Saturday, March 1, 2025

மலரும் புலத்து நினைவுகள் -10-

அழகி, ஆட்டொகிராப், தவமாய் தவமிருந்து, பின்பு வந்த 96 போன்ற திரைப்படங்கள் எமது பாடசாலை, பல்கலைக்கழக நினைவுகளை மீண்டும் அசைபோட தூண்டுபவை. அண்மையில் வெளியான டிராகன் திரைப்படம் எனது பல்கலைக்கழக நினைவுகளை மீண்டும் திரும்பிப்பார்க்க வைத்தது. 

எமது பல்கலைக்கழக காலம் என்பது 35 விடுதலை இயக்கங்கள் உருவாகி பின்பு அவையெல்லாம் அழிக்கப்பட்டு ஒரு பெரிய இயக்கமாக உருவான 1985-89 காலப்பகுதியாகும். இக்காலப்பகுதியில் தான் வடமாட்சி ஒப்பரேசன், இந்திய இராணுவம் அமைதிகாக்கும் பணிக்கு வந்தது, வடக்கு-கிழக்கு இணைந்த மாகாணசபை, 13 ம் திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டது போன்ற மறக்கமுடியா அரசியல் சம்பவங்கள்  நடந்தன. சிறைக்கைதிகள் விடுதலை, பாலஸ்தீன ஆதரவு போன்றவற்றிகும் அடிக்கடி பல்கலைக்கழகத்தில் போராட்டங்கள் நடந்துகொண்டிருத்ததை எனது முன்னைய அத்தியாயங்களில் கூறியிருந்தேன். 



பிரச்சனைகள் ஆரம்பித்த காலம் என்பதால் எம்மில் பெரும்பாலானோருக்கு எமது பல்கலைக் கல்வி 3-4 வருடங்கள் நீடிக்கும் என்ற நம்பிக்கை அறவே இருக்கவில்லை. மின்சாரம், பெற்றோல், டீசல் என்பவை உட்பட பெரும் பொருளாதார தடைக்கு வடமாகாணம் உட்பட்டிருந்தது. எம்மில் பல மாணவர்கள் பல்கலைக்கழக முதலாம் வருடத்தில் சித்தியடையவில்லை. மேலும் பலர் பல பாடங்களில் அரியர்ஸ் வைத்துக்கொண்டிருந்தனர். எனது இரண்டாவது தடவை தோற்றிய A/L பரீட்சை முடிபின்படி பேராதனை பல்கலைக்கழகத்திற்கு பொறியியல் கற்கைக்கு தெரிவு செய்யப்பட்டிருந்ததால் நானும் பெரிதாக படிக்காமல் மட்டுமட்டாகவே சித்தியடைந்திருந்தேன். இரண்டாம் வருடம் முடியும் காலத்தில் பலருக்கு 10 பாடங்கள் கூட அரியர்ஸ் இருந்தன. அவர்களில் பலர் இன்று அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் மிக உயர்ந்த பதவிகளில் உள்ளனர் என்பது வேறு விடயம். நாட்டில் காணப்பட்ட அசாதாரண நிலைமையால் அவர்களுக்கு அந்த நேரம் கற்கும் மன நிலை இருக்கவில்லை என்பதே அவர்களின் இந்த நிலைக்கு காரணமாக இருந்தது. அக்காலப்பகுதியில் தான் ஆண்டிறுதி பரீட்சை என்பது செமெஸ்டர் முறைக்கு மாற்றப்பட்டது. 6 மாதத்தில் கொஞ்ச பாடங்களையும் மிகுதியை ஆண்டிறுதியிலும் எழுதுவது சுலபமாயினும் வருச முடிவில் மாத்திரம்  நோட்சை தூசு தட்டுவோருக்கு இது ஒத்துவராது.  எமக்கு அடுத்த வருடத்தில் கற்றவர்கள் செமெஸ்டர் பரீட்சைகளை ஆண்டிறுதிக்கு பின்போட போராடும்போது அவர்களுக்கெதிராக அரியர்ஸ் பாசக்கார நண்பர்களுக்காக  நாம் போராடி பெரும் அடிதடி சண்டை எல்லாம் வந்தது. 

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சிலரின் கற்பித்தல் போர் அடிச்சாலும் சிலரின் கற்பித்தல் ஆர்வமாக கற்கத் தூண்டும். முக்கியமாக,  இளமையான, அழகான விரிவுரையாளர்களின் பாடங்கள் வகுப்பை கலகலப்பாக்கி எம்மை நிமிர்ந்து உட்கார வைக்கும். டிராகன் திரைப்படத்தில் வருவது போல ரொக்கெட் எல்லாம் விட்டு நேரே விரிவுரையாளரின் தலைமுடியில் லாண்ட் ஆன சம்பவம் எல்லாம் உணமையில் நடந்தது. 



பல்கலைக்கழகங்களைப் பொறுத்தவரையில் மிகவும் பசுமையாக காட்சி தருவது நுண்கலை, கலைப்பீடங்கள் தான். பொறியியல், பெளதிக விஞ்ஞானம் போன்ற கற்கை  நெறிகள் வரண்டு பாலைவனமாக காட்சி தரும். பாலைவனப் பசுஞ்சோலைகளை தேடி நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கும். 

எனது வகுப்பில் ஆகக்குறைந்த வயதில் கல்வி கற்ற ஒரு சிலரில் நானும் ஒருவன். எனது “தம்பி” மூஞ்சியை மறைக்க தாடி, மீசை எல்லாம் வைத்து கொஞ்சம் டெரராக என்னை மாற்றி வைத்திருப்பேன். ஒரு சண்டியன் போன்ற ஒரு தோற்றம் கெத்து என்று நினைக்கும் வயது அது. 

பின்பு இந்திய இராணுவம் வந்தபோது கிளீன் சேவ் எடுத்துக்கொண்டு திரிஞ்சது வேற கதை. 


Friday, February 14, 2025

நவீன ஒட்டுமுறை தண்டவாளங்கள் (Modern Continuous Welded Rail)

நவீன ஒட்டுமுறை தண்டவாளங்கள் (Modern Continuous Welded Rail)

முன்பு தண்டவாளங்கள் இப்படி fishplate என்னும் ஒரு இணைப்பு தகடு வைத்து நட்டுக்களால் பூட்டப்படும். வெப்ப காலத்தில் விரிவடையத்தக்கதாக இடைவெளி விடப்பட்டு நட்டுக்களுக்கான ஓட்டைகள் நீள்வட்டமாகவும் விடப்படும். இதைப்பற்றி விஞ்ஞான விளக்கம் எல்லாம் முன்பு கற்பிக்கப்பட்டு பரீட்சையில் வினாக்கள் எல்லாம் வருவதுண்டு.
படம்1- பாரம்பரிய தண்டவாள இணைப்பு 

இப்பொழுதெல்லாம் தண்டவாளங்களை வெல்ட் செய்து ஒட்டும் Continuous Welded Rail (CWR) என்னும் முறையே பாவிக்கப்படுகின்றது. இலங்கையிலும் புதிதாக போடப்பட புகையிரதப் பாதைகளான வவுனியா- காங்கேசன்துறை, கொழும்பு- மாத்தறை பாதைகளில் இந்த தொழில் நுட்பமே பாவிக்கப்பட்டது. இந்த தொழில் நுட்பத்தினால் புகையிரதம் வேகமாகவும், குலுக்கல் இல்லாமலும் பயணிக்க முடிவது மாத்திரமல்லாமல் புகையிரத வீதி , புகையிரதம் ஆகியவை பராமரிக்கும் செலவும் குறைகின்றது. முக்கியமாக, முன்பு கேட்கும் கடக்-கடக் சத்தம் இப்போது இல்லாமல் போய்விட்டது. 
குளிரில் சுருங்கும்போது உடையாமலும், வெப்பத்திற்கும் விரியும்போது வளையாமலும் எப்படி CWR சாத்தியமாகின்றது என்று நீங்கள் யோசித்ததுண்டா?

