Monday, July 31, 2023

 

தொழிற்புரட்சி 4.0 நோக்கி


அண்மையில் அவுஸ்திரேலியாவிலும், இந்தியாவிலும், இலங்கையிலும் உயர்தரத்திற்கான பரீட்சை முடிவுகள் வந்திருந்தன. மாணவர்கள்  எந்தத் துறை தங்களுக்கு சரியானது என சிந்திக்கத் துவங்கியிருப்பர். மாணவர்களின் வாழ்க்கைப் பயணத்தில் ஒரு முக்கியமான திருப்புமுனையை இந்த தருணம் தான் தீர்மாணிக்கிறது. இனி எந்தப் படிப்பு, எந்த வேலைக்கு வழிவகுக்கும் என்பதைத் தீர்மானிக்கும் கல்விதான் உயர்கல்வி. மாணவர்களிடம் உங்கள் துறை  எதிர்காலம் குறித்து என்ன முடிவு செய்துள்ளீர்கள் என்று கேட்கும் போது பலருக்கும் அது ஒரு முடிவு தெரியாத குழப்பமான ஒன்றாகவே இருக்கிறது. குறிப்பாக இன்றைய தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி வேகமாக வளர்ந்து வரும் நாட்களில் புதிய  துறைகளும், வேலைத்  தேவைகளும் மாறிக்கொண்டு வருகின்றன.


குறைந்த சத வீத மாணவர்கள் மட்டுமே தங்கள் எதிர்காலம் தொடர்புடைய தெளிவான கண்ணோட்டத்துடனும் அதற்கான தயாரிப்புகளிலும் ஈடுபடுகிறார்கள். கல்லூரிகளில் பாடப் பகுதியை முடிப்பதற்கே போதுமான நேரம் இல்லாத நிலையில் எதிர்கால வேலைவாய்ப்புத்துறை  குறித்த சில முக்கியத் தகவல்களை மாணவர்களிடம் கூறுவதற்கான சாத்தியமும் குறைவு தான். அப்படிப்பட்ட சில முக்கிய அம்சங்களை உங்களுக்காகத் தருவதுதான் இந்த கட்டுரையின் நோக்கமாகும். உங்கள் படிப்பு உங்கள் எதிர்கால எல்லைகளைக் குறுக்குவதில்லை. கல்லூரியில் நாம் என்ன பிரிவில் பட்டம் முடித்தோமோ, அதில் தான் நமக்கு எதிர்காலம் உள்ளது என்ற சிந்தனை நம்மில் பலருக்கும் உள்ளது. ஆனால் இன்றைய வேலை வாய்ப்பு சந்தையில் இது முற்றிலும் தவறான கருத்தாகும்.

துறை மாற்றி நாம் இயங்குவதற்கு தேவைகளான தகவல் பரிமாற்றத் திறன், துறை சார்ந்த அறிவு போன்றவற்றை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். பௌதிகம், இரசாயனம், கணிதம் போன்றவற்றை முடித்துவிட்டு வங்கிப் பணிகளில் அமரவும், வணிகவியலை முடித்துவிட்டு கணினித்துறையில் பணியில் அமர்வதும் சாத்தியம் தான் என்ற உண்மையை உணர வேண்டும்.

நமது எதிர்கால வேலையை தேர்ந்து எடுப்பதில் கல்லூரிப் படிப்புக்கு முக்கிய பங்கு உண்டு என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் மாறி வரும் இன்றைய வேலை வாய்ப்பு சந்தையில் எப்படியான வேலைகள் இன்னும் 5-10 வருடங்களில் முக்கிய இடத்தில் இருக்கும் என்று தெரிந்திருப்பது அவசியமானதாகும்.  இதை முழுவதும் நம்பாமல் உங்கள் பகுத்தறிவையும் உபயோகித்து உங்கள் வளமான எதிர்காலத்தை அமைத்துக்கொள்ளுங்கள்.
 

