Saturday, June 10, 2023

 யூதர்களின் வரலாறு-18


இடைக்காலம் (Medieval Period) முழுவதும் யூதர்கள் ஐரோப்பாவில் அடிக்கடி வெளியேற்றப்படுவதை எதிர்கொண்டனர். இதற்கு காரணங்களாக  பயிர் அழிவுகள் மற்றும் நோய்கள் பரவுதல் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு அடிக்கடி குற்றம் சாட்டப்பட்டு பல்வேறு மத, பொருளாதார, சமூகக்காரணங்களுக்காக பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். 13ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் இருந்தும் 15 ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ், ஸ்பெயின், போர்த்துக்கல், ஆஸ்திரியா, ஹங்கேரி, ஜேர்மனி ஆகிய நாடுகள் இருந்தும் யூதர்கள் வெளியேற்றப்பட்டது இவற்றில் முக்கியமானவையாகும்.  

நித்தியானந்தா சுவாமிகள் போல டுபாக்கூர்கள் சாமிகளும் அந்நேரத்திலும் இருந்தார்கள் என்றால் ஆச்சரியப்படுவீர்கள். 2000 ஆண்டுகளாக ஒரு இறைதூதரை எதிர்பார்த்துக்கொண்டிருந்த யூத மதத்தவர்களுக்கு 17ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் நான் தான் அந்த இறை தூதர் என்று கரடி விட்டார் துருக்கியைச் சேர்ந்த  Sabbatai Zevi என்னும் ஒரு யூத மதகுரு. பல யூத மக்கள் அவரைக்கொண்டாடிக்கொண்டிருக்கும் போது விடயம் அப்போதைய இஸ்லாமிய பேரரசின் சக்கரவர்திக்கு சென்றது. மதகுருவுக்கு  இரண்டு தெரிவுகள் மன்னனால் கொடுக்கப்பட்டது. ஒன்று- மரண தண்டனை, இரண்டாவது இஸ்லாத்துகு மதம் மாறுவது. அவரின் தெரிவு இரண்டாவது என்றதும் அவரை இறைதூதர் என்று நம்பியவர்களால் அதை ஜீரணிக்க முடியாமல் போய்விட்டது. அதன் பின்பு தலைப்பாகையை கட்டிக்கொண்டு குர்ரானுடன் அவர் காணப்பட்டாராம். 

17 ஆம் நூறாண்டில் உக்ரேனிய பேரரசில் நடந்த இன்னொரு யூத இன அழிப்பைச் சொல்லலாம். போஹ்டன் (Bohdan Khmelnytsky) என்னும் உக்ரேனிய தளபதியால் போலந்து-லித்துயேனியா, ரஸ்யா நாடுகளில் வாழ்ந்த கொசாக்குகளின் அரசுகளிற்கெதிரான  கலகங்களில்  ஒரு இலட்சம் யூதர்கள் கொல்லப்ப்பட்டனர். 

18ஆம் நூற்றாண்டின் முடிவில் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கொள்கைகளின் அடிப்படையில் நடந்த பிரெஞ்சுப்புரட்சி மொத்த ஐரோப்பாவிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. பிரான்ஸில் ஏறக்குறைய 1% ஆகவிருந்த பிரபுக்களும், மத குருக்களும் 40% ஆன சொத்துக்களை அனுபவித்துக்கொண்டும், மக்களுக்கு மேல் அதி கூடிய வரிகளை விதித்துக்கொண்டும் இருந்ததால் இந்த புரட்சி ஏற்பட்டது. புரட்சியின்போது 1792 இல்  பிரெஞ்சு அரசர் பதினாறாம் லூயியும் அவரது மனைவி மரீ அண்டோனெட்டும் மரண தண்டனை விதிக்கப்பட்டு கில்லட்டின் தலைவெட்டு எந்திரம் மூலம் கொல்லப்பட்டனராயினும் புரட்சி 1799 வரை தொடர்ந்தது. அதன் பின்பு நெப்போலியன் மன்னனாக முடிசூடிக்கொண்டான், 