படம்2- நவீன  தண்டவாள ஒட்டு இணைப்பு 

பெளதிக விதிப்படி CWR முறையில் அமைக்கப்பட்ட ஒரு கிலோ மீட்டர் தண்டவாளம் 10C வெப்ப நிலை மாற்றத்திற்கு உட்படும்போது ஏறக்குறைய 12 cm அளவு நீட்சியடைய வேண்டும். இப்படியான அதி கூடிய வெப்ப நாட்களில்  buckle அல்லது sun kink என்றழைக்கப்படும் வளைவுகள் தண்டவாளங்களில் ஏற்பட்டு புகையிரத சேவைகள் இடை நிறுத்தப்படவேண்டிவரும். 

படம் 3: ஒரு கிலோ மீட்டர் தண்டவாளம் 10C வெப்ப நிலை அதிகரிக்கும் போது ஏறக்குறைய 12 cm அளவு நீட்சியடையும்.

இப்பிரச்சனையை தீர்ப்பதற்காக பல உபாயங்களை உபயோகிக்கின்றனர். அவற்றில் முக்கியமான ஒன்று தண்டவாளங்களை tensile stess என்னும் இழுவை விசையில் இருக்கக்கூடியவாறு அதிக வெப்பமான நாளில் அல்லது தண்டவாளங்களை வெப்பமாக்கி அப்பிரதேச சராசரி வெப்ப நிலையிலும் பார்க்க சிறிது அதிக வெப்ப நிலையில் தண்டவாளங்களை ஒட்டி விடுவார்கள். இந்த வெப்ப நிலையை Rail Neutral Temperature (RNT) என்று அழைப்பார்கள். இலங்கையில் RNT ஆனது 35-40   வரை இருக்கும். மலைநாட்டுக்கு வேறாகவும் யாழ்ப்பாணத்திற்கு இது வேறாகவும் இருக்கும். 

தொடர்ந்து இழுவை விசையில் இருக்கும்போது இரவு வெப்பநிலை மிகவும் குறைந்தால் இழுவை மிக அதிகரித்து தண்டவாளம் உடைந்து விடவும் வாய்ப்புள்ளது. அண்மையில் இலங்கையில் அப்படி ஒரு சம்பவம் நடதது. அதிக இழுவை விசையை தாங்கக்கூடிய தண்டவாளங்களையே தற்போது உபயோகிக்கின்றனர். 

ஆனால் 40-50 C வெப்ப நிலை வரும் நாட்களில் தண்டவாளங்கள் இழுவை விசைக்கு பதில் தள்ளல் விசைக்கு (compression) மாறும். அப்போது அவை வளையாமல் இருக்க ஒவ்வொரு சிலீப்பர் கட்டையுடனும் (இப்பொழுது கொன்கிறீட்) ஒரு கிளிப் (railway Clip) போட்டு பொருத்தியிருப்பார்கள்.


படம்4: Railway clip

இந்த கிளிப் தண்டவாளங்களை நீட்சியடையாமல் உராய்வை பாவித்து ஓரளவுக்கு கட்டுப்படுத்தும். ஆனால் மிக அதிக வெப்பநிலை நிலவும் நாட்கள் தொடர்ந்தால் தண்டவாளம் வளைவதை தவிர்க்க முடியாது.


படம் 5: sun kink என்றழைக்கப்படும் தண்டவாள வளைவு.


Thursday, February 13, 2025

தையிட்டி திஸ்ஸ விகாரை - தீர்வுக்கான ஒரு முன்மொழிவு.

தையிட்டி விகாரை விவகாரத்தை சில விட்டுக்கொடுப்புக்களுடன் எப்படி சமாதானமாக தீர்க்கலாம் என்று நான் சிந்தித்ததன் விளைவாக இந்த கட்டுரை பிறந்துள்ளது. கிட்டத்தட்ட 2 தலைமுறையினரின் காணிப்பிரச்சனையை மூன்றாம் தலைமுறைக்கு கடத்தாமல் தீர்க்கும் ஒரு உபாயமாக சில முன்மொழிவுகளை நான் முன்வைத்துள்ளேன். 

தேவனம்பியதீசனால் கட்டப்பட்டதாக கருதப்படும் திஸ்ஸ விகாரை என்னும் பெயருடைய ஒரு பெளத்த விகாரை காங்கேசந்துறைக்கு அருஆமையில் அமைந்துள்ள தை≠≠≠யிட்டி பகுதியிலேயே அமைந்திருக்க வேண்டும் என்று நம்பிய சில பெளத்த பிக்குகள் 1946 ஆம் ஆண்டு உலுத்தன் வளவு என்னும் 20 பரப்புக் காணியில் (படம்-1:சிவப்பு)  ஒரு பன்சல அமைத்து வழிபாடுகள் செய்ய ஆரம்பித்தனர்.  இந்த செய்மதிப்படத்தில் காட்டப்பட்டுள்ள வரைபுகள் ஓரளவு அளவிடைக்கமைய வரையப்பட்டுள்ளது. 

1958 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ் சிங்கள இனக்கலவரத்தின் பின்பாக இப்பகுதியில் வாழ்ந்த சிங்கள குடிகளின் வெளியேற்றத்துடன் இந்த பன்சாலையும் அழிந்து போய் விட்டது. யுத்தம் முடிவடைந்த பின்பாக இப்பிரதேசம் இராணுவக்கட்டுப்பாட்டுக்குள் இருந்த காலத்தில் இராணுவத்தின் உதவியோடு இந்தக்கோவில் பிரமாண்டமாக பழைய காணிக்கருகில் உள்ள நிலங்களை கையகப்படுத்தி கட்டப்பட்டுவிட்டது.  7 ஏக்கர் நிலத்தில் வேலியமைத்து (படம்-1:  ஊதா) போதிமரம், தாதுகோபம், பெளத்தகுருவுக்கான தங்குமடம் என்பன அமைக்கப்பட்டுள்ளன. 

ஆனால், முன்பு பன்சல இருந்ததாக கருதப்படும் காணி இப்பொழுதும் இவ்வேலிக்கு வெளியே தனியாக காடு வளர்ந்து இருக்கின்றது. 

படம்1: தையிட்டி திஸ்ஸ ரஜமகா விகாரை அமைந்துள்ள பகுதியின் செய்மதிப்படம் (2024).
1. சிவப்பு: 1946 இல் பன்சல அமைக்கப்பட்ட 1.24 ஏக்கர் காணி.
2. ஊதா: தற்போதைய விகாரை அமைந்துள்ள 7 ஏக்கர் நிலத்தின் வேலி.
3. மஞ்சள் : பெளத்த மகாசஙம் உரிமை கோரும் 16 ஏக்கர்  நிலம். 
4. நீலம்: அரச மரம், தாதுகோபம் ஆகியவற்றை உள்ளடக்கிய 1.5 ஏக்கர் காணி. 

கடந்த பல வருடங்களாக ஏறக்குறைய  20 குடும்பங்கள் தமது நிலம் தமக்கு வேண்டும் என்று தமது காணிப் பத்திரங்களுடன் போராடி வருகின்றனர். 

இந்த நிலையில், இலங்கை பெளத்த மகாசங்கம் தமக்கு 16 ஏக்கர் காணி (படம்-1: மஞ்சள்)  சொந்தமானது என்றும் அவற்றை பெற்றுத்தருமாறும் கேட்டு யாழ் மாவட்ட செயலகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. 

தற்போது  இனவாதிகள் இதை பேசுபொருளாக்கி அரசியல் செய்ய முயன்று வருவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. சில விட்டுக்கொடுப்புக்களுடன் இப்பிரச்சனையை சமாதானமாகத் தீர்த்துக்கொண்டால் எல்லோருக்கும் நன்மை பயக்கும். தீர்வுக்கான எனது முன்மொழிவாக பின்வருவனவற்றை பரிந்துரைக்கின்றேன். 