முதல் தொழில்துறை புரட்சி 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இயந்திரமயமாக்கலுடன் இங்கிலாத்தில் தொடங்கியது. இரண்டாவது தொழில்துறை புரட்சி 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில்  ஹென்றி ஃபோர்ட் பெருமளவில் கார் உற்பத்தியை தொடங்கியபோது வந்தது. முதல் இரண்டு தொழில்துறை புரட்சிகள் மக்களை பணக்காரர்களாகவும் நகரவாசிகளாகவும் ஆக்கின.  தொழில்களை இலத்திரனியல்  மயப்படுத்துவதால்  மூன்றாவது தொழிற் புரட்சி நடந்து வருகிறது. இனி வரப்போவது தான் 4வது தொழிற்புரட்சி. இது ஏற்கனவே தொடங்கி விட்டது என்றே சொல்லலாம்.
எதிர்காலம் ஒருவர் கையாளக்கூடியதை விட வேகமாக நெருங்குகிறது! 1998 ஆம் ஆண்டில், கொடாக் நிறுவனம் 170,000 ஊழியர்களைக் கொண்டிருந்ததுடன்  85% புகைப்படக் காகிதங்களை உலகளவில் விற்றது. ஒரு சில ஆண்டுகளில், அவர்களின் வணிக மாதிரி மறைந்துவிட்டதுடன் நிறுவனம் கிட்டத்தட்ட திவாலாகும் நிலைமைக்கே சென்றது (Chapter 11 bankruptcy). கொடாக் நிறுவனத்திற்கு நடந்தது போலவே அடுத்த 5-10 ஆண்டுகளில் நிறைய தொழில்களில் நடக்கும்.  மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் ஒருபோதும் பிலிம் சுருள்களில் புகைப்படங்கள் எடுக்க மாட்டீர்கள் என்று 1998 இல் நினைத்தீர்களா? ஆரம்பத்தில் 10 KB  பிக்சல்கள் மட்டுமே இருந்த டிஜிட்டல் கமெராக்கள் மூரின் சட்டத்தைப் பின்பற்றி மிக வேகமாக வளர்ந்து அனைத்து அதிவேக தொழில்நுட்பங்கள் போல  சில குறுகிய ஆண்டுகளில் முக்கிய சாதனமாக மாறியது. செயற்கை நுண்ணறிவு, சுகாதாரம், தானியங்கி  மற்றும் மின்சார கார்கள், கல்வி, 3D  பிரிண்டிங், விவசாயம் மூலம் இது இப்போது மீண்டும் மிக வேகமாக நிகழும். 