எகிப்தையும், இஸ்ரேலை உள்ளடக்கிய கலிலீ, சிரியா ஆகிய நாடுகளை ஆண்ட ஒட்டோமான் பேரரசையும்  வெல்ல வேண்டிய தேவை இருந்ததால் ஆபிரிக்காவிலும், ஆசியாவிலும் பரந்து வாழ்ந்துகொண்டிருந்த யூதர்களை தன்னுடன் சேர்ந்து போரிட நெப்போலியன் அழைப்பு விட்டான். போரில் வெற்றி பெற்றால் ஜெருசலேம் யூதர்களிடம் கையளிக்கப்படும் என்று பகிரங்கமாக விளம்பரமும் கொடுத்தான். ஆனால் இது ஒரு கபட நோக்கமே என்று வரலாற்றாய்வாளர்கள் கூறுகின்றனர். எப்படியிருந்தபோதும் நெப்போலியனால் எகிப்து, சிரியா, இஸ்ரேலை முழுமையாக கைப்பற்ற முடியாமல் பிரான்ஸுக்கு திரும்பவேண்டியேற்பட்டது. அதன் பின்பு பெல்ஜியம், இத்தாலி, ஜேர்மனி, ஸ்பெயின், ஒல்லாந்து, போலந்து ஆகிய முக்கிய நாடுகளை கைப்பற்றி குறுகிய காலம் ஆண்ட நெபோலியன் 1815ஆம் ஆண்டு வோட்டர்லூ போரில் 7 ஐரோப்பிய நாடுகளின் கூட்டிடம் தோற்கவேண்டியேற்பட்டது.  கிட்டத்தட்டநெப்போலியனின்  35 ஆண்டு கால ஆட்சியில் யூதர்கள் பெரிதாக துன்புறுத்தப்படவில்லை.

19ஆம் நூற்றாண்டு யூதர்களுக்கு மிக முக்கியமானதொரு காலப்பகுதியாகும். பல நாடுகளில் அவர்கள் மீதிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு அரசியலிலும் ஈடுபட ஆரம்பித்தனர். அந்த விபரங்களை அடுத்த பதிவில் பார்ப்போம்.   

—----------------

படம்: THE TEMPLARS’ TUNNEL, AKKO (ACRE)- வட இஸ்ரேலில் கடற்கரையாக அமைந்துள்ள Acre என்னும் நகரில் 1000 வருடங்களுக்கு முன்பாக சிலுவை யுத்த காலத்தில் தேவாலய புனித வீரர்களால் அமைக்கப்பட்ட நிலத்தடி சுரங்கப்பாதை.தேவாலய புனித வீரர்கள் (Knight Templers) என்பது பாப்பரசரின் இராணுவ துறவற அமைப்பு. 1799 இல் நெப்போலியனின் இஸ்ரேல், சிரியா படையெடுப்பின்போது  இங்கு தான் தோல்வியடைந்து பிரான்ஸுக்கு திரும்பினான். 

—----------

யூத வினோதங்கள்


யூதர்கள் கல்லறைகளுக்கு அல்லது அவர்களின் சுடலைகளுக்கு சென்றபின் நேர் வழியில் வீடு திரும்ப மாட்டார்கள். கல்லறைகளை சுற்றி கெட்ட ஆவிகள், பேய்கள் நிரம்பியிருக்கும் என்றும் நேரே வீட்டிற்கு சென்றால் உங்கள் பின்னால் அவை வீடிற்கு வந்துவிடும் என்றும் நம்புகின்றனர். 

-குமாரவேலு கணேசன் -



No comments:

Post a Comment

கலாநிதி நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்: விளையாட்டு, கல்வி, மனிதாபிமானத்தின் சிகரம்

கலாநிதி  நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்: விளையாட்டு, கல்வி, மனிதாபிமானத்தின் சிகரம் கலாநிதி குமாரவேலு கணேசன் (STEM-Kalvi) ஏப்ரல் 18, 2024 அன்று,...