பரிந்துரைகள்

  1. போதிமரம், தாதுகோபம் ஆகியவற்றை உள்ளடக்கிய 1.5 ஏக்கர் காணி (படம்-1: நீலம்) முறைப்படி விகாரைக்கு அளிக்கப்படலாம். 
  2. இவ்விகாரையின் முகப்பு கலைவாணி வீதிக்கு மாற்றப்படலாம்.
  3. விகாரை முறைப்படி பெளத்த விவகார அமைச்சில் பதிவு செய்யப்பட்டு உரிமம்  மாற்றப்பட வேண்டும். 
  4. ஏற்கனவே பன்சல இருந்த 1.25 ஏக்கர் காணி (படம்-1: சிவப்பு) இத்துடன் இணைக்கப்பட்டு மேலதிக கட்டடங்கள் அமைக்கப்படலாம். 
  5. இந்த 1.5 எக்கர் காணி உரிமையாளர்களுக்கு வேறு காணி அல்லது அதற்கீடான நட்ட ஈடு வழங்கப்படலாம். அல்லது அருகில் உள்ள மற்றைய காணிகளில் இருந்து வழங்கப்படலாம்.  
---------------------------------------------------------------

Tissa Viharai – A Proposal for Settlement

Kumaravelu Ganesan
Believing that a Buddhist Vihara named Tissa Viharai, thought to have been built by Devanampiyatissa, should be located in this area, some Buddhist monks established a Pansala in 1946 on a 1.25 acre plot of land called Ulutan Valavu (Figure 1: Red) and began worshipping there. The diagrams in this map are drawn approximately to scale.
Following the 1958 Tamil-Sinhala ethnic riots, the Pansala became abandoned due to the exodus of Sinhalese residents from the area. After the end of the war, when the area was under military control, a temple was constructed on a grand scale by occupying land near the old temple, with the assistance of the army. A 7-acre area was fenced off (Figure 1: Purple), including a Bodhi tree, a stupa, a Vihara, and monks’ residences.
However, the land where the original Pansala is believed to have stood remains outside this fenced area. Around 20 families are currently fighting legal battles to reclaim their land.
At this juncture, the Sri Lanka Buddha Maha Sangha has submitted a letter to the Jaffna District Secretariat requesting ownership of 16 acres of land (Figure 1: Yellow). At present, it appears that South Sri Lankan nationalist groups are attempting to politicize the issue. Reaching an amicable settlement with some concessions would be beneficial to all parties.
My proposed recommendations are given below. 

Proposed Solution:
  1. 1.5 acres of land (Figure 1: Blue), including the Bo tree and the stupa, should be formally granted to the Vihara.
  2. The front entrance of the Vihara should be relocated to Kalaivani Street.
  3. The Vihara should be formally registered with the Ministry of Buddhist Affairs, and its custody should be transferred.
  4. 1.25 acres of land (Figure 1: Red), where the original Pansala once stood, should be attached to the Vihara, allowing for the construction of additional buildings.
  5. The owners of the 1.5-acre plot (Figure 1: Blue) should be provided with alternative land or equivalent compensation, potentially from nearby available lands.

Monday, February 10, 2025

தையிட்டி திஸ்ஸ ரஜமஹா விகாரை

இற்றைக்கு 2250 ஆண்டுகளுக்கு முன்பாக அனுராதபுரத்தை ஆண்ட மூத்தசிவன் என்னும் அரசனின் இரண்டாவது மகனான தேவநம்பியதீசன்  நாகதீபத்தில் கட்டிய 3 புத்த கோயில்களைப் பற்றி மகாவம்சத்தில் குறிப்பிடப்படுகின்றது. நாகதீபம் என்பது யாழ்ப்பாண தீபகற்பத்தை முழுவதுமாகப் குறிக்க பயன்படுத்தப்படும் பெயராகக் கருதப்படுகின்றது. இந்த 3 கோயில்களும் ஜம்புகோள விஹாரை (மாதகல்) , திஸ்ஸ மகா விஹாரை மற்றும் பச்சினாராமயா விகாரை ஆகும் (?).


மகாவம்சம் என்பது ஒரு புராணக்கதை ஆகினும் அதையே முழுவதும் உண்மையென்று பெளத்தர்கள் கொண்டாடுகின்றனர்.

முதலியார் செ இராசனாயகம் என்பவர் 1926 இல் எழுதிய Ancient Jaffna என்னும் ஒரு புத்த்கத்தில் இவ்விடத்தில் ஒரு கந்தசுவாமி கோவில் இருந்ததாகவும் அதற்கண்மையில் உள்ள் Tissa Maluva என்னுமிடத்தில் இந்த விகாரை இருந்திருக்க வேண்டும் என்றும் எழுதி வைத்துள்ளார்.

திஸ்ஸமகா விஹாரை தையிட்டியில் அமைந்திருந்ததாக அங்கு காணப்பட்ட அரச மரத்தை வைத்து கண்டுபிடித்து 1946ஆம் ஆண்டு களுத்துறை ஷீலாதரதிஸ்ஸ தேரர் மற்றும் கௌதர பன்னாந்த தேரர் ஆகிய இரு பௌத்த குருமார்களால் அங்கு ஒரு சிறிய தாதுகோபமும் விகாரையும் கட்டப்பட்டன. 1946 ஆம் ஆண்டில், ஆபிரகாம் பெரேரா என்ற பக்தர் கோயிலுக்கு 1.25 ஏக்கர் (20 பரப்பு) நிலத்தை நன்கொடையாக வழங்கினார். அந்த விகாரை அமைந்திருந்த காணி படம்-1 இல் சிவப்பு நிறத்தால் காட்டப்பட்டுள்ளது. அந்தப் பத்திரத்தில் திஸ்ஸ விஹாரை என்ற கோயில் பெயர் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 
(ஆனால் இந்த நிலப்பத்திரமானது ஒரு சத்தியச்க்கடதாசியினூடு செய்யப்பட்டுள்ளதாகவும் அது சட்டத்தின்படி செல்லுமடியாகாது என்று காங்கிரஸ் சட்டத்தரணி ஒருவர் எனக்கு கூறினார்)

1958 இல் நடைபெற்ற இனக்கலவரத்தை தொடர்ந்து இந்த புத்த விகாரை கைவிடப்பட்டு 70 களின் பின்னான போரில் முற்றாக அழிந்து போய் விட்டது. 1959 இல் வெளியிடப்பட்ட யாழ்ப்பாணத்திற்கான வரைபடத்தில் இந்த விகாரையும் 15 ஏக்கர் அளவான நிலமும் குறிப்பிடப்பட்டுள்ளது. (படம்-2). கீழே உள்ள படம்-1 இல் மஞ்சள் நிறத்தால் இந்த 15 ஏக்கர் காணி காட்டப்பட்டுள்ளது. 1.25 ஏக்கர் காணி எப்படி 15 ஏக்கர் ஆனது என்று தெரியவில்லை.  இதை அப்பகுதி மக்கள் சிங்களவன் கலட்டி என்று அழைத்து வந்துள்ளனர்.

படம்-1 : 2025 செய்மதிப்படம். மஞ்சள் - 1959 வரைபடத்தில் காட்டப்பட்டுள்ள 15 ஏக்கர் காணி. சிவப்பு- 40 களில் விகாரை அமைக்கப்பட்ட 1.25 ஏக்கர் காணி. ஊதா- தற்போது வேலி போட்டு அடைக்கப்பட்டுள்ள 7 ஏக்கர் காணி.


