Monday, June 12, 2023

மலரும் புலத்து நினைவுகள் -05

------------------------------------------------
லண்டன் AL படிக்கப்போனவன் எப்பிடி யாழ் பல்கலைக்கழகத்திற்கு வந்து சேர்ந்தான் எண்டுதானே யோசிக்கிறியள்? அது ஒரு பெரிய கதை, அதுக்கு பிறகு வருவம். பல்கலைக்கழக கதையை எழுத தொடங்க உணர்ச்சிவசப்பட்ட நண்பர்கள் திம்பு, டில்லி என்று என்னை கடத்திக்கொண்டு போனதால அவர்களை ஆசுவாசப்படுத்த பின்னுக்கு ரீவைண்ட் பண்ணவேண்டியதா போய்ச்சு.
நாங்கள் 85இல் நுழைந்தபோது பல்கலை அரசியலாலும் போராட்டங்களாலும் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. அதற்கு முதல் வருடம் தான் ஆக்ஸ்போர்ட், ஹார்வர்ட்டில் மெத்தப்படித்த லலித் அத்துலத்முதலி தேசிய பாதுகாப்பமைச்சராக பதவியேற்று கலக்கிக்கொண்டிருந்தார். சத்தியமூர்த்தி உட்பட பல பல்கலைக்கழக மாணவர்கள் கைதுசெய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களை விடுதலை செய்ய சொல்லி பெரிய ஒரு போராட்டம் ஆரம்பமானது. அந்தப்போராட்டத்தின் நோக்கம் மக்களுக்கு விழிப்புணர்வு கொடுப்பதும், அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதும் தான். ஐந்து நாட்கள் ஏறக்குறைய நூறு பல்கலைக்கழக மாணவ மாணவிகள் பாதயாத்திரையாக ஒவ்வொரு கிராமமும் சென்றோம். சனசமூக நிலையங்களில் எமக்கு உணவும் படுக்கையும் அவ்வூர் மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும். ஒரு லாண்ட்மாஸ்டரில் ஸ்பீக்கர் செட் கட்டப்பட்டிருக்க, பெரிய பதாகை கட்டப்பட்ட இரண்டு கம்புகளை கைகளில் பிடித்துக்கொண்டு
'பஞ்சு முகில்கள் கொஞ்சும் மலையக மக்கள் எழுந்திடுவோம்
மீன்கள் பாடும் வாவி கடந்து கண்விழித்தே வருவோம்'
என்று தெரிந்த எழுச்சிப்பாடல்கள் எல்லாம் பாடிக்கொண்டு பல கிலோமீட்டர்கள் நடக்கவேண்டும். போற வழிகளில் உள்ள கிராமங்களில் இருக்கும் எமது பல்கலைக்கழக நண்பர்களை தேடினால், அங்குள்ள அவர்களின் நண்பர்கள் அல்லது உறவினர்கள் சொல்லும் பதிலை கேட்டு கடுப்பேறும். இப்படியான சமூக பங்களிப்பை செய்ய விரும்பாத ஒரு கூட்டம் எப்போதும் தம்மை நியாயப்படுத்த "இவங்கள் வகுப்புக்களை பகிஷ்கரிக்க அல்லது பரீட்சையை பகிஷ்கரிக்க இதை செய்கின்றனர்" என்று சொல்லி வைத்திருப்பார்கள்.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இக்காலப்பகுதிகளிலும் விரிவுரைகள் நடக்கும். ஆனால் நடக்காது  😀. அதாவது சில விரிவுரையாளர்கள் அந்த பகுதிகளை மீண்டும் நடத்தமாட்டார்கள். ஆனால் அப்பகுதியில் இருந்து பரீட்சை வினாத்தாளில் நிச்சயம் ஒரு வினாவாவது இருக்கும், நம்பிப் போகலாம்.

இந்த படம் 1985 இல் எடுக்கப்பட்டது. இதில் காணப்படும் விமலேஸ் அண்ணா இன்றில்லை. முன்னுக்கு நிற்பவரை பலருக்கும் தெரியும். சோதி அண்ணா என்று எங்களால் அன்று அழைக்கப்பட்ட ஜோதிலிங்கம். பதாகை பிடிப்பதில் ஒருவர் நான் மற்றவர் கொடிகாமம் தேவராஜா.
விமலேஸ் அண்ணாவின் படுகொலை இன்னொரு தனி அத்தியாயத்தில் விஜிதரன் கொலையுடன் சேர்த்து எழுதலாம் என்று இருக்கின்றேன். மிகுதி அடுத்த பகுதியில் தொடரும் ....

குமாரவேலு கணேசன்
09/05/2023


No comments:

Post a Comment

கலாநிதி நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்: விளையாட்டு, கல்வி, மனிதாபிமானத்தின் சிகரம்

கலாநிதி  நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்: விளையாட்டு, கல்வி, மனிதாபிமானத்தின் சிகரம் கலாநிதி குமாரவேலு கணேசன் (STEM-Kalvi) ஏப்ரல் 18, 2024 அன்று,...