தொழிற்புரட்சி 4.0 பற்றி சில உண்மைகள் 

வாகனங்கள் பழுதுபார்க்கும் கடைகள் மறைந்துவிடும்: ஒரு பெட்ரோல் / டீசல் இயந்திரம் 20,000 தனிப்பட்ட பாகங்களைக் கொண்டுள்ளது. ஒரு மின்சார மோட்டருக்கு 20 பாகங்கள் மட்டுமே. மின்சார கார்கள் வாழ்நாள் உத்தரவாதங்களுடன் விற்கப்படுகின்றன மற்றும் அவை விற்பனையாளர்களால் மட்டுமே சரிசெய்யப்படுகின்றன. மின்சார மோட்டரை அகற்றி மாற்ற 10 நிமிடங்கள் மட்டுமே ஆகும். பழுதுபட்ட  மின்சார மோட்டர்கள் திருத்துமிடங்களில்  பழுதுபார்க்கப்படாமல்  அவை பிராந்திய பழுதுபார்க்கும் கடைக்கு அனுப்பப்பட்டு அங்கு  அவை ரோபோக்களால் பழுதுபார்க்கப்படுகின்றன.
பெட்ரோல் நிரப்பும் நிலையங்கள் போய்விடும்.: தெரு மூலைகளில் மின்சாரம் வழங்கும் மீட்டர்கள் இருக்கும். நிறுவனங்கள் மின் ரீசார்ஜிங் நிலையங்களை நிறுவும்; உண்மையில், அவை ஏற்கனவே வளர்ந்த நாடுகளில் தொடங்கப்பட்டுள்ளன.  புத்திசாலிகளான பெரிய வாகன உற்பத்தியாளர்கள் ஏற்கனவே மின்சார கார்களை மட்டுமே உருவாக்கும் புதிய ஆலைகளை உருவாக்க பணத்தை முதலீட்டுள்ளன.
நிலக்கரி, பெட்ரோலிய  நிறுவனங்களும் தொழில்களும்  போய்விடும்:  பெட்ரோலியத்துக்காக துளையிடுவது நிறுத்தப்படும். எனவே ஒபெக்கும் முக்கியமாக மத்திய கிழக்கும்  சிக்கலில் உள்ளன.
புதுபிக்கத்தக்க சக்தி வளங்கள் : வீடுகள் பகலில் அதிக மின்சார சக்தியை உற்பத்தி செய்து சேமித்து வைத்து மீதியை மின் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும்.  நிறுவனங்கள்  அதை சேமித்து அதிக மின்சாரம் பயன்படுத்தும்  தொழில்களுக்கு விநியோகிக்கும்.  
தனியார் கார்கள்:  எதிர்கால  குழந்தைகள் தற்போதைய கார்களை  அருங்காட்சியகங்களில்  மட்டுமே பார்க்கும். 
மென்பொருள் : அடுத்த 5-10 ஆண்டுகளில்  பெரும்பாலான பாரம்பரிய தொழில்களை மென்பொருள் சீர்குலைக்கும்.  இப்போது உள்ள உலகின் மிகப்பெரிய டாக்ஸி நிறுவனமான ஊபரிடம்   எந்த கார்களும் இல்லை. அது ஒரு மென்பொருட்கருவி மாதிரமே . எந்த ஹோட்டல் சொத்துக்களும் சொந்தமாக இல்லாமல் ஏர்பிஎன்பி (Airbnb) இப்போது உலகின் மிகப்பெரிய ஹோட்டல் நிறுவனமாக உள்ளது.
செயற்கை நுண்ணறிவு(AI): கணினிகள் உலகைப் புரிந்துகொள்வதில் அதிவேகமாக முன்னேறி வருகின்றன. 2017இல், ஒரு கணினி உலகின் சிறந்த செஸ் போன்றதொரு விளையாட்டான Go - விளையாட்டு வீரரை வென்றது. இது எதிர்பார்த்ததை விட 10 ஆண்டுகளுக்கு முன்கூட்டியே நடந்துவிட்டது. 
ஐபிஎம் வாட்சன் (IBM Watson) மென்பொருள் காரணமாக அமெரிக்காவில் இளம் வழக்கறிஞர்களுக்கு ஏற்கனவே வேலை வாய்ப்புக்கள் குறைந்து விட்டன. மனிதர்கள் மணிக்கணக்காக செலவு செய்து 70% சரியாக செய்யும் சட்ட ஆலோசனைகளை வாட்சனை பாவித்து சில வினாடிகளில் 90% சரியாக செய்யலாம். எனவே, நீங்கள் சட்டம் படித்தால், உடனடியாக நிறுத்துங்கள். எதிர்காலத்தில்  எல்லாம் அறிந்த வல்லுநர்கள் தவிர  90% குறைவான வழக்கறிஞர்கள்  மாத்திரமே இருப்பார்கள். புற்றுநோயைக் கண்டறிய  வாட்சன் மென்பொருள் ஏற்கனவே உதவுகின்றது.  இது மனிதர்களைவிட 4 மடங்கு துல்லியமானது.
பேஸ்புக் இப்போது மனிதர்களை அடையாளம் காணும் மென்பொருளைக் கொண்டுள்ளது. இது முகங்களை மனிதர்களை விட சிறப்பாக அடையாளம் காண்கின்றது . 2030 ஆம் ஆண்டில், கணினிகள் மனிதர்களை விட புத்திசாலித்தனமாக மாறும் என்று எதிர்வுகூறப்படுகின்றது. 
ChatGPT போன்ற பல மென்பொருட்கள் இன்று சாதாரண மக்களாலேயே பாவிக்கப்படுகின்றது. 