2009 இல் போர் முடிவடைந்த பின்னர் இந்த விகாரையை மீளமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும் 2017 ஆம் ஆண்டிலேயே அப்போதைய வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் கூரேயால் முன்பு விகாரை இருந்த (சிவப்பு பெட்டி) இடத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் அதன் பின்பு 2021 ஆம் ஆண்டு  கோட்டாபய ஜனாதிபதியாக இருந்த காலத்தில் சவேந்திர சில்வா அவர்களால் புதிதாக  அடிக்கல் இடப்பட்டு   விகாரையை அந்த இடத்தில் கட்டாமல் அதற்கு வட மேற்கு திசையில் 100 மீட்டர் தூரத்தில் கட்டிவிட்டனர்.

படம்-2 (1959 இல் வெளியிடப்பட்ட வலிகாமம் வரைபடம் )


கடந்த 75 வருட காலத்தில் பல வீடுகள் இந்த 15 ஏக்கர் காணியில் கட்டப்பட்டு விட்டதால் ஒரு 7 ஏக்கர் காணியை உள்ளடக்கிய ஒரு வேலி (ஊதா) இவ்விகாரையை சுற்றி தற்போது போடப்பட்டுள்ளது. இதற்கான நிலவளவையாளரின் வரைபடம் கீழே படம்-3 இல் காட்டப்பட்டுள்ளது. முன்பு விகாரை இருந்த 20 பரப்பு காணி தற்போது இதில் உள்ளடக்கப்படவில்லை என்பதை அவதானிக்கவும்.

இந்த 7 ஏக்கர் காணிக்குள் பல பொதுமக்களின் காணிகளூம் உள்ளடக்கப்பட்டு விட்டதாக காணி உரிமையாளர்களால் போராட்டங்கள் செய்யப்படுகின்றன.

தற்போது தெற்கில் இருந்து இயங்கும் அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனம் தமக்கு  14 ஏக்கர் காணியும் தரப்படவேண்டும் என்று யாழ் மாவட்ட செயலருக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிகின்றது.


படம்-3: 2021 ஆம் ஆண்டுக்கான விகாரையின் கட்டடங்களுக்கும் வேலிக்குமான நில அளவையாளர் வரைபடம்.


Saturday, January 11, 2025

காட்டுத்தீ


காட்டுத்தீ- அழிக்க வரும் தீயை பழங்குடி மக்கள் அணைத்துக்கொள்ள செய்தது என்ன?

“நீங்கள் இயற்கைத்தாயை பராமரித்தால், இயற்கைத்  தாய் உங்களைப் பாதுகாப்பாள்” – ஆஸ்திரேலிய பழங்குடிமக்கள்


அமெரிக்காவின் கலிபோர்ணியா மாநிலத்தில் உள்ள ஹொலிவூட் மலை தொடர்ந்து எரிந்துகொண்டிருக்கின்றது. அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய தீயாக இது கருதப்படுகின்றது. பழங்குடியினர் இந்த காட்டுதீயை எப்படி முறையாக கட்டுப்படுத்தினர் என்று நான் 5 வருடங்களுக்கு முன்பாக எழுதிய கட்டுரை.

ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ  பெருமளவான நிலப்பகுதிகளை பாதிப்பது மாத்திரமல்லாமல்  பெருமளவு  சொத்துச்சேதம் மற்றும் மனித உயிர் இழப்பையும் ஏற்படுத்துகிறது.
2019-20 ஆஸ்திரேலிய காட்டுத்தீ பருவகாலத்தில் 63,000 சதுர கிமீ நிலம் இதுவரை எரிந்துள்ளது. 1300 வீடுகள் உட்பட 2,500 க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் அழிக்கப்பட்டு 25 பேருக்கு மேல் கொல்லப்பட்டுமுள்ளனர்.  இதுவரை தவளைகள் மற்றும் பூச்சிகள் தவிர்த்து 500,000,000 (50 கோடி) வனவிலங்குகள் இறந்துவிட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 
இந்த காட்டுத்தீயால் அழிக்கப்பட்ட  நிலப்பரப்பு இலங்கையின் மொத்த நிலப்பரப்பை விட அதிகமானது. இதேபோல் 2009  பெப்பிரவரியில் விக்டோரியா மாநிலத்தில் நடந்த இருண்ட சனிக்கிழமை (Black Saturday)  காட்டுத்தீயில் 173 பேர் கருகி மாண்டது மிகப்பெரிய சோக நிகழ்வாகும். 
நூற்றுக்கணக்கான அரிய உயிரினங்கள் ஆஸ்திரேலியா கண்டத்தில் மாத்திரமே காணப்படுகின்றன. அவற்றில் பல அழிந்து விட்டன மற்றும் பல அருகிவரும் உயிரினங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளன. கங்காரு, வொலபி, கோவாலா, போசம், ஒப்போசம், வொம்பட், தஸ்மேனியன்  டெவில்  என்பன வயிற்றில் பை உள்ள மார்சூப்பியல் என்று அழைக்கப்படும்  பாலூட்டி விலங்குப்பிரிவை சேர்ந்த விலங்குள் அவுஸ்திரேலியா கண்டத்தில் மாத்திரமே வாழ்கின்றன. இவை போன்று டன்னார்ட் என்றழைக்கப்படும் ஒரு எலியை ஒத்த மார்சூப்பியல் விலங்கினம் கங்காரு தீவில் மாத்திரம் உயிர்வாழ்ந்து  வந்தது. அண்மையில் கங்காரு தீவில் ஏற்பட்ட பாரிய காட்டுத்தீயில் இந்த டன்னார்ட் உட்பட பெருமளவான உயிரினங்கள் உயிரிழந்து இருக்கலாம் என்று கருதப்படுகின்றது. இவை போன்று இன்னும் பல அருகிவரும் உயிரினங்கள் உயிரிழந்திருக்கலாம் இரு அஞ்சப்படுகின்றது.
காட்டுத்தீயினால் ஆஸ்திரேலிய பொருளாதாரத்துக்கு ஏற்பட்டுள்ள இழப்பு இதுவரைக்கும் இருநூறு கோடி டொலர்கள் என்று கணக்கிடப்பட்டாலும்  இந்த பாதிப்பு இன்னும் அதிகரிக்கலாம் என்றும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
காட்டுத்தீயின்  பொதுவான காரணங்களாக மின்னல், மின் ஒழுக்கு, விவசாயத்திற்காக  துப்புரவு செய்தல், அரைக்கும் மற்றும் வெல்டிங் நடவடிக்கைகளில் தற்செயலான பற்றவைப்பு, கேம்ப்ஃபயர், சிகரெட் மற்றும் எறியப்படும் தீக்குச்சிகள், இயந்திரங்களிலிருந்து தீப்பொறிகள் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட தீ வைப்புக்கள் கட்டுமீறி செல்வது ஆகியவற்றை சொல்லலாம். இவற்றுடன் வேண்டுமென்றே தீ வைக்கும் விஷமச்செயலும் நடைபெறுவது மறுக்க முடியாது.
இலங்கையிலும் இந்தியாவிலும் சஞ்சிவி மரம் என்றும் விக்ஸ் மரமென்றும் அழைக்கப்படும் ஆஸ்திரேலியாவை பூர்வீகமாக கொண்ட யூக்லிப்ரஸ் மரங்களே அவுஸ்திரேலிய காடுகளில்  நிறைந்துள்ளன. இவற்றை இங்கு Gum tree என்று அழைப்பர். இவை இயற்கையிலேயே நன்றாக எரியக்கூடிய எண்ணெய்யை கொண்டிருப்பதால், பச்சை மரம் கூட நன்றாக எரியும். இவற்றின் விதைகள் தீயால் பெருமளவில்  பாதிக்கப்படுவதில்லை என்பது இயற்கையின் கொடைகளில் ஒன்று. ஆஸ்திரேலியாவின் சுதேச தாவரங்கள் சில இனப்பெருக்கம் செய்வதற்கான வழிமுறையாக காட்டுத்தீயை நம்பியுள்ளன என்பது ஒரு கொசுறு செய்தி.
இவை போதாதென்று அவுஸ்திரேலிய சுதேச பறவைகள் சில காட்டுத்தீயை பரப்புவது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கக்கூடும். கழுகு இனத்தை சேர்ந்த Whistling Kites, Black Kites மற்றும் Brown Falcons ஆகிய பறவைகளே இதை செய்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எரியும் கொள்ளியை பாதுகாப்பாக தூக்கிச்சென்று வெகு தூரத்தில் உள்ள பற்றைக்காடுகளில்  போட்டு அத்தீயின்  காரணமாக வெளியில் ஓடி வரும் எலி போன்ற பிராணிகளை இவை வேட்டையாடுவதாக சொல்லப்படுகின்றது. 
மேலும், ஒரு இடத்தில் ஏற்படும் தீ, பைரோகுமுலோனிம்பஸ் (pyrocumulonimbus) என்ற ஒரு வகை மேகத்தை உருவாக்கி அதன்மூலம் அயற்பிரதேசங்களுக்கும் மின்னல் மூலம் தீயை பரப்புகின்றது. வழக்கமான இடியுடன் கூடிய மழையைப் போலவே, காற்று மற்றும் வெப்ப நிரலால் ஏற்படும் மேற்காவுகை காற்றின் மூலம் பைரோகுமுலோனிம்பஸ் இடிமுழக்க மழை உருவாகிறது. வெப்பம் மற்றும் ஈரப்பதத்தின் அளவு காரணமாக புகை ஆபத்தான புயல் மேகங்களாக மாறுகிறது. இது நீர் சொட்டுகளுக்கு பதிலாக வானத்திலிருந்து கீழே விழும் நெருப்புத்தணல்களை கொண்டுவருகிறது.
நெருப்பின் வெப்பத்தால் உருவாக்கப்பட்ட மேற்காவுகை காற்றானது நீர் மற்றும் சாம்பலை வானத்தில் உறிஞ்சும்போது இந்த மேகங்களின் உருவாக்கம் நிகழ்கிறது. இந்த மேகங்கள் மேலும் உயரும்போது ஒரு "தீ மேகம்" உருவாகி வழக்கமான இடிமுழக்க மழை போன்று நெருப்பு மழை பெய்யும். இந்த பைரோகுமுலோனிம்பஸ் அடிக்கடி மின்னலை உருவாக்குவைத்தால் அதனால்  உருவாகும் மின்சாரம் புதிய நெருப்பை உருவாக்கி, காட்டுத்தீயை அணைக்கமுடியாதபடி மேலும் பரவச்செய்கிறது.
அவுஸ்திரேலியாவில் ஐரோப்பியர் பெருமளவில் குடியேறத்தொடங்கி கிட்டத்தட்ட 200 வருடங்களே ஆகின்றன. இக்காலப்பகுதியில் ஐரோப்பிய நாடுகளில் கைக்கொள்ளப்பட்ட தீயணைக்கும் முறைகளையே அவர்கள் பயன்படுத்தி வந்தனர். அவை  தகுந்த முறையில் பலனளிக்கவில்லை என்பதைக்  கண்டுகொண்ட ஆராய்ச்சியாளர்கள், பழங்குடிமக்களின் முறைகளை ஆராய்ந்து அவற்றையும் சேர்த்துக்கொள்ள அண்மைக்காலமாக தொடங்கியுள்ளனர். 
 பழங்குடிமக்களின் தீ முகாமைத்துவம் 

