Saturday, July 1, 2023

யூதர்களின் வரலாறு -20

இருபதாம் நூற்றாண்டு தான் தாயக பூமியில் இருந்து 19 நூற்றாண்டுகளுக்கு முன்பாக விரட்டப்பட்ட யூதர்களின் வாழ்வில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்திய நூற்றாண்டு என்று சொல்லலாம். இதற்காக அவர்கள் பட்ட துன்பங்கள் சொல்லொணாதவை.
20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் 5 மில்லியன் யூதர்கள் உருசியப்பேரரசிலும், 3 மில்லியன் யூதர்கள் போலந்திலும், 2 மில்லியன் யூதர்கள் ஒஸ்ரியா-ஹங்கேரியிலும் , 1.75 மில்லியன் யூதர்கள் அமெரிக்காவிலும் மேலும் பல இலட்சம் யூதர்கள் ஜேர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் வாழ்ந்துகொண்டிருந்தனர். இவர்களில் பலர் இக்காலத்தில் அரசியலிலும், வர்த்தகத்திலும் உச்சத்தை தொட்டுவிட்டனர்.
கடந்த அத்தியாயத்தில் சொல்லப்பட்டது போல சுவிட்சலாந்தின் பாசெல் மாநாட்டின் அறுவடையாக நிறுவப்பட்ட நில வங்கியினூடாக பாலஸ்தீனியர்களின் நிலங்களை அறமற்ற விதத்தில் வாங்கிக் குவிக்க ஆரம்பித்தனர். பல உலக நாடுகளில் வாழ்ந்துகொண்டிருந்த செல்வந்தர்களிடம் இருந்து சேகரித்த நிதியை வைத்து நடாத்தப்பட்ட இந்த வங்கி பாலஸ்தீன பிரதேசத்தில் நிலம் வாங்க விரும்பிய யூதர்களுக்கு குறைந்த விலையிலும், குறைந்த வட்டிக்கடன்களை வழங்கியும் நிலங்களை விற்றது. அதே நேரத்தில் நிலங்களின் பத்திரத்தை வாங்கிக்கொண்டு அரேபியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் நிலவங்கி கடன்களை அள்ளி வழங்கியது. கடன்களை மீளச் செலுத்த முடியாதவர்கள் கடன் பொறிக்குள் அகப்பட்டு தமது நிலங்களை இழந்தனர். சட்டத்தின் படி இவை சரியென்றாலும் அவை அறமற்ற செயலாக வரலாற்றாசிரியர்களால் பார்க்கப்படுகின்றது.
1914 இல் ஆரம்பமான முதலாம் உலகப்போரும், 1917 இல் ஆரம்பமான உருசியப்புரட்சியும், யூதர்களின் வரலாற்றில் மிக முக்கிய திருப்பு முனையாகும்.
படம்: பிரித்தானியாவால் முதலாம் உலகப்போரில் பாவிக்கப்பட்ட Mark V Tank


முதலாம் உலகப் போர் என்பது வரலாற்றின் உலகளாவிய சண்டைகளில் கிட்டத்தட்ட 1 கோடி இராணுவ உயிரிழப்பையும், மேலும் 2 கோடி இராணுவத்திற்கு காயங்களும் ஏற்படுத்திய போர் ஆகும். பெரும்பாலான ஐரோப்பா, உருசியப் பேரரசு, அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் உதுமானியப் பேரரசு ஆகியவை இதில் கலந்து கொண்டன. பிரான்சு, உருசியா மற்றும் பிரிட்டன் என்பன நேச நாட்டு அணியிலும் ஜேர்மனி, ஆஸ்திரியா-ஹங்கேரி, இத்தாலி என்பன மைய சக்தி அணியிலும் போர் ஆரம்பிக்கும் போது இருந்தன. ஆஸ்த்திரியா-ஹங்கேரியின் இளவரசரான பிரான்சு பெர்டினான்டை ஒரு செர்பிய இளைஞன் அரசியல் கொலை செய்ததைத் தொடர்ந்து ஆரம்பித்த இப்போர் படிப்படியாக அண்டைய நாடுகளை உள் இழுத்து இறுதியில் அமெரிக்காவையும் இழுத்து விட்டிருந்தது.
யூதர்கள் இரண்டு அணியிலும் நின்று போரிட்டும், தமது அறிவையும், செல்வத்தையும் அள்ளி இறைத்தும் கொண்டிருந்தனர். அருச்சுனனுக்கு கிளியின் மீதுதான் கண் என்பது போல எவர் வென்றாலும் அவர்களின் உதவியுடன் இஸ்ரேலை உருவாக்குவது தான் அவர்களின் முழு நேர சிந்தனையாக இருந்தது என்றாலும் ஒவ்வொரு அணியிலும் அவர்களை சந்தேகக்கண் கொண்டே பார்த்தனர். அதே நேரத்தில் முழு ஐரோப்பாவையும் வங்குறோத்தடைய வைக்க யூதர்களின் சதியே இந்த போர் என்றும் அவர்களை குற்றம் சாட்டினர்.
முதலாம் உலகப்போரில் யூதர்களின் பங்களிப்பையும் பாதிப்பையும் பற்றி அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.
—------------------
யூத வினோதங்கள்
ஒரு திருமணமாகாத பெண் ஒரு மேசையின் மூலையில் அமர்ந்தால் அடுத்த 7 வருடங்களுக்கு அவருக்கு திருமணமாகாது என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்கின்றது. விருந்துகளின் போது திருமணமாகாத ஒரு பெண் அப்படியான ஒரு இடத்தை தெரிவு செய்ய மாட்டார்.
—-------------------
-Kumaravelu Ganesan -

No comments:

Post a Comment

கலாநிதி நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்: விளையாட்டு, கல்வி, மனிதாபிமானத்தின் சிகரம்

கலாநிதி  நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்: விளையாட்டு, கல்வி, மனிதாபிமானத்தின் சிகரம் கலாநிதி குமாரவேலு கணேசன் (STEM-Kalvi) ஏப்ரல் 18, 2024 அன்று,...