Monday, June 12, 2023

மலரும் புலத்து நினைவுகள் -04

------------------------------------------------
AL எழுதும்போது சுற்றிலும் குண்டுச்சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. படித்ததைக்கூட எழுதமுடியாத மனநிலை. தொடர்ந்து நாட்டில் இருக்க முடியாது என்று வெளிநாட்டுக்கு போக முடிவெடுத்து லண்டன் AL படிப்பதற்காக யாழ்ப்பாணக்கல்லூரிக்கு சென்றேன். யாழ்ப்பாணக்கல்லூரி வாழ்க்கை ஒரு வருடமாகினும், பல பாகங்கள் எழுதக்கூடிய அனுபவத்தை தந்த கல்லூரி. கட்டைக்காற்சட்டை, செருப்பணியாத மாணவர்கள், டோமற்றறி விடுதி என்ற ஆண்களுக்கு மட்டுமான ஹார்ட்லி வாழ்க்கையில் இருந்து அயர்ன் பண்ணிய உடுப்புக்களுடனும் சப்பாத்துடன் வலம் வரும் ஆண், பெண் மாணவர்களுடன், ஹொட்டேல் போன்ற தனி அறையுடன் கூடிய பங்கர் ஹோல் விடுதியுடனான யாழ்ப்பாணக் கல்லூரி வாழ்க்கை உண்மையில் ஒரு ஆச்சரியமாகத்தான் முதலில் இருந்தது. 90களில் அதிபர் Dr ஜெபநேசன் மாற்றும்வரை எவரும் எதுவும் என்ன நிறத்திலும் அணியலாம் என்ற சீருடையற்ற கலாச்சாரமே அங்கு நிலவி வந்தது.



 படம்: யாழ்ப்பாணக்கல்லூரி முன்புறத்தோற்றம். இடது புறத்தில் தெரிவது டானியல் புவர் நூலகம். 

தெரியாதவர்களுக்காக இக்கல்லூரியின் வரலாற்றையும் கொஞ்சம் சொல்லி செல்லலாம் என்று நினைகிறேன்.
1816 ஆம் ஆண்டில் இருந்து அமெரிக்க மிசன் யாழ்ப்பாணத்தில் பல பாடசாலைகளை ஆரம்பித்து நடாத்தியது. இவ்வகையில் முதன் முதலாக தெல்லிப்பழையில் "பொதுச் சுயாதீனப் பள்ளிக்கூடம்" யூனியன் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. குடாநாட்டில் உள்ள திறமை வாய்ந்த ஆண் பிள்ளைகளுக்கென வட்டுக்கோட்டையில் 1823 ஆம் ஆண்டில் பட்டிக்கோட்டா மதப்பள்ளி (Batticotta Seminary) நிறுவப்பட்டது. இதன் அதிபராக டானியல் புவர் (Danial Poor) என்பவர் இருந்தார். இம்மதப்பள்ளி அங்கு சேர்க்கப்படும் மாணவர்களை கிறித்துவத்துக்கு மதம் மாற்றுவதையே முக்கிய நோக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஆனாலும், பெரும்பாலான மாணவர்கள் தமது இந்து சமய நம்பிக்கையையே கடைப்பிடித்து வந்ததை அடுத்து 1855 ஆம் ஆண்டில் இம்மதப்பள்ளி மூடப்பட்டது.
பட்டிக்கோட்டா மதப்பள்ளியின் பழைய மாணவர்களும், உள்ளூர் கிறித்தவர்களும் இப்பள்ளியை மீளத் திறக்க வேண்டும் எனக் கோரிக்கை விட்டதை அடுத்து 1872 இல் இக்கல்லூரி யாழ்ப்பாணக் கல்லூரி என்ற பெயரில் மீளவும் பழைய கட்டடத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது. நான் கல்வி கற்ற 1984-85 காலகட்டத்தில் பெரும்பாலான ஆசிரியர்களும் மாணவர்களும் இந்துக்களாகவே அங்கு இருந்தனர்.
அங்கும் எனது குழப்படிகள் தொடர்ந்தன. அங்குபோய் சில வாரங்களிலேயே எமது விடுதிக்கு முன்பாகவிருந்த வயல்வெளியில் நின்ற முரட்டுக்குதிரையில் ஏறி சவாரி செய்ய முற்பட்டு கை உடைந்து மூளாய் பரியாரியின் பத்து போட்டுக்கொண்டு திரிந்ததால் "குதிரை" என்ற செல்லப்பெயர் இன்றும் JC நண்பர்களிடையில் தொடர்கின்றது. இன்னும் நிறைய இருக்கு- மிகுதி அடுத்த பதிவில்.

குமாரவேலு கணேசன்
09/03/2023

No comments:

Post a Comment

கலாநிதி நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்: விளையாட்டு, கல்வி, மனிதாபிமானத்தின் சிகரம்

கலாநிதி  நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்: விளையாட்டு, கல்வி, மனிதாபிமானத்தின் சிகரம் கலாநிதி குமாரவேலு கணேசன் (STEM-Kalvi) ஏப்ரல் 18, 2024 அன்று,...