பழங்குடி மக்களுக்கு மட்டும்தான் பல இயற்கை நிகழ்வுகளுக்கான அறிவும் விளக்கமும் இருக்கின்றது.  பழங்குடிமக்களுக்கும் நிலங்களுக்கும் உள்ள பிணைப்பு மிகவும் வித்தியாசமானது. 'நீங்கள் இயற்கைத்தாயை பராமரித்தால் , இயற்கைத்  தாய் உங்களைப் பாதுகாப்பாள்' என்பதே அவர்களின் தாரக மந்திரம்.  
அவுஸ்திரேலிய பழங்குடி மக்களின் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் முறையையும் தற்போதைய விஞ்ஞான முறைகளையும் ஒருங்கிணைத்து காடுகளை முகாமைத்துவம் செய்யும் ஒரு முறை சிறிது காலமாக பின்பற்றப்படுகின்றது. மின்னலால் இலகுவாக தீ பற்றிக்கொள்ளாதிருக்கும்படி பழங்குடியின மக்கள் காடுகளை அவ்வப்போது எரித்து அவற்றை நிர்வகித்தனர். தீ ஏற்பட்டாலும், எரிபொருளாக இருக்கக்கூடிய காய்ந்த சருகுகள், மரங்கள் இல்லாதவிடத்து தீயின்  உக்கிரம் குறைவாகவே இருக்கும். உக்கிரம் இல்லாத தீ மரங்களை அதிகம் பாதிப்பதில்லை. 
பழங்குடி கலாச்சாரத்தில் நெருப்பு ஒரு முக்கிய அடையாளமாகும். பாரம்பரியமாக வேட்டை, சமையல், மற்றும் நிலப்பரப்பை நிர்வகித்தல் ஆகியவற்றில்  தீ ஒரு கருவியாக பயன்படுத்தப்பட்டது. தீ என்பது அவர்களுக்கு மிகப்பெரிய ஆன்மீக அர்த்தத்தை கொண்டுள்ளதுடன்   அவர்களின் பல கதைகள், நினைவுகள் மற்றும் நடனம் ஆகியவை தீயை  சுற்றியே  வருகின்றன. 
தீ முகாமைத்துவம் என்பது பழங்குடியின மக்கள் நாட்டை எவ்வாறு கவனித்துக் கொள்கிறார்கள் என்பதன் ஒரு பகுதியாகும் . இது பெரும்பாலும் 'கலாச்சார எரிப்பு' (Cultural burning) என்று அழைக்கப்படுகிறது. 


பழங்குடிமக்களின் வேகமும் உக்கிரமும் குறைந்த மென்தீயால் (Cool burn) தாவரங்களுக்கும் விலங்குகளும் பாதுகாக்கப்படும். இதன்போது வண்டுகள் மற்றும் எறும்பு உள்ளிட்ட விலங்குகள் தப்பிக்க போதுமான நேரம் இருக்கும். இளம் மரங்களும் புல் விதைகளும் அழியாது மீண்டு வரும். பெருந்தீக்களை விட மென்தீயின் வெப்பம், மரத்தின் பட்டைகளில் உள்ள எண்ணெயைப் பற்றவைக்காது. இது "சுற்றுச்சூழலை பசுமையாக வளர்ப்பதற்கான ஒரு கருவி" ஆகும். பழங்குடியினருக்கு மரங்களின் விதானங்கள் (canopy) மிகவும் புனிதமானது. அவர்களின் மென் தீ வைப்பின் போது மரங்களின் விதானங்கள் எரியாதவாறு கவனமாக பார்த்துக்கொள்வார்கள்.
இம்முறையில் மார்ச் மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையேயான வறண்ட காலங்களில் இலக்கு வைக்கப்பட்ட பகுதிகளில் காய்ந்த புற்கள் சருகுகள் என்பன எரிக்கப்பட்டு எரிபற்றும் பொருள்கள் குறைக்கப்படும். இக்காலப்பகுதி இடங்களுக்கு இடங்கள் வேறுபடும். முக்கியமாக மழைக்காலத்துக்கு சற்று முன்பாக இவை எரிக்கப்படும். கலாச்சார தீ ஆபத்து குறைப்பு எரிப்பை (hazard reduction burning) ஐ விட அடிக்கடி செய்யப்படுவதால் மிகவும் நேரமினக்கேடும் செலவுகூடியதுமான ஒருமுறையாகும். 
ஒவ்வொரு வருடமும் காட்டுத்தீயின் அழிவுகள் கூடி வருவது போன்று தோன்றுவதால் இது புவி வெப்பமாதலால் ஏற்படும்  காலநிலை மாற்றத்தோடு தொடர்புடையது என்று பலரும் வாதிடுகின்றனர். தற்போதைய அரசாங்கம் புவி வெப்பமாதலுக்கு எதிரான எந்த நடவடிக்கைகளும் எடுப்பதில்லை என்றும், இம்முறை காட்டுத்தீயின் உக்கிரம் மிகவும் கூடுதலாக இருக்கும் என்று விஞ்ஞானிகளால் எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தும் தேவையான முன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் பலரும் குற்றம் சொல்ல தொடங்கியுள்ளனர். 
சீனா உட்பட பல நாடுகள் புவி வெப்பமாதலுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வரும் வேளையில் மிகவும் முன்னேறிய நாடுகளின் பட்டியலில் இருக்கும் ஆஸ்திரேலியா அதைப்பற்றி அலட்டிக்கொள்ளாமல் இருப்பது வேதனையான விடயம் மாத்திரமல்லாமல் எமது அடுத்த தலைமுறைக்கு காட்டுத்தீயும் , வெள்ளப்பெருக்கும் நிறைந்த ஒரு மோசமான காலநிலையுள்ள நாட்டை நாம் விட்டுச்செல்ல வேண்டியிருக்கும் என்பது ஒரு கசப்பான உண்மையாகும்.

