Friday, June 9, 2023

யூதர்களின் வரலாறு-16

----------------------------
கடந்த அத்தியாயத்தில் எப்படி 14ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஏற்பட்ட பெருந்தொற்று நோயான பிளேக்கிற்கு யூதர்கள் தான் காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டு பெருந்தொகையான யூதர்கள் கொல்லப்பட்டும், நாடுகளை விட்டு விரட்டப்பட்டும் கொடுமைக்குள்ளாக்கப்பட்டனர் என்று பார்த்தோம்.
15ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் யூதர்கள் பெருமளவில் வாழ்ந்து வந்த ஸ்பெயின், போர்த்துக்கல் மற்றும் இத்தாலி நாடுகளில் இருந்தும் யூதர்கள் விரட்டப்பட்டனர். ஸ்பெயினில் இருந்து மட்டும் இரண்டு லட்சம் யூதர்கள் விரட்டப்பட்டு போலந்தில் தஞ்சமடைந்தனர். ஐரோப்பாவெங்கும் இருந்து விரட்டப்பட்ட பெரும்பாலான யூதர்கள் போலந்திலேயே தஞ்சமடைந்ததால் ஏறக்குறைய 50% யூதர்கள் இக்காலப்பகுதியில் போலாந்திலேயே வாழ்ந்தனர்.
இப்படி ஐரோப்பாவெங்கும் பந்தாடப்பட்ட யூதர்களுக்கு அப்பொழுது பிரபல்யமாக விளங்கிய துருக்கியை மையமாக கொண்ட துருக்கிய இஸ்லாமிய பேரரசான ஒட்டோமான் பேரரசு அபயக்கரம் நீட்டியது. ஸ்பெயினுக்கும் போர்த்துக்கல்லுக்கும் கப்பல் அனுப்பி அகதிகளை தனது பேரரசுக்கு வரவழைத்து குடியமர்த்தினான் அப்போதைய ஒட்டோமான் சக்கரவர்த்தி இரண்டாவது பெயசிட் (Bayezid II). 14ம் நூற்றாண்டில் இருந்து கிட்டத்தட்ட 20ம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை நீண்ட இந்த ஒட்டோமான் பேரரசைப்பற்றி சிறிது சுருக்கமாக பார்த்துச்செல்வோம்.
இப்பேரரசானது 1299 ஆம் ஆண்டு துருக்கிய வம்சத்தைச் சேர்ந்த உஸ்மான் பே என்பவரின் தலைமையின் துருக்கியில் உருவாக்கப்பட்டு சுல்தான் இரண்டாம் முஹம்மதால் கி.பி.1453இல் கைப்பற்றப்பட்ட பின்னர் ஒட்டோமான் பேரரசாக மாற்றப்பட்டது.
இப்பேரரசு 16-17ம் நூற்றாண்டுகளில் உச்ச கட்டத்தில் இருந்த போது இப்பேரரசின் ஆட்சி தென்கிழக்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு, மற்றும் வட ஆபிரிக்கா என மூன்று கண்டங்களில் மேற்கே ஜிப்ரால்ட்டர் நீரிணை முதல் கிழக்கே கஸ்பியன் கடல் மற்றும் பாரசீக வளைகுடா, ஆஸ்திரியா, சிலவாக்கியா, உக்ரேனின் பல பகுதிகள், சூடான், எரித்திரியா, தெற்கே சோமாலியா மற்றும் யமன் வரை பரவியிருந்தது. இக்காலப்பகுதியில் ஆப்கானித்தானை ஆண்டு வந்த ஹோடேக் ராஜவம்சத்துடனும் (Hotak dynasty) போருக்கு சென்று ஒட்டோமான் அரசு தோல்வியை தழுவியதை இக்காலப்பகுதியில் நினைவுகூர்வது சாலப்பொருத்தமானது. 1924இல் துருக்கியில் மன்னராட்சி முடிவுக்கு கொண்டுவரப்படும் வரை ஒட்டோமான் அரசு நீடித்தது.
இஸ்ரேலும் ஒட்டோமான் பேரரசின் ஆளுகைக்கு உட்பட்டுவிட்டதால் அங்கும் யூதர்கள் மீண்டும் குடியேறத்தொடங்கினர். ஜெருசலேத்தில் 15ம் நூற்றாண்டின் பிற்பகுதியான 1488 இல் 70 ஆக இருந்த யூத குடும்பங்கள் 16ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் 1500 குடும்பங்களாக அதிகரித்தது. இஸ்ரேலின் வடபகுதி நகரான சவிட் (Safed) இல் இது 300 இல் இருந்து 2000 ஆக மாறியது.
