Monday, June 12, 2023

மலரும் புலத்து நினைவுகள் -03

----------------------------------------------
ஒரு மாற்றத்துக்காக கொஞ்சம் ரீவைண்ட் பண்ணி 80களில் எனது கல்லூரிப் பிரதாபங்களை எழுதலாம் என்று நினைக்கின்றேன்.
சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் O/L எடுத்தாயிற்று. அடுத்தது என்ன? சா/இ இல் தடுக்கி விழுந்தால் சொந்தக்கார டீச்சர்மார் அல்லது அப்பா அல்லது அம்மாவிண்ட சிநேகிதர்கள். நானோ படு குழப்படி. இரண்டு தரம் வெற்றியர் (அதிபர் வெற்றிவேலு) அப்பாவை கூட்டிக்கொண்டு வா எண்டு வீட்டை கலைச்சும் போட்டார். கிழமைக்கு ஒரு புகார் வீட்டுக்கு போய்க்கொண்டிருந்தது. எப்பிடியாவது இங்க இருந்து தப்பிக்கவேணும் எண்டு யோசிச்சு யாழ் இந்து அல்லது சென் ஜோன்ஸ் இல் போய் சேர முடிவெடுத்து இருக்க எண்ட தாத்தா ரூபத்தில் இடி வந்து விழுந்தது. தங்கச்சி, நானும் யாழ்ப்பாண இந்துக்கல்லூரியில் விடுதியில் இருந்து படிச்சனான்; அங்க உவனை விட்டிடாதை, கொண்டுபோய் பருத்துறை ஹார்ட்லியில ஹாஸ்டலில போட்டுவிடு எண்டிட்டார். பிறகென்ன தண்ணியில்லா காட்டுக்கு மாற்றப்பட்ட அதிகாரி மாதிரி ஹாஸ்ட்டல் வாழ்க்கை 2 வருடம். ஹாஸ்ட்டல் எண்டால் அது இரண்டுமாடி டோமற்றறி வகை. மேல் மாடியில் A/L மற்றும் சில O/L மாணவர்கள். கீழ் மாடியில் ஜூனியர் மாணவர்கள். இனி சொல்லப்போற விவகாரங்களை இதயம் பலவீனமானவர்கள் வாசிக்கவேண்டாம்.
யாராவது ஒரு மாணவனை கொண்டு வந்து பெட்டி படுக்கை எல்லாம் வைத்துவிட்டு வார்டனுடன் அவர்கள் அதிபரை பார்க்க போய்விடுவார்கள். நாங்கள் அதுக்கிடையில் எங்கள் கைவரிசையை காட்டி விடுவோம். எந்த பூட்டையும் ஒரு கீறல் இல்லாமல் திறக்கும் கில்லாடியான "ஒருவர்" திறந்து விட, பெட்டியில் இருக்கும் முட்டை மா, பொரிவிளாங்காய், எள்ளுப்பாகு எல்லாம் வானரப்படை கொள்ளை அடிச்சு சாப்பிட்டு போத்தல்களை கழுவியும் வைச்சு திரும்ப பூட்டியும் வைச்சிடுவாங்கள். இது போதாதென்று அந்த மாணவன் வந்தவுடன் அவனை பக்கத்தில வைச்சுக்கொண்டே அந்த கட்டிலிலே முன்பு ஒருவன் தூக்கு மாட்டி செத்தவன் எண்டு அவனுக்கு கேக்கிறமாதிரி சொல்லி பின்பு பயப்பிடாதை எண்டு ஆறுதலும் சொல்வார்கள். அநேகமாக இதெல்லாம் விளையாட்டாகவே போயிடும். சிலவேளைகளில் அதிபர் WNS Samuel இடம் இப்படியான சில குற்றச்சாட்டுக்கள் போய் விடும். அவர் ஒருவருக்கும் அடிக்கமாட்டாரெண்டாலும் அவரின் பேச்சு உணர்ச்சிபூர்வமாக எங்களுக்கு கண்ணால் தண்ணி வர வைக்கும். இந்தக்குழப்படியெல்லாம் bullying என்ற வகை என்று சத்தியமாக வெளிநாட்டுக்கு வரும் வரை உணர்ந்ததே இல்லை.
விடுதியில் இருந்த காலத்தில் வார்டன் மகேசன், அருமைநாயகம் சேர் ஆகியோரை ஏமாத்தி வட்டப்பாறைக்கு குளிக்க, நண்டு பிடிக்க போறது, இரவில் மதில் பாய்ந்து நெல்லியடி காந்தி சினிமாவில் அடல்ட்ஸ் ஒன்லி படம் பாக்கிறது, ஹாஸ்ட்டல் கிணத்துக்க குதிச்சு நீந்திறது, விடிய 4 மணிக்கு வியாபாரி மூலையிலுள்ள வர்ணத்தின் வீட்டுக்கு பௌதீகவியல் பாட டியூசனுக்கு போகும்போது போற வழியெல்லாம் குழப்படி பண்ணிக்கொண்டு போறதெண்டு எங்கள் திருகுதாளங்கள் ஒரு 'எல்லைக்குள்ளே தான்' இருந்தன.
ஹார்ட்லியிலிருந்து நேரடியாக யாழ்ப்பாணக்கல்லூரிக்கு போனபோது அது முற்றிலும் வேறுபட்ட உலகமாக இருந்தது. சுவாரசியமான வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரி வாழ்க்கை பற்றி எனது அடுத்த பதிவில்.

படம்: நாங்கள் இருந்த விடுதி குண்டுத்தாக்குதல்களால் சேதமடைந்து விட்டது. இது ஹார்ட்லி பழைய மாணவனும் ஜெர்மனியில் தொழிலதிபராகவும் அரசியல்வாதியாகவும் இருக்கும் இயன் கரண் அவர்களால் கட்டி கொடுக்கப்பட்ட புதிய விடுதி.


No comments:

Post a Comment

கலாநிதி நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்: விளையாட்டு, கல்வி, மனிதாபிமானத்தின் சிகரம்

கலாநிதி  நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்: விளையாட்டு, கல்வி, மனிதாபிமானத்தின் சிகரம் கலாநிதி குமாரவேலு கணேசன் (STEM-Kalvi) ஏப்ரல் 18, 2024 அன்று,...