Tuesday, December 31, 2024

விஞ்ஞானம், மருத்துவம் மற்றும் தொழில்நுட்பத்தில் பத்து குறிப்பிடத்தக்க மைல்கற்கள் - 2024

 விஞ்ஞானம், மருத்துவம் மற்றும் தொழில்நுட்பத்தில் பத்து குறிப்பிடத்தக்க மைல்கற்கள் - 2024


2024 ஐப் பிரதிபலிக்கும் வகையில், விஞ்ஞானம், மருத்துவம் மற்றும் தொழில்நுட்பத்தில் பத்து குறிப்பிடத்தக்க மைல்கற்களை தொகுத்துள்ளேன். தவறவிட்ட முக்கிய மைல் கல் ஏதாவது இருந்தால் பின்னூட்டத்தில் குறிப்பிடுங்கள்.

 

1. AI என்றழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு மனித செயல்திறனை மிஞ்சுகிறது: செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் மருத்துவ நோயறிதல்களில் மனித மருத்துவர்களை விஞ்சியதுடன் கவர்ச்சிகரமான காணொளிகளை உருவாக்கியதுடன் மேம்பட்ட வானிலை கணிப்புகள் மற்றும் சிக்கலான தர்க்க அமைப்புகளில் AI தேர்ச்சி பெற்றுவிட்டது.
பெரும்பாலான கண்டுபிடிப்புகளுக்கு AI இன் பங்களிப்பு இன்றியமையாததாக இருந்துள்ளது.
2. ரொக்கெட் மீள்பயன்பாடு: SpaceX ராக்கெட்- பிடிக்கும் (interception) தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக நிரூபித்ததுடன் சிக்கனமான மற்றும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய விண்வெளி பயணத்திற்கு வழி வகுத்தது.
3. எய்ட்ஸ் (HIV) சிகிச்சையில் முன்னேற்றங்கள்: Gilead என்னும் நிறுவனம் lenacapavir என்ற ஊசி மருந்தை அறிமுகப்படுத்தியது. இது எச்.ஐ.வி தொற்றுகளை கணிசமாகக் குறைக்கிறது மற்றும் பிற வைரஸ்களுக்கு எதிரான திறனைக் காட்டுகிறது.
4. மெலனோமா தோல் புற்றுநோய் தடுப்பூசி: mRNA-ஐ அடிப்படையாகக் கொண்ட முதல் தனிப்பயனாக்கப்பட்ட மெலனோமா தடுப்பூசி, mRNA-4157/V940, மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளில் நுழைந்தது. இது புற்றுநோய் சிகிச்சையில் ஒரு குறிப்பிடத்தக்க படியைக் குறிக்கிறது. ரஷ்ய விஞ்ஞானிகளால் தனிப்பயனாக்கப்பட்ட mRNA அடிப்படையிலான புற்றுநோய் தடுப்பூசி உருவாக்கப்பட்டு preclinical நிலையை கடந்துள்ளது.
5. மலேரியா தடுப்பூசி: மனிதகுலத்தின் பழமையான மற்றும் கொடிய நோய்களில் ஒன்றான மலேரியாவுக்கு எதிரான தடுப்பூசிகள் 17 நாடுகளில் விநியோகிக்கப்பட்டன.
6. செவிப்புலனை மீட்டெடுப்பதற்கான மரபணு சிகிச்சை(Gene Therapi) : மரபணு சிகிச்சையானது பரம்பரை காது கேளாத தன்மையுடன் பிறந்த ஐந்து குழந்தைகளுக்கு கேட்கும் திறனை அளித்தது. இது மரபணு சிகிச்சையின் திறனை வெளிப்படுத்துகிறது.
7. புதிய ஆண்டிபயாடிக் வகை கண்டுபிடிக்கப்பட்டது: நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கு எதிரான போராட்டத்தில் நம்பிக்கையை அளித்துடன் பல மருந்து எதிர்ப்பு பக்டீரியாக்களுக்கு எதிராக செயல்படும் ஒரு புதிய வகை நுண்ணுயிர் எதிர்ப்பிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
8. செயற்கை நுண்ணறிவு சட்டம் இயற்றப்பட்டது: ஐரோப்பிய ஒன்றியம் செயற்கை நுண்ணறிவுச் சட்டத்தை இயற்றியது, AIக்கான உலகின் முதல் விரிவான சட்டக் கட்டமைப்பை நிறுவியது.
9. நியூராலிங்கின் மனித மூளை உள்வைப்பு: எலோன் மஸ்க்கின் நியூராலிங்க் என்ற ஸ்டார்ட்அப், மனிதர்களை AI உடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்டு, மனித மூளையில் முதல் மைக்ரோசிப்பைப் பொருத்தியது.
10 குவாண்டம் கம்ப்யூட்டிங் : கூகுளின் குவாண்டம் கம்ப்யூட்டர், வில்லோ சிப் மூலம் இயங்குகிறது. சிக்கலான பிரச்சனைகளை பாரம்பரிய சூப்பர் கம்ப்யூட்டர்கள் டிரில்லியன் கணக்கான ஆண்டுகளாகளில் தீர்க்கும் பிரச்சனைகளை வெறும் சில நிமிடங்களில் தீர்த்து ஆச்சரியமூட்டியுள்ளது.
Reflecting on 2024, here are ten significant milestones in science, medicine, and technology:
1. AI Surpasses Human Performance: Artificial intelligence models outperformed human physicians in medical diagnoses, generated impressive videos, improved weather predictions, and mastered complex logical systems.
2. Rocket Reusability Achieved: SpaceX successfully demonstrated rocket-catching technology, paving the way for more economical and reusable space travel.
3. Quantum Computing Leap: Google's quantum computer, powered by the Willow chip, solved complex problems in mere minutes, outperforming traditional supercomputers by trillions of years.
4. Advancements in HIV Treatment: Gilead introduced lenacapavir, an injectable drug that significantly reduces HIV infections and shows potential against other viruses.
5. Personalized Melanoma Vaccine Trials: The first personalized melanoma vaccine based on mRNA, mRNA-4157/V940, entered Phase III clinical trials, marking a significant step in cancer treatment.
6. Malaria Vaccine Distribution: Vaccines against malaria were distributed in 17 countries, targeting one of humanity's oldest and deadliest diseases.
7. Gene Therapy Restores Hearing: Gene therapy enabled five children born with hereditary deafness to hear, showcasing the potential of genetic treatments.
8. New Antibiotic Class Discovered: A novel class of antibiotics effective against multi-drug resistant bacteria was discovered, offering hope in the fight against antibiotic resistance.
9. Artificial Intelligence Act Enacted: The European Union passed the Artificial Intelligence Act, establishing the world's first comprehensive legal framework for AI.
10. Neuralink's Human Brain Implant: Elon Musk's startup, Neuralink, implanted their first microchip into a human brain, aiming to merge humans with AI
-Kumaravelu Ganesan-

