றப்பட்டது வரலாறு. விடுதி வார்டன் தர்மன் குலோத்துங்கம் போற வாற எல்லாரையும் கேட்டு, தனது புலனாய்வு குழுக்கள் மூலம் தேடியும் நோட்டீஸ் போட்டவனை பிடிக்கமுடியவில்லை.
றக்பி உட்பட அத்தனை விளையாட்டுகளும் அங்கிருந்தன. பாட்மிண்டன், டேபிள் டெனிஸ், டெனிஸ் என்பவற்றுடன் நான் நிறுத்திக்கொள்ள விரும்பினாலும் கலவன் பாடசாலை என்றதால பின்னேரங்களில் கிளித்தட்டு விளையாடுவது தவிர்க்கமுடியாததாக இருந்தது. 😀. ஒவ்வொருவருடமும் நடக்கும் சென் பட்ரிக்ஸுடனான பிக் மேட்ச் பெரிய திருவிழாவாக இருக்கும்.
காரைநகரில் இருந்து வரும் நேவிக்கு கண்ணி வெடி வைக்கிறன் எண்டு பொன்னாலை - பருத்துறை ரோட்டில ஒரு இயக்கம் வைச்சுப்போட்டு காத்திருக்கும். ஊருக்கே தெரியும் எண்டால் நேவிக்கு தெரியாதே? அவங்கள் வரவே மாட்டாங்கள். அப்படியொரு சம்பவத்திலேயே டெலி இயக்கத்தலைவர் ஜெகன் மற்றொரு இயக்கத்தால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இன்னொருநாள் EPRLF இயக்கம் காரைநகர் நேவி காம்ப் மீது தாக்குதல் தோல்வியில் முடிந்தது. நேவிக்கு முதலே செய்தி தெரிஞ்சு போயிட்டுது என்று கதைத்தார்கள்.
பின்னேரங்களில் பச்சை நிற ஏசியா சயிக்கிளில் முரளி(பிரசாத்) மற்றும் மலரவன் வந்து எங்களுடன் பேசிக்கொண்டிருப்பது வழக்கம். மற்ற இயக்கங்கள் எல்லாம் ஹைஏஸ், ஹோண்டா 200 CC எண்டு ஓடிக்கொண்டிருக்க அவர்கள் சைக்கிளில் திரிந்தனர். 85ஆம் ஆண்டு ஜூன் மாதமளவில் ஒருநாள் பின்னேரம் சென் ஜோன்ஸ் அதிபர் ஆனந்தராஜா சுடப்பட்டார் என்ற தகவல் வந்து சேர்ந்தது. எமது அதிபர் கதிர்காமரும் சென் ஜோன்ஸ் அதிபரும் நெருங்கிய உறவினர்கள். வழக்கம் போல வந்த முரளி, மலரவனை பிடித்து எமது அதிபர் என்ன நடந்தது என்று கேட்க, தமது இயக்கத்துக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று உறுதியாக சொல்லி சென்றனர்.
35 ஆயுதக்குழுக்கள் இருந்ததால் இளைஞர்களை கண்டால் மக்களுக்கு எப்பொழுதும் ஒரு பயம் இருந்தது. குதிரையால விழுந்து பத்து போட போனபோதும் பரியாரியார் காசு வாங்கமாட்டன் எண்டு உறுதியா சொல்லிப்போட்டார். ஒருமுறை பரீட்சை நேரத்தில் பக்கத்துக்கு கோவிலில் பெரிதாக ஒலிபெருக்கி அலறிக்கொண்டிருந்தது. இரண்டு பேர் இடுப்பில் டோர்ச் லைட்டை சொருவி (ஹி ஹி பிஸ்டல்) சேர்ட்டை வெளியில் விட்டுக்கொண்டு போய் ஒரு வெருட்டு விட்டவுடன் ஒலிபெருக்கி அடங்கியது.
இன்னொருமுறை நண்பர் நீதிதேவனுடன் (Uthayan Victor) சேர்ந்து சுழிபுரத்துக்கு கிட்ட உள்ள ஒரு கிராமத்தில் ஒரு பிணக்கு தீர்த்தோம். என்னமோ ஒரு காசுப்பிரச்சனை. அதே டோர்ச் லைட் தான் ஆயுதம். இன்னும் வரும்.

குமாரவேலு கணேசன்
12/06/2023

No comments:

Post a Comment

கலாநிதி நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்: விளையாட்டு, கல்வி, மனிதாபிமானத்தின் சிகரம்

கலாநிதி  நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்: விளையாட்டு, கல்வி, மனிதாபிமானத்தின் சிகரம் கலாநிதி குமாரவேலு கணேசன் (STEM-Kalvi) ஏப்ரல் 18, 2024 அன்று,...