16ம் நூற்றாண்டில் கிறிஸ்தவ ஐரோப்பிய நாடுகளில் இருந்து துரத்தப்பட்ட யூதர்கள் ஒட்டோமான் பேரரசில் மிகவும் செல்வச்செழிப்போடும் சிறந்த கல்வியறிவோடும் துருக்கியிலும் அதன் சுற்றுப்புற நாடுகளிலும் குடியேறி வாழ்ந்தனர். அவர்கள் கொண்டுவந்த தொழில் நுட்பங்களும், கல்வியறிவும், செல்வமும் துருக்கிக்கு மிகவும் பலம் சேர்த்தது. அவர்களே முதலில் அச்சுயந்திரசாலையை துருக்கியின் தலைநகரான இஸ்தான்புல்லில் அமைத்தார்கள். துருக்கியில் வந்து குடியேறிய யூதர்கள் மிகவும் செல்வாக்குள்ளவர்களாக வளர்ந்து வங்கித்தொழிலில் முன்னணி வகித்ததுடன் அண்டை நாடுகளுக்கும் விரிவுபடுத்தினர். அவர்கள் வரும்போது தம்முடன் தமது செல்வங்களை தங்கக்கட்டிகளாக கொண்டுவந்ததாக வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனராகையால் யூதர்களை வெளியேற்றும் போது அவர்களின் செல்வங்கள் பறிக்கப்படவில்லையென்று தெரிகின்றது.
ஒட்டோமான் இஸ்லாமிய பேரரசு உச்சத்தில் இருந்த இக்காலப்பகுதியில் பல போர்களை கிறிஸ்தவ நாடுகளுடன் செய்யவேண்டியேற்பட்டதால் கல்வியில் சிறந்து விளங்கிய யூதர்களை நம்பிக்கையுடன் இராஜதந்திரிகளாகவும் ஒற்றர்களாகவும் இஸ்லாமிய மன்னர்களும் அதிகாரிகளும் பாவித்தார்கள் என்று மேலும் ஒரு குறிப்பு தெரிவிக்கின்றது.
எப்படி இருந்தபோதிலும் யூதர்கள் ஒட்டோமான் பேரரசில் சிறுபான்மையினராகவே மதிக்கப்பட்டனர் என்றும், அவர்களுக்கென்று விசேட வரிகள் விதிக்கப்பட்டதாகவும் குறிப்புக்கள் மேலும் சொல்கின்றன.
யூத விநோதங்கள்
---------------------
அதி மரபுவழி யூதர்கள் (Ultra-orthodox jews) என்பது சில நூற்றாண்டுகளாக வளர்ந்துவரும் ஒரு அதி தீவிர பிரிவாகும். இவர்களின் பழக்க வழக்கங்கள் தலிபான்களின் இறுக்கமான கட்டுப்பாடுகளுக்கு ஒத்தவை. ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமணமாகும் வரை பாலியலைப்பற்றி ஒன்றும் தெரிந்திருக்காது. ஒருவரை ஒருவர் தொட்டு கை குலுக்குவது கூட தடை செய்யப்பட்டுள்ளது. திருமணத்துக்கு முன்பாக அவர்களின் மதகுரு அவர்களுக்கு “அதை” ப்பற்றி சொல்வார். ஆயகலைகள் 64 பற்றியெல்லாம் சொல்வார் என்று எதிர்பார்க்காதீர்கள். ஒரே ஒரு கலை தான்!
படம்: The New Mosque - Istanbul, Turkey ( 17th century)
குமாரவேலு கணேசன்
19-08-2021 


No comments:

Post a Comment

கலாநிதி நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்: விளையாட்டு, கல்வி, மனிதாபிமானத்தின் சிகரம்

கலாநிதி  நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்: விளையாட்டு, கல்வி, மனிதாபிமானத்தின் சிகரம் கலாநிதி குமாரவேலு கணேசன் (STEM-Kalvi) ஏப்ரல் 18, 2024 அன்று,...