Thursday, September 26, 2024

கூலிக்கு மாரடிப்போர் (Professional Mourners)- ஆங்கில மூலம் - அழகு சுப்பிரமணியம், தமிழாக்கம் - ராஜ ஶ்ரீகாந்தன்

ஆங்கில மூலம் - அழகு சுப்பிரமணியம்

தமிழாக்கம் - ராஜ ஶ்ரீகாந்தன்


அன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலேயே கேட்ட அழுகுரலும் பறையொலியும் எம்மைத் துயிலெழுப்பின. ஆடைகளைச் சரிசெய்துகொண்டு பாட்டி வீட்டிற்கு ஓடினோம். வெளி விறாந்தைக்கும் வேலிக்குமிடையில் இருந்த பரந்த முற்றத்தில் அயலவர்கள் குழுமியிருந்தார்கள். அவர்களை விலக்கிக் கொண்டு கூட்டத்தின் மத்திக்குச் சென்றோம். உயிரற்ற பாட்டியின் உடலைக் கிடத்தியிருந்தார்கள். முதல் நாளிரவே அவர் இறந்துவிட்டாராம். பயத்தினால் உடல் வெலவெலத்தது. நான் சென்றிருந்த முதற் செத்தவீடு அதுதான். பறையொலியையும், அழுகுரலையும் மீறி ஒரு முரட்டுக்குரல் ஒலித்தது. அவர்தான் எங்கள் மாமனார். கிராமத்துக் கொட்டிற் பள்ளிக்கூடமொன்றில் ஆசிரியராகவிருந்த அவர்தான் செத்தவீட்டு அலுவல்களை மேற்பார்வையிட்டார். சாதாரணமாகவே அவர் தனது சிம்மக் குரலில் வேகமாகக் கதைப்பார். கோபம் வந்தால் கேட்கவே வேண்டாம், வீராவேசம் கொண்டு ஊரே அதிரும்படி தொண்டை கிழியக் கத்துவார். அன்றும் அவர் கோபத்தின் உச்சிக் கொப்பிலே நடமாடிக் கொண்டிருந்தார். கூலிக்கு மாரடிப்பவர்கள் இன்னும் வந்து சேராததே அதற்குக் காரணம்.

 “நானே போய் அவளவையின்ரை சிண்டைப் பிடிச்சு இழுத்து வாறன்” 

என்று தனக்குத்தானே பலமாகச் சொல்லிக்கொண்டு புறப்பட்டார். கூலிக்கு மாரடிப்போரைப் பற்றி பல கதைகளை நான் கேட்டிருக்கிறேன். அவர்களைப் பார்க்கவேண்டுமென்ற ஆவலினால் உந்தப்பட்டவனாக நானும் அவரைப் பின்தொடர்ந்தேன்.

மணல் ஒழுங்கைகளூடாகவும், புழுதி படிந்த ஒற்றையடிப் பாதைகளூடாகவும் சென்று கொண்டிருந்தோம். தூரத்தே நரிகளின் ஊளையொலி கேட்டது. பற்றைகளிலிருந்த சருகுகளிடையே பாம்புகள் சரசரத்து ஓடின. மாமனாரை ஒட்டி உரசிக்கொண்டு நடந்தேன்.

 "ஓ! அதுகள் சாரைப்பாம்புகள். ஒரு நாளும் கடியாது, நீ பயப்பிடாதை. சின்னஞ்சிறு குடிசைகள் தென்பட்டன. அவை நேராக, ஒரே சீராக அமைக்கப்பட்டிருந்தன. கடற்கரைப்பகுதிக்கு வந்துவிட்டோம், சில மீனவர்கள் மனைவிமாரின் உதவியுடன் மீன்பிடி வலைகளைச் செப்பஞ் செய்துகொண்டிருந்தனர். இன்னுஞ்சிலர் கட்டுமரங்களைக் கடலிற் தள்ளிக்கொண்டிருந்தனர்.

 "டேய்! நில்லுங்கோடா அயோக்கியப் பயல்களே." 

மாமனார் கோபத்தோடு கத்தினார்.

 “இண்டைக்கென்ரை குஞ்சியாத்தேன்ரை செத்தவீடென்று உங்களுக்குத் தெரியாதோ? கீழ் சாதிப்பயல்களே எல்லாரும் அங்கை நடவுங்கோடா."

 "எங்களுக்குத் தெரியாது ஐயா! 'நாம்' கோவிக்கக்கூடாது நாங்கள் இப்பவே வாறம்" 

வலைகளைப் போட்டுவிட்டுப் பெளவியமாக வந்து கைகட்டி நின்று கொண்டு சொன்னார்கள். அவர்களைக் கடந்து கூலிக்கு மாரடிப்பவர்களைத் தேடிச் சென்றோம். நாம் முன்பு பார்த்த குடிசைகளை விடச் சிறிய குடில்கள் சில தெரிந்தன 

"அந்த ஈனப்பெண்டுகள் இங்கினைதான் இருக்கிறவளள்” 

என்றார் மாமனார். ஒரு குடிலின் முன்னே நின்றுகொண்டு சத்தமிட்டுக் கூப்பிட்டார். கிடுகுப்படலையைத் திறந்துகொண்டு இரண்டு பெண்கள் வெளியே வந்தனர். மணிக்கட்டிலிருந்து முழங்கை வரை அணிந்திருந்த வளையல்கள் கிலுகிலுத்தன. அழுக்கேறிய சேலைகளை மார்பின் குறுக்கே வரிந்து கட்டியிருந்தார்கள். 

"என்ர குஞ்சியாத்தையின்ரை செத்தவீடு இண்டைக்கென்று சொல்லி அனுப்பினனானெல்லோ, இன்னும் அங்கை வராமல் இங்கை என்னடி செய்யிறியள்?" 

மாமனார் பொரிந்துதள்ளினார். 

"நயினார் கோவிக்கக்கூடாது. நாங்கள் அங்கை வாறதுக்குத் தான் வெளிக்கிடுறம். சுணங்கினதுக்கு நயினார் மன்னிக்க வேணும்" 

அவர்களில் ஒருத்தி சொன்னாள்.

 "மற்றவள்களெல்லாம் எங்கை போயிட்டாளுகள்?”

 “இப்ப இங்கை எங்களைவிட ரெண்டுபேர்தான் இருக்கினம். ரெண்டு பேரும் அக்கா, தங்கைகள் அவவையைவிட வேறை ஒருத்தருமில்லை. அதுகளும் வரமாட்டுதுகள் இண்டைக்கு விடியக் காத்தாலை அதுகளின்ரை தாய் மனிசி செத்துப்போச்சு" 

"சே! கொஞ்சங்கூட அறிவில்லாத சனங்களாக் கிடக்கு. அவளள் எங்கை இருக்கிறவளள்?” “உதிலை கிட்டத்தான் நயினார்”

 “எனக்கொருக்கால் அவளளின்ரை குடிலைக் காட்டு” 

அவ்விரு பெண்களையும் பின்தொடர்ந்து சென்றோம். ஒரு குடிசையிலிருந்து விசும்பலொலி கேட்டது. அதன் முன்னாற்சென்று நின்றோம். எம்முடன் வந்த பெண்கள் அங்குள்ளோரைக் கூப்பிட்டனர். கண்ணீரால் நனைந்து நெகிழ்ந்திருந்த சேலைகளை குத்திட்டு நிற்கும் மார்பின் குறுக்கே இறுக்கிச் செருகியவாறு அச்சகோதரிகள் வெளியே வந்தனர்.

