Friday, June 9, 2023

 ஆடு கதறியது- நவாலியூர் சோமசுந்தரப்புலவர்


சில சைவக்கோயில்களில் ஆடுகோழிகளைப் பலியிடு கிறார்கள். பிள்ளையைப்போல வளர்த்த ஆடுகளைப் பலியிடும் இக்கொடுஞ்செயல் நரகத்துன்பத்தைத் தரும். தன் மகன் பலி செய்யப்பட்டதை அறிந்த தாயாடு மன முருகிப் புலம்புகின்றது.




1,

ஆசை மகனேயென் அன்பான கண்மணியே 

நேசத் துரையே நெடும்பயணம் போனாயோ

2

ஓராறு மாதம் உடம்புநொந்து பெற்றெடுத்த 

சீராளா! தெற்குத் திசைப்பயணம் போனாயோ

3

நேராத கோவிலெல்லாம் நேர்ந்து தவமிருந்தே 

ஆராத காதலுடன் ஐயோ நான் பெற்றெடுத்தேன்

4.

கல்லுவைத்த கோவிலெல்லாம் கைகுவித்து நோன் பிருந்து 

செல்வக் குமரா சிறப்புடனே பெற்றெடுத்தேன்

5

ஆரக் கழுத்தழகா அஞ்சனப்பூக் கண்ணழகா 

வார நடையழகா மாராப்பு மேனியனே!

6.

துள்ளு நடையழகுஞ் சோதி முகத்தழகுங் 

கொள்ளுஞ் செவியழகுங் கோமளமே காண்பதெப்போ

7

நீல மயிரழகும் நெற்றிச் செகிலழகுங் 

கோல மருப்பழகுங் கோமளமே காண்பதெப்போ

8

பூங்கரும்பே தேனேயென் பொன்னே நவமணியே 

தாங்கிச் சுமந்தகுடல் தழலா யெரியுதடா

9

யாழுங் குழலுமென மின்பக் குதலைமொழி 

நாளும் பொழுதுமினி நான்கேட்ப தெந்நாளோ

10

அம்மா வெனவழைக்கும் ஆசைத் திருக்குரலை 

எம்மா தவக்கொழுந்தே நான்கேட்ப தெந்நாளோ

11

புல்லுந் தவிடும்நல்ல பிண்ணாக்குந் தீற்றியுனை 

அல்லும் பகலுமவர் அன்பாய் வளர்த்தாரோ

12

அல்லும் பகலுமவர் அன்பாய் வளர்த்ததெலாங் 

கல்லுங் கரையக் கழுத்தவெட்டு வெட்டிடவோ

பாஅய் பாஅய்

13

கிம்புரிப் பூணணிந்து கிண்கிணிப்பொற் றார்சூட்டி வரிசரவு? 

வம்ப ரலங்கரிக்கப் பார்த்து மகிழ்ந்தேனே!!

14

வன்னப்பொற் றேரேறி மாப்பிளைபோற் சென்றாயே 

இன்னும் வரக்காணேன் எங்குற்றாய் எங்குற்றாய்

15

பெண்ணை மணந்தெனது பிள்ளைவரு வானென்றே 

எண்ணி யிருந்துநா னேமாந்து போனெனெடா

16

காக்கைக் கரைவும் கனாவும் பலித்ததடா 

ஆக்கை துடிக்குதடா அடிவயிறு வேகுதடா

-பாஅய் பாஅய்

17

காரியமொன் றின்றியிந்தக் கன்னெஞ்சப் பேதையர்கள் 

மாரியம்மன் கோவிலிலே வாட்பலிக்கு வைத்தாரோ

18

பிள்ளையைப் போல்வளர்த்துப் பின்னையந்தச் சண்டாளர் 

துள்ளித் துடிதுடிக்கத் துண்டாக வெட்டினரோ

19

காலிலொரு பாவி கழுத்திலொரு மாபாவி 

கோலி யிழுக்கக் கொடும்பாவி வெட்டினனோ

பாஅய் பாஅய்

20

கோலி யிழுக்கக் குளறி மனஞ்சிதறி 

ஆரை நினைந்தோ வழுதாயென் கண்மணியே

21

ஓங்கிய கத்தி விழும்போ துடல் நடுங்க 

ஏங்கி யெனைநினைந்தென் னம்மாவோ வென்றாயோ!

22

தூவாரும் மேனி சுழன்று துடிதுடிக்க 

ஆவாவென வாய்விட் டையா விறந்தனையோ

23 

நெஞ்சந் துடிக்குதடா நினைவுதடு மாறுதடா 

பஞ்சிலே தீப்போற் பாழ்வயிறு வேகுதடா -பாஅய் பாஅய் -


24 

உன்றன் றசையரிந்தே யோலைக் குடலைகட்டிச் 

சென்றுசென்று விற்றனரோ தின்றுபசி யாறினரோ

25 

ஆசாரி மேலோ அதிகாரி தன்மேலோ 

மாமாரி மேலோவிவ் வன்பழிதான் சேருமடா

26 

கொன்றவன் மேலோ கொடுத்தவன் தன்மேலோ 

தின்றவன் மேலோவித் தீயபழி சேருமடா

27

வாயில்லாச் சீவன் வதையாதீர் என்று சொல்ல 

வாயுள்ளார் நெஞ்சம் மரமோ கருங்கல்லோ

28 

சைவமு மில்லையோ சான்றோரு மில்லையோ 

தெய்வமு மில்லையோ வென்மனது தேற்றிடவே 

பாஅய் பாஅய்.




No comments:

Post a Comment

கலாநிதி நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்: விளையாட்டு, கல்வி, மனிதாபிமானத்தின் சிகரம்

கலாநிதி  நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்: விளையாட்டு, கல்வி, மனிதாபிமானத்தின் சிகரம் கலாநிதி குமாரவேலு கணேசன் (STEM-Kalvi) ஏப்ரல் 18, 2024 அன்று,...