Sunday, June 11, 2023

கிறைச்சேச் தமிழ்ச் சங்க சஞ்சிகை தமிழருவி- 2005 இல் நான் எழுதிய ஒரு கட்டுரை கண்ணில் பட்டதால் அதை இங்கு மீண்டும் பதிகின்றேன். இது எனது தொலைந்து போன புளொக்கிலும் இருந்தது.  

நியூசிலாந்தின் கிறைச்சேச் வாழ் தமிழர்களிடையே விட்டமின்-D  பற்றாக்குறை – குமார் கணேசன் 

அண்மையில் கிறைச்சேச் வாழ் தமிழர்கள் பலர் விட்டமின் D பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களின் வயது ஒன்றில் இருந்து எழுபது வரை வேறுபடும். இதுவரை செய்யப்பட்ட மருத்துவ சோதனைகளின் படி (ஏறக்குறைய 20 பேர்)  100% ஆனவர்கள் விட்டமின் D பற்றாக்குறையால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வானது என்னை இக்கட்டுரையை எழுதத் தூண்டியது. 

இந்தக்கட்டுரையின் பெரும்பகுதி THE HEALING POWER OF SUNLIGHT & VITAMIN D, An exclusive interview with Dr. Michael Holick-2005 என்ற ஆங்கில கட்டுரையின் சுருக்கம் ஆகும்.


என்புருக்கி, மனவழுத்தம்(depression), புறஸ்டேட் ஆண்குறி புற்றுநோய், மார்பு புற்றுநோய், நீரிழிவு மற்றும் உடற்பருமன்(obesity) போன்ற வியாதிகளை விட்டமின் D தடுக்கின்றது. விட்டமின் D ஆனது விட்டமின்களிலேயே மிகவும் குறைவாக கவனத்தில் எடுக்கப்பட்ட  விட்டமின் ஆகும். இது இலவசமாக கிடைப்பது காரணமாக இருக்கலம். சூரிய ஒளியில் உள்ள புற ஊதாக்கதிர்களின் ஒரு பகுதியான UVB உங்களது தோலில் படும்போது உங்கள் உடல் இதனை உற்பத்தி செய்கிறது.  மருந்துக் கம்பனிகள் சூரிய ஒளியை விற்பனை செய்வதில்லையாதலால்  இதன் மருத்துவ பலாபலன்கள் விளம்பரப்படுத்தப்படுவதில்லை.  பெரும்பாலான மக்கள் விட்டமின் D இனதும் உடல் ஆரோக்கியத்தினதும்  உண்மையான கதையை அறிந்து இருப்பதில்லை என்பதே உண்மை ஆகும். 


விட்டமின் D  யும் சூரிய வெளிச்சமும் பற்றிய நீங்கள் பெரும்பாலும் அறிந்திராத பதினைந்து உண்மைகள்

1. விட்டமின் D ஆனது சூரிய கதிர்களில் உள்ள புற ஊதா கதிர்கள்(UVB) உங்கள் தோலில் படும்போது உற்பத்தி செய்யப்படுகிறது.

2. விட்டமின் D ஐ உற்பத்தி செய்யத் தேவையான புற ஊதாக்கதிர்கள் சதாரண கண்ணாடியை ஊடுருவுவதில்லை. இதனால் நீங்கள் காருக்குள் இருக்கும் போதோ அல்லது வீட்டினுள் இருக்கும்போதோ விட்டமின் D ஐ பெறப்போவதில்லை. 

3. தேவையான அளவு விட்டமின் D ஐ சாப்பாட்டின் மூலம் பெறுவது என்பது ஏறக்குறைய சாத்தியமில்லாத விடயம் ஆகும்.  விட்டமின் D ஐ பெறுவதற்கு சூரிய ஒளியே ஒரேயொரு  நம்பிக்கையான வழியாகும்.

4. தேவையான அளவு விட்டமின் D ஐ பெறுவதற்கு மாத்திரம் ஒருவர் பத்து உயரமான கிளாஸ் விட்டமின் D சேர்க்கப்பட்ட  பாலை ஒவ்வொரு நாளும் அருந்துதல் வேண்டும்!

