Friday, June 9, 2023

யூதர்களின் வரலாறு-17


ரோம, இஸ்லாமிய பேரரசுகளால் அவர்களின் தாயக பூமியில் இருந்து விரட்டப்பட்ட யூதர்கள் 300 ஆண்டுகால சிலுவைப்போரின் பின்னான காலத்தில் உலகமெங்கும் சிதறி வாழ்ந்துகொண்டிருந்தனர். ஆனால் எங்கு வாழ்ந்தாலும் அவர்கள் செல்வந்தர்களாக வாழ்வதைக்கண்ட ஆட்சியாளர்களும் மற்றைய இனத்தவர்களும் அவர்கள் மீது காழ்ப்புணர்வைக் காட்டினார்கள். குறிப்பாக, இயேசுவின் கொலைக்கு காரணமானவர்கள் என்ற பழிச்சொல் அவர்களை விடாமல் துரத்தியது. கிறிஸ்துவிற்கு பின்பு அவரின் சீடர்களால் உருவாக்கப்பட்ட மதம் கிறிஸ்தவம் என்று முன்பே பார்த்தோம். 6ம் நூற்றாண்டளவில் பழமைவாத கிறிஸ்தவம், கத்தோலிக்கம் என்று பிளவுபட்டு பின்பு 16ம் நூற்றாண்டில் மார்ட்டின் லூதர் என்னும் ஜேர்மானிய பாதிரியாரால் புரட்டஸ்தாந்து என்னும் சீர்திருத்தப்பட்ட கிறிஸ்தவம் தோற்றுவிக்கப்பட்டது. அவரால் எழுதப்பட்ட 95 ஆய்வுகட்டுரைகள் (Thesis) புரட்ட்சஸ்தாந்தின் அடைப்படையாகும்.
கத்தோலிக்கம், புரட்டஸ்தாந்து என்பவற்றில் பெரிய வித்தியாசம் இல்லாவிடினும் அதிகாரம் மற்றும் பாரம்பரியம் என்பவற்றில் சிறிய வித்தியாசங்கள் உள்ளன. புனித பீட்டரின் வாரிசாக கருதப்படும் பாப்பாண்டவரின் (Pope) அதிகாரத்திற்கு கத்தோலிக்க திருச்சபை வலுவான முக்கியத்துவம் அளிக்கிறது. அதேவேளை புரட்டஸ்தாந்து மதமும் அதன் பிரிவுகளும் வேதாகமத்தின் அதிகாரத்திற்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கின்றன.
முக்கியமாக, கத்தோலிக்க துறவிகள் திருமண பந்தத்தில் ஈடுபடமுடியாது. ஆனால் புரட்டஸ்தாந்து துறவிகள் திருமண பந்தந்தில் ஈடுபடலாம். இலங்கையில் 19ஆம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்ட அங்கிலிக்கன் சபை புரட்டஸ்தாந்து மதத்தின் ஒரு பிரிவாகும். American Ceylon Mission, Church of South India, Methodist Church of Ceylon, Ceylon Pentecostal Mission என்பன இலங்கையில் காணப்படும் சில புரட்டஸ்தாந்து மதப்பிரிவுகளாகும்.
மார்ட்டின் லூதர் தனது பிற்காலத்தில் யூதர்களுக்கெதிராக பெரும் பிரச்சாரத்தை செய்தார். கிறிஸ்தவ நாடுகளில் இருந்து யூதர்களை முற்றாக வெளியேற்றமுடியவில்லை என்ற கவலையில் “யூதர்களும் அவர்களின் பொய்களும்” (On the Jews and Their Lies) என்ற தலைப்பில் அவர் எழுதிய 65,000 சொற்கள் அடங்கிய ஒரு கடிதம் பிரபலமானது.
இச்செயற்பாடுகள் நம்முடைய கர்த்தருக்கும் கிறிஸ்தவ மண்டலத்திற்கும் மரியாதை செலுத்துவதற்காக செய்யப்பட வேண்டும், இதனால் நாம் கிறிஸ்தவர்கள் என்பதை கடவுள் பார்க்க வேண்டும் என்று மேலும் சொல்லும் அவர் அக்கடிதத்தில் எழுதியவற்றில் முக்கியமானவற்றைப் பார்ப்போம்.