தானியங்கி  கார்கள்: விரைவில் சாரதிகள் இல்லாத கார்கள் பொதுமக்களுக்கு பாவனைக்கு வரும்.  விரைவில் வாடகைக்கார் தொழில் பாதிக்கப்படத் தொடங்கும். நீங்கள் இனி ஒரு கார் வைத்திருக்க தேவையில்லாதநிலை உருவாகும். இன்றைய மிகச் சிறிய குழந்தைகள் ஒருபோதும் சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற மாட்டார்கள் என்பதுடன்  ஒருபோதும் கார் வைத்திருக்க மாட்டார்கள். 
ஏறக்குறைய 90-95% குறைவான கார்களே நகரங்களுக்கு தேவைப்படுமாதலால் இது நகரங்களை மாற்றிவிடும். முன்னாள் கார் நிறுத்தும்   இடங்களை பூங்காக்களாக மாற்றலாம்.   குடிபோதையில் வாகனம் ஓட்டுவது உட்பட உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 1.2 மில்லியன் மக்கள் கார் விபத்துக்களில் இறக்கின்றனர். இப்போது ஒவ்வொரு 100,000 கி.மீ க்கு  ஒரு விபத்து நடைபெறுகின்றது.  தானியங்கி கார்களில்  10 மில்லியன் கி.மீ க்கு  1 விபத்தே நடைபெறும். இது ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் ஒரு மில்லியன் உயிர்களைக் காப்பாற்றும். பெரும்பாலான கார் நிறுவனங்கள் மூடப்பட்டு விடும் என்பதில் சந்தேகமில்லை. பாரம்பரிய கார் நிறுவனங்கள் பரிணாம அணுகுமுறையை முயற்சித்து ஒரு சிறந்த காரை உருவாக்கும் அதே நேரத்தில் டெஸ்லா, அப்பிள், கூகிள் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் புரட்சிகர அணுகுமுறையைச் செய்து சக்கரங்களில் கணினியை உருவாக்கும்.
விபத்துக்கள் இல்லாமல், செலவுகள் மலிவாக மாறும்போது காப்புறுதி  நிறுவனங்களுக்கு பாரிய சிக்கல் ஏற்படும். அவர்களின் கார் காப்புறுதி  வணிக மாதிரி இல்லாமல் போய்விடும்.
வீடு-நிலம் வியாபார நிலவரங்கள் எல்லாம் தலைகீழாக மாறும். ஏனென்றால், நீங்கள் பயணிக்கும்போது வேலை செய்ய முடிந்தால், மக்கள் தங்கள் விலைகூடிய வீடுகளை  கைவிட்டு மிகவும் அழகான மலிவு விலையுள்ள பகுதிகளுக்குச் செல்வார்கள். அத்துடன் வீட்டிலிருந்தே பல வேலைகளையும் அதி வேக இணையத்தை பாவித்து செய்ய முடிவதால் வேலைக்கு கிட்டவோ அல்லது போக்குவரத்து வசதியுள்ள இடங்களில் குடியிருக்கவோ தேவையில்லை. 
மின்சார வாகனங்கள் : 2030 ஆம் ஆண்டில் மின்சார வாகனங்கள் பிரதானமாக மாறும். நகரங்கள் குறைந்த சத்தமாக இருக்கும், ஏனெனில் அனைத்து புதிய கார்களும் மின்சாரத்தில் இயங்கும்.
மின்சார வாகனங்களால் நகரங்களில்  மிகவும் தூய்மையான காற்று இருக்கும். 
மலிவான மின்சாரம்: மின்சாரம் நம்பமுடியாத மலிவாகவும் சுத்தமாகவும் மாறும். சூரிய உற்பத்தி 30 ஆண்டுகளாக ஒரு அதிவேக வளர்ச்சியில் உள்ளதாயினும்  இப்போது அதன் அசுர வளர்ச்சியை நீங்கள் நேரடியாகவே காணலாம். நிலப்பற்றாக்குறையாக உள்ள இடங்களுக்காக மிதக்கும் சூரிய கலங்கள் புதிய வரவாகியுள்ளன. கடந்த ஆண்டு பெட்ரோலிய சக்தியை விட உலகளவில் அதிக சூரிய சக்தி நிறுவப்பட்டது.  எரிசக்தி நிறுவனங்கள் வீட்டு சூரிய மின்கலங்களில் இருந்து போட்டியைத் தடுக்க  தீவிரமாக முயல்கின்றன.  
சுத்தமான நீர்:  மலிவான மின்சாரம் இருந்தால் மலிவாக  ஏராளமான நீர் சுத்திகரிக்கமுடியும். உவர் நீரை நன்னீராக்குவதற்கு இப்போது ஒரு கன மீட்டருக்கு 2 கிலோவாட் மணி (2KWh) மின்சாரம் மட்டுமே தேவைப்படுகிறது. பெரும்பாலான இடங்களில் எங்களிடம்உவர்நீர் இருந்தாலும், எங்களிடம் குடிநீர் மட்டுமே குறைவாகவுள்ளது. கிட்டத்தட்ட எந்த செலவும் இல்லாமல், ஒவ்வொருவரும்  அவர் விரும்பும் அளவுக்கு சுத்தமான தண்ணீரை பெறுவது  சாத்தியமாகுமாக இருந்தால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.
தொழில்துறை புரட்சி 4.0 க்கு வருக. அதிவேக யுகத்திற்கு வருக !!





No comments:

Post a Comment

கலாநிதி நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்: விளையாட்டு, கல்வி, மனிதாபிமானத்தின் சிகரம்

கலாநிதி  நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்: விளையாட்டு, கல்வி, மனிதாபிமானத்தின் சிகரம் கலாநிதி குமாரவேலு கணேசன் (STEM-Kalvi) ஏப்ரல் 18, 2024 அன்று,...