5. விட்டமின் D ஐ பெறுவதிற்கு பூமத்திய ரேகைக்கு தூரத்தில் வசிப்பவர்களுக்கு நீண்ட நேர சூரிய வெளிச்சம் தேவை ஆகும்.  கனடா, பிரித்தானியா, நியூசிலாந்து மற்றும் அமெரிக்காவினதும் அவுஸ்திரேலியாவினதும் பல பகுதிகள் பூமத்திய இரேகைக்கு மிக தூரத்தில் அமைந்த்துள்ளன.

6. ஒரே அளவு விட்டமின் D ஐ பெறுவதிற்கு  கருப்புத்தோல்களை உடையவர்களுக்கு வெள்ளைத்தோல்களை உடையவர்களிலும் பார்க்க 20-30 மடங்கு அதிக அளவான சூரிய வெளிச்சம் தேவையாகும். இதனாலேயே புரஸ்டேட் புற்றுநோய் கருப்பினத்தவர்களிடையே ஒரு கொள்ளை நோயாக காணப்படுகிறது. இதற்கு சூரிய வெளிச்சம் போதாமையே காரணம் ஆகும்.  

7. கல்சியம் உள்ளெடுக்கப்படுவதற்கு போதிய அளவு விட்டமின் D அதியாவசியமாகும். போதிய அளவு விட்டமின் D இல்லாவிடின் உங்கள் உடல் கல்சியத்தை உள்ளெடுக்கமுடியாது கல்சியம் விரயமாக்கப்படும்.

8. நீண்ட கால விட்டமின் D பற்றாக்குறையை ஒரே இரவில் குணப்படுத்த முடியாது. உங்கள் எலும்புகளையும் நரம்புத்தொகுதியையும் மீளமைப்பதற்கு பல மாத கால விட்டமின் D மருந்தும் சூரிய வெளிச்சமும் தேவையாக இருக்கும்.

9. மிக பலவீனமான சண்ஸ்கிறீன் (SPF=8) கூட உங்கள் உடல் விட்டமின் D உற்பத்திசெய்வதை 95% வீதத்தால் குறைக்கும்.

10. சூரிய வெளிச்சத்தின் மூலம் அளவுக்கதிகமாக விட்டமின் D உற்பத்தி செய்வது சாத்தியமில்லை. உங்கள் உடல் தானாகவே மட்டுப்படுத்தி தனக்குத் தேவையானதை மாத்திரமே உற்பத்தி செய்யும். 

11. உங்கள் மார்பெலும்பை அழுத்தும்போது நோவு ஏற்பட்டால் நீங்கள் நீண்ட கால விட்டமின் D பற்றாக்குறையால் இப்பொழுது பாதிக்கப்பட்டிருக்கக்கூடும். 

12. விட்டமின் D ஆனது உபயோகப்படுத்தப்படுமுன் உங்கள் சிறுநீரகத்தாலும் ஈரலாலும்  தூண்டப்படுகிறது. 

13. சிறுநீரக நோய்களும் ஈரல் பாதிப்பும் உங்கள் உடலில் விட்டமின் D இன் தூண்டலை பெரிதும் பாதிக்கும். 

14. உங்கள் உடலுக்கு சூரிய வெளிச்சம் தேவை என்பதை நீங்கள் அறிந்துகொள்வதை சண் ஸ்கிறீன் உற்பத்தியாளர்கள் விரும்புவதில்லை. ஏனென்றால் இது அவர்களின் விற்பனையை பெரிதும் பாதிக்கும். 


15. விட்டமின் D ஆனது மிகவும் சிறந்த நோய் நிவாரணியாக இருந்த போதிலும், உங்கள் உடல் இதனை முற்றிலும் இலவசமாக உற்பத்தி செய்கிறது.

விட்டமின் D பற்றாக்குறையால் ஏற்படும் நோய்களும் அதன் அறிகுறிகளும். 


விட்டமின் D பற்றாக்குறையால் சாதரணமாக ஏற்படும் நோய் “ஒஸ்ரியோபோரசிஸ்” என்பது ஆகும். இது கல்சியம் உறிஞ்சப்படுவதை பெரிதும் பாதிக்கும்.  

ஆண்குறி புற்றுநோய் (prostate cancer), மார்பு புற்றுநோய், சூலக புற்றுநோய், குடல் புற்றுநோய், மனவழுத்தம் மற்றும் மூளைக்கோளாறு ஆகிய நோய்களை போதுமான அளவு விட்டமின் D தடுக்கின்றது.