1.யூதர்களின் ஜெப ஆலயங்களுக்கு (synogog) தீ வைக்க வேண்டும்.
2.யூதர்களின் வீடுகளும் இடித்து அழிக்கப்பட வேண்டும்.
3.யூதர்களின் புனித நூலான தோரா மற்றும் தால்முடிக் என்பவற்றை அழிக்க வேண்டும்.
4.யூதர்களின் மத போதகர்களான ரபிக்களை தடை செய்ய வேண்டும்.
5.நெடுஞ்சாலைகளில் யூதர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படக்கூடாது.
6.அவர்களுக்கு வட்டிக்கு பணம் வழங்குவது தடை செய்யப்பட வேண்டும். மேலும் வெள்ளி மற்றும் தங்கம், பணம் மற்றும் பொக்கிஷங்கள் அனைத்தையும் அவர்களிடமிருந்து பறிக்க வேண்டும்.
7.இளம், வலிமையான யூத ஆண் பெண்களின் கைகளில் கோடாரி,, மண்வெட்டி ஆகியவற்றை கொடுத்து அவர்களுக்கான உணவை அவர்களே வியர்வை சிந்தி உழைக்க பரிந்துரைக்கிறேன். ... ஆனால் நாம் அவர்கள் நம்மையோ அல்லது நம் மனைவிகள், குழந்தைகள், வேலையாட்கள், கால்நடைகள் போன்றவற்றுக்கு தீங்கு விளைவிப்பார்கள் என்று பயப்பட்டால், பிரான்ஸ், ஸ்பெயின், பொஹேமியா(தற்போதைய செக் குடியரசு) போன்ற பிற நாடுகள் செய்தது போன்று நாட்டை விட்டு நிரந்தரமாக வெளியேற்றவேண்டும்.
மார்ட்டின் லூதரின் பிரச்சாரம் அடுத்த நான்கு நூற்றாண்டுகளுக்கு மில்லியன் கணக்கான யூதர்கள் கொல்லப்படுவதற்கு உந்துசக்தியாக அமைந்தது என்றும், குறிப்பாக இதுவே 400 ஆண்டுகளுக்கு பின்பாக ஹிட்லரின் யூத வெறுப்புக்கும் அதன்காரணமான ஹோலொக்கோஸ்ட்டுக்கும் அடிப்படை என்றும் வரலாற்றாய்வாளர்கள் கருதுகின்றனர். புரட்டஸ்தாந்து மதத்தவர்கள் அதிகமாக வாழ்ந்த ஜேர்மனியிலும் அதன் சுற்றுப்புற ஐரோப்பிய நாடுகளிலும் 60 இலட்சத்துக்கும் மேற்பட்ட யூத இன மக்கள் இரண்டாம் உலகப்போரின் போது ஹிட்லரால் கொல்லப்பட்டனர். இதைப்பற்றி இன்னொரு அத்தியாயத்தில் பார்ப்போம்.
—----------
யூத வினோதங்கள்: பயங்கரமான ஒரு விடயத்தை பார்த்தாலோ அல்லது கேட்டாலோ அல்லது படித்தாலோ மூன்று முறை தூ தூ தூ என்று துப்பும் வழக்கம் யூதர்களிடையே உள்ளது. அதே போல நல்ல செய்திகளை கேட்டவுடனும் கண்ணூறு படாமல் இருக்க மூன்று முறை தூ தூ தூ என்று துப்பும் வழக்கமும் அவர்களிடம் உள்ளது.
—------------
Photo: The Via Dolorosa in Jerusalem. துன்பப் பாதை என்பது இயேசு சிலுவையில் அறையப்பட்டு, சிலுவையினை சுமந்து சென்ற, ஜெருசலேம் பழைய நகரிலுள்ள ஒரு ஒடுங்கிய வீதி.
குமாரவேலு கணேசன்
9/06/2023

No comments:

Post a Comment

கலாநிதி நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்: விளையாட்டு, கல்வி, மனிதாபிமானத்தின் சிகரம்

கலாநிதி  நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்: விளையாட்டு, கல்வி, மனிதாபிமானத்தின் சிகரம் கலாநிதி குமாரவேலு கணேசன் (STEM-Kalvi) ஏப்ரல் 18, 2024 அன்று,...