Monday, June 12, 2023

மலரும் புலத்து நினைவுகள் -02

----------------------------------------------
இந்திய அமைதி காக்கும் படை (IPKF) என்ற பெயரில் கிழட்டு நரி(old Fox) என்று பலராலும் வர்ணிக்கப்படும் ஜே ஆர் ஜெயவர்தனாவால் ஜூலை 1987 இல் இலங்கை இந்திய ஒப்பந்தம் என்ற பெயரில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு மே 1990 இல் இலங்கையை விட்டு போகும் வரை நடந்த சம்பவங்கள் பற்றியது இப்பதிவு.
வடமராட்சி ஒப்பரேஷன் என்ற வடமராச்சியை கைப்பற்றுவதற்கான போர் நடந்துகொண்டிருக்கும்போது தமிழ்நாட்டில் இருந்து கிளம்பிய எதிர்ப்பலைகளை சாட்டாக வைத்து ராஜீவ் காந்தி (இந்திரா காந்தி அம்மையார் edited) ஒப்பரேசன் பூமாலை என்றொரு விமானத்தில் இருந்து நிவாரணப்பொதிகளை போடும் திட்டத்தை நிறைவேற்றி இலங்கையை அடிபணிய வைக்க நினைத்தார். அதை JR இலாகவமாக விடுதலை இயக்கங்களுக்கு எதிராக இந்தியாவை திருப்புவதற்கு பாவித்தார்.
இந்திய இராணுவம் வந்ததில் இருந்து இந்திய செஞ்சிலுவை சங்கம் வடக்கு கிழக்கில் நிவாரண நடவடிக்கைகளை ஆரம்பித்து நடாத்தி வந்தது. அவர்களுடன் ஒரு மாதமளவில் தொண்டராக பல பல்கலைக்கழக நண்பர்களுடன் வடக்கின் பல பகுதிகளுக்கும் சென்று நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டோம்.
11ம் திகதி ஒக்டொபர் மாதம் 1987 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தின் 13 ஆவது சீக்கிய ரெஜிமெண்டின் 50 பேரைக்கொண்ட பரா கொமாண்டோக்கள் எமது பல்கலைக்கழக மைதானத்தில் நடுச்சாமத்தில் Mi 8 ஹெலிகளில் இருந்து இறக்கப்பட்டத்தில் இருந்து விடுதலைப்புலிகளுக்கும் IPKF க்கும் நேரடிச்சண்டை ஆரம்பமானது. இது நான் நேரடியாக பார்த்த ஒரு சம்பவம். இதற்கு நானே நேரடி சாட்சி.
அங்கு ஏன் 50 பரா கொமாண்டோக்களை நடுச்சாமத்தில் ஹெலியில் இருந்து இறக்கிவிட்டனர் என்பது பலருக்கு புதிராக இருந்தாலும் அதற்கு பல காரணங்களை சொல்வார்கள்.
1. பிரபாகரன் கொக்குவிலில் உள்ள ஒரு முகாமில் பல தளபதிகளுடன் இருந்ததாகவும் அவரையும் அவரின் தளபதிகளையும் உயிருடன் பிடிப்பதற்கு கொமாண்டோக்கள் இறக்கப்பட்டதாக ஒரு கதை.
2. அவர்கள் பல்கலைக்கழக கட்டிடங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தவுடம் மேலும் பல கொமாண்டோக்கள் இறக்கப்பட்டு படிப்படியாக யாழ் நகரை கைப்பற்றுவது தான் திட்டம் என்று ஒரு கதையும் உள்ளது.
எது எப்படியாயினும், கொமாண்டோக்கள் இறக்கப்படப்போவது புலிகளுக்கு முதல் நாளே தெரியவந்துவிட்டது. இராமநாதன் விடுதி, மற்றும் குமாரசாமி விடுதியில் இருந்து மாணவிகளும் மாணவர்களும் வெளியேற்றப்பட்டு விமான எதிர்ப்பு துப்பாக்கிகள் பூட்டப்பட்டதை நான் நேரடியாக பார்த்தேன். ஆனால் சரியான காரணம் எங்களுக்கு சொல்லப்படவில்லை. அன்றிரவு நிலவு வெளிச்சத்தில் இறக்கப்பட்ட பரா கொமாண்டோக்கள் 35 பேர் குருவி சுடப்படுவது போல் சுடப்பட்டு இறந்தனர். அதில் ஒருவர் உயிருடன் பிடிக்கப்பட்ட்டார். அதில் இருந்து தப்பி சென்ற சிலர் பிரம்படி லேனில் அன்று தங்கியிருந்த எனது நல்ல நண்பனும் சென் ஜோன்ஸ் பழைய மாணவனும் கோப்பாயை சேர்ந்தவருமான இன்பராஜ் உட்பட எனது சக 3 பல்கலைக்கழக மாணவர்களை கத்தியால் குத்தி கொன்றார்கள். மேலும் பலர் இவர்களை மீட்க பலாலியில் இருந்து தண்டவாளத்தால் கவசவாகனத்தில் வந்த டெல்டா போர்ஸ் படையால் கொல்லப்பட்டு அவர்களின் மீது கவச வாகனம் (Tank) ஏற்றி சென்றார்கள்.


ஒவ்வொரு நாளும் காலையில் ஹோட்டல் அசோக்கின் முன்பாக செஞ்சிலுவை சங்க அதிகாரிகளை சந்தித்து அவர்களின் வாகனங்களில் பல பகுதிகளுக்கும் சென்று நிவாரணம் கொடுப்பதுதான் எமது வேலை. புலிகளுடனான சண்டை தொடங்குவரை எல்லாம் நன்றாகவே போய்க்கொண்டிருந்தது.
ஒரு நாள் வரணியில் ஒரு பாடசாலையில் வைத்து நிவாரணம் வழங்கும்போது SLAF ஹெலி சுடத்தொடங்கிவிட்டது. உடனே எமது சிறிய மினிபஸ்/மினிவான் ஐ எடுத்துக்கொண்டு அவசரமாக வெளியேறினோம். எமது கண்ணுக்கு முன்பாகவே ஹெலி சூட்டினால் சுட்டிபுரம் கோவிலில் முன்பாக அமைத்திருந்த கிடுகுக் கொட்டகை தீப்பற்றியெரிந்தது. இந்திய அதிகாரிகள் உட்பட நாம் எல்லோரும் தப்பினோம் பிழைத்தோம் என்று ஓடி வந்து சேர்ந்தோம். இவ்வளவுக்கும் எமது வாகனத்தில் சிவப்பு க்ரோஸ் அடையாளம் இருந்தது.

குமாரவேலு கணேசன்
04/03/2020

No comments:

Post a Comment

கலாநிதி நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்: விளையாட்டு, கல்வி, மனிதாபிமானத்தின் சிகரம்

கலாநிதி  நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்: விளையாட்டு, கல்வி, மனிதாபிமானத்தின் சிகரம் கலாநிதி குமாரவேலு கணேசன் (STEM-Kalvi) ஏப்ரல் 18, 2024 அன்று,...