என்புருக்கி ("Rickets") என்பது விட்டமின் D பற்றாக்குறையால் ஏற்படும் எலும்பு சிதைவடையும் ஒரு நோய் ஆகும். 

விட்டமின் D பற்றாக்குறை நீரிழிவு நோயை (type 2 diabetes) தீவிரமாக்குவதுடன் இன்சுலின் உற்பத்தியையும் பாதிக்கிறது. 

உடற்பருமன் நோய் விட்டமின் D இன் பயன்பாட்டை பாதிப்பதால் அவர்களுக்கு இரண்டு மடங்கு விட்டமின் D தேவைப்படுகிறது. 

Psoriasis என்ற சொறி நோயை குணப்படுத்த விட்டமின் D உலகெங்கும் பாவிக்கப்படுகிறது.

விட்டமின் D பற்றாக்குறை மூளைக்கோளாறு நோயை உருவாக்குகின்றது.

பருவகால உணர்ச்சிக் கோளாறு (Seasonal Affective Disorder) ஆனது சூரிய வெளிச்சம் போதாததால் ஏற்படுகிறது. 

வாரத்தில் 2-3 தடவை அளவான சூரிய வெளிச்சத்தில் நிற்பது நீரிழிவு, புற்றுநோய் போன்ற மோசமான நோய்கள் உருவாவதற்கான அபாயத்தை 50%-80% ஆக குறைக்கிறது.  

ஒவ்வொரு நாளும் விட்டமின் D (2000 IU) உட்கொளும் குழந்தைகளுக்கு அடுத்த 20 வருடங்களில் நீரிழிவு நோய் (type 1 diabetes) ஏற்படுவதற்கான அபாயம் 80% ஆல் குறைக்கப்படுகிறது. 

விட்டமின் D பற்றாக்குறையின் அதிர்ச்சியான புள்ளிவிபரம் (ஐ.அமெரிக்கா)


32% ஆன மருத்துவர்களும் மருத்துவ மாணவர்களும் விட்டமின் D பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

40% ஆன அமெரிக்க மக்கள் விட்டமின் D பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

42% ஆன குழந்தை பெறும் வயதினரான ஆபிரிக்க அமெரிக்க பெண்கள்  விட்டமின் D பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

48% ஆன் இளம் பெண்கள் (9-11 years old) விட்டமின் D பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

60% ஆனவரை எல்லா வைத்தியசாலை நோயாளர்களும் விட்டமின் D பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

76% ஆன கர்ப்பிணிப் பெண்கள் மிகவும் விட்டமின் D பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளும் விட்டமின் D பற்றாக்குறையால் பாதிக்கப்படுகின்றனர். இக்குழந்தைகள் அவர்களின் வாழ்வின் பிற்பகுதியில் நீரிழிவு, முடக்குவாதம், மூளைக்கோளாறு போன்றவற்றால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். 

80% வரை ஆன விடுதிகளில்(nursing home) வதியும் நோயாளிகள் விட்டமின் D பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நீங்கள் என்ன செய்யலாம்

அளவான சூரிய வெளிச்சத்தைப் பெறுவது உங்கள் ஆரோக்கியத்தைப் பெருக்க மிகவும் இலகுவான வழி ஆகும். இதற்கு முடியாதவர்கள் கொட்லிவர் ஓயில் (codliver oil) போன்ற விட்டமின் D செறிந்த உணவுப்பொருள்களை நாளாந்தம் உட்கொள்ள வெண்டும். ஆனால் விட்டமின் D இன் அளவை சோதனை செய்யாமல் நீங்களாகவே கொட்லிவர் ஓயில் உட்கொள்வது நல்லதல்ல. 


No comments:

Post a Comment

கலாநிதி நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்: விளையாட்டு, கல்வி, மனிதாபிமானத்தின் சிகரம்

கலாநிதி  நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்: விளையாட்டு, கல்வி, மனிதாபிமானத்தின் சிகரம் கலாநிதி குமாரவேலு கணேசன் (STEM-Kalvi) ஏப்ரல் 18, 2024 அன்று,...