நவீன ஒட்டுமுறை தண்டவாளங்கள் (Modern Continuous Welded Rail)
முன்பு தண்டவாளங்கள் இப்படி fishplate என்னும் ஒரு இணைப்பு தகடு வைத்து நட்டுக்களால் பூட்டப்படும். வெப்ப காலத்தில் விரிவடையத்தக்கதாக இடைவெளி விடப்பட்டு நட்டுக்களுக்கான ஓட்டைகள் நீள்வட்டமாகவும் விடப்படும். இதைப்பற்றி விஞ்ஞான விளக்கம் எல்லாம் முன்பு கற்பிக்கப்பட்டு பரீட்சையில் வினாக்கள் எல்லாம் வருவதுண்டு.
படம்1- பாரம்பரிய தண்டவாள இணைப்பு
இப்பொழுதெல்லாம் தண்டவாளங்களை வெல்ட் செய்து ஒட்டும் Continuous Welded Rail (CWR) என்னும் முறையே பாவிக்கப்படுகின்றது. இலங்கையிலும் புதிதாக போடப்பட புகையிரதப் பாதைகளான வவுனியா- காங்கேசன்துறை, கொழும்பு- மாத்தறை பாதைகளில் இந்த தொழில் நுட்பமே பாவிக்கப்பட்டது. இந்த தொழில் நுட்பத்தினால் புகையிரதம் வேகமாகவும், குலுக்கல் இல்லாமலும் பயணிக்க முடிவது மாத்திரமல்லாமல் புகையிரத வீதி , புகையிரதம் ஆகியவை பராமரிக்கும் செலவும் குறைகின்றது. முக்கியமாக, முன்பு கேட்கும் கடக்-கடக் சத்தம் இப்போது இல்லாமல் போய்விட்டது.
குளிரில் சுருங்கும்போது உடையாமலும், வெப்பத்திற்கும் விரியும்போது வளையாமலும் எப்படி CWR சாத்தியமாகின்றது என்று நீங்கள் யோசித்ததுண்டா?
படம்2- நவீன தண்டவாள ஒட்டு இணைப்பு
பெளதிக விதிப்படி CWR முறையில் அமைக்கப்பட்ட ஒரு கிலோ மீட்டர் தண்டவாளம் 10C வெப்ப நிலை மாற்றத்திற்கு உட்படும்போது ஏறக்குறைய 12 cm அளவு நீட்சியடைய வேண்டும். இப்படியான அதி கூடிய வெப்ப நாட்களில் buckle அல்லது sun kink என்றழைக்கப்படும் வளைவுகள் தண்டவாளங்களில் ஏற்பட்டு புகையிரத சேவைகள் இடை நிறுத்தப்படவேண்டிவரும்.
படம் 3: ஒரு கிலோ மீட்டர் தண்டவாளம் 10C வெப்ப நிலை அதிகரிக்கும் போது ஏறக்குறைய 12 cm அளவு நீட்சியடையும்.
இப்பிரச்சனையை தீர்ப்பதற்காக பல உபாயங்களை உபயோகிக்கின்றனர். அவற்றில் முக்கியமான ஒன்று தண்டவாளங்களை tensile stess என்னும் இழுவை விசையில் இருக்கக்கூடியவாறு அதிக வெப்பமான நாளில் அல்லது தண்டவாளங்களை வெப்பமாக்கி அப்பிரதேச சராசரி வெப்ப நிலையிலும் பார்க்க சிறிது அதிக வெப்ப நிலையில் தண்டவாளங்களை ஒட்டி விடுவார்கள். இந்த வெப்ப நிலையை Rail Neutral Temperature (RNT) என்று அழைப்பார்கள். இலங்கையில் RNT ஆனது 35-40 வரை இருக்கும். மலைநாட்டுக்கு வேறாகவும் யாழ்ப்பாணத்திற்கு இது வேறாகவும் இருக்கும்.
தொடர்ந்து இழுவை விசையில் இருக்கும்போது இரவு வெப்பநிலை மிகவும் குறைந்தால் இழுவை மிக அதிகரித்து தண்டவாளம் உடைந்து விடவும் வாய்ப்புள்ளது. அண்மையில் இலங்கையில் அப்படி ஒரு சம்பவம் நடதது. அதிக இழுவை விசையை தாங்கக்கூடிய தண்டவாளங்களையே தற்போது உபயோகிக்கின்றனர்.
ஆனால் 40-50 C வெப்ப நிலை வரும் நாட்களில் தண்டவாளங்கள் இழுவை விசைக்கு பதில் தள்ளல் விசைக்கு (compression) மாறும். அப்போது அவை வளையாமல் இருக்க ஒவ்வொரு சிலீப்பர் கட்டையுடனும் (இப்பொழுது கொன்கிறீட்) ஒரு கிளிப் (railway Clip) போட்டு பொருத்தியிருப்பார்கள்.
படம்4: Railway clip
இந்த கிளிப் தண்டவாளங்களை நீட்சியடையாமல் உராய்வை பாவித்து ஓரளவுக்கு கட்டுப்படுத்தும். ஆனால் மிக அதிக வெப்பநிலை நிலவும் நாட்கள் தொடர்ந்தால் தண்டவாளம் வளைவதை தவிர்க்க முடியாது.
படம் 5: sun kink என்றழைக்கப்படும் தண்டவாள வளைவு.
No comments:
Post a Comment