"நயினார் எங்களைப் பொறுத்துக் கொள்ள வேணும். எங்கடை ஆத்தை காலமை மோசம் போயிட்டா. இந்த நிலமேலை நாங்கள் மற்றவயின்ரை செத்தவீட்டுக்கு எப்படி வாறது?"

 "மானங்கெட்ட நாய்களே என்ர குஞ்சியாத்தேயின்ற செத்தவீட்டிற்கு ரண்டு மாரடிக்கிறவளள் என்னத்துக்குக் காணும்? அவ ஆரெண்டு தெரியுமல்லே" மாமனார் சீறி விழுந்தார். 

"நயினார் கொஞ்சம் பொறுக்கவேணும்” 

அயலிலுள்ள பெண்ணொருத்தி அவர்களுக்காகப் பரிந்து பேசினாள்.

 “சொந்தத் தாய் சீவன் போய்க்கிடக்கேக்கை அந்தத் துக்கத்தில இருக்கிறதுகளை உங்கடையிடத்துக்கு வந்து போலியாக அழச்சொல்லிறது நல்லா இல்லப் பாருங்கோ." 

மாமனாரின் உதடுகள் கோபத்தால் துடித்தன. கண்கள் ஓடிச்சிவந்தன, உடல் பதறியது. பரிந்து பேசிய பெண் தலைகுனிந்து நிலம் நோக்கினாள். அவர்களுடைய நிலையை எண்ணி எனது கண்கள் பனித்தன. கவலையுடன் தலையை அசைத்தேன். அவருடைய கோபம் என்மேற் திரும்பியது. 

"மடப்பயலே! இதுகளைப் பற்றியெல்லாம் உனக்கென்ன தெரியும்? செத்தவீட்டுக்குக் கொப்பற்றை கூட்டாளிமார் சுப்பிறீம் கோட்டு நீதவான், பொலிஸ், கோட்டு நீதவான், பிரக்கிராசிமார், அப்புக்காத்துமார் எல்லாரும் வருவினம். போதுமான மாரடிப்பவளள் இல்லாட்டில் அவையெல்லாம் எங்களைப்பற்றி என்ன நினைப்பினம்?" 

அவ்விரு சகோதரிகளும் முழந்தாளிட்டுக் கெஞ்சினார்கள். 

"நயினாற்றை சொல்லுக்கு மாறாக நடக்கிறமெண்டு நினைக்க வேண்டாம். உங்களைக் கும்பிட்டம். இம்முறை மட்டும் எங்களை மன்னிச்சுக் கொள்ளுங்கோ. அடுத்தமுறை நயினார் வீட்டுச் செத்த வீட்டுக்கு எங்கடை தொண்டைத்தண்ணி வத்துமட்டும் அழுவம்"

“கர்வம் பிடிச்சவளே! என்ரை வீட்டிலை இன்னுமொரு சவம் விழவேண்டுமெண்டு விரும்பிறியோடீ அற்பப் பிராணிகளே, உந்தச் சொல்லுக்காக உங்களைக் கோட்டுக்கேத்துவேன்” கோபாவேசம் மிகுந்தநிலையில் கையைப் பிடித்துத் தரதரவென்றிழுத்துச் சென்றார். 

"நயினார்! கையை விடுங்கோ நயினார். நாங்கள் இப்பவே வாறம்" 

அப்பெண்கள் நால்வரையும் முன்னேவிட்டு அலுவல்காரர் பின்னாற் சென்றார். அவரைத் தொடர்ந்து நானும் சென்றேன். பாட்டி வீட்டை நெருங்கிவிட்டோம் அப்பெண்களின் நடையில் ஒரு வேகம் காணப்பட்டது. கூந்தலை அவிழ்த்துத் தலையை விரித்துக்கொண்டு, இரு கைகளையும் வானோக்கி உயர்த்தியவாறு 'ஓ..' வென்று கதறியபடி உட்சென்றார்கள். அங்கே அயலவர்களும் உறவினர்களுமாகிய பெண்கள் சிறு, சிறு குழுக்களை அமைத்துக்கொண்டு ஒருவரின் தலையை அடுத்தவரின் கழுத்திற் சாய்த்துக்கொண்டு அழுதவண்ணம். இருந்தார்கள். அவர்களுக்குச் சிறிது ஒதுக்கமாய் அமர்ந்து கொண்டு மாரடிக்கும் பெண்கள் அழுதார்கள். கைகளை மேலே தூக்கித் தலையில் அடித்தார்கள். பாட்டியின் நற்பண்புகளைச் சொல்லி ஒப்பாரி வைத்தார்கள். பாட்டியின் அன்புக்குப் பாத்திரமான பேரப்பிள்ளை தம்பு மலேசியாவிலிருந்து வரும்வரை பாட்டியை விட்டுவைத்த முழுமுதற் கடவுள் சிவனின் கருணையே கருணை என்று சொல்லி உறவினர் சிலர் அழுவதை அவதானித்த மாரடிக்கும் பெண்கள் அதனைக் கருவாகக் கொண்டு ஒப்பாரி வைத்தனர்.

 "வாயைத் திறவனணை நீ வளர்த்தவர் வந்துவிட்டார் - உன் 

வளத்தினைச் சொல்லனணை 

கண்ணைத் திறவனணை நீ வளர்த்தவர் வந்துவிட்டார் - உன் 

கதையைச் சொல்லனணை"

அதே வேளையில் அலுவல்கார மாமனார் தனது நண்பர், குழாத்தில் தனது கெட்டிக்காரத்தனத்தைப் பறைசாற்றினார் மாரடிக்கும் பெண்களை இழுத்துவந்ததனைச் சுவையாக விபரித்தார் அவருடைய மனிதாபிமானமற்ற செயல்களை நண்பர்கள் மறுதலித்தனர். அந்த ஈனச்செயலுக்காக அவ்விரு பெண்களிடமும் மன்னிப்புக் கோருமாறு வற்புறுத்தினர். வந்திருந்த பலர் அப்பெண்- களுக்காக வருந்தினர். அவர்களை வீட்டிற்கு அனுப்பும்படி எனது தந்தையார் சொன்னார். அலுவல்காரர் பொங்கியெழுந்து அப்பெண்களிடம் சென்றார். ஏதோவெல்லாம் கூறி அதட்டினார். இறுதியில் மரணச் சடங்கு முடியும்வரை நின்று தங்கள் கடமையைச் செய்து முடிக்க அவர்கள் இணங்கினார்கள். அலுவல்காரர் முன்பைவிடச் சுறுசுறுப்பாக ‘அலுவல்' பார்த்தார். அவருடைய கொடூரச் செயலை விஷயமறிந்த ஒவ்வொருவரும் விமர்சித்தனர். அவரோ எதையும் காதிற் போடாமல் சுழன்று, சுழன்று அலுவல் பார்த்தார். பறையடிப்பவர்களிடம் சென்று மாரடிக்கும் பெண்களின் குரலைவிடச் சத்தமாக வேகமாகப் பறையை முழக்கச் சொன்னார். பின்பு ஒரு பை நிறைய அரிசியையும் மரணச் சடங்கிற்குத் தேவையான சமித்து முதலிய முக்கிய பொருட்களையும் எடுத்துக்கொண்டு பிரேதக் கட்டிலருகே வந்தார். நன்றாக வியர்த்துக் களைத்தது, மாரடிக்கும் பெண்களைக் கட்டிலருகே கூட்டிவரக் காலடி எடுத்துவைத்த போது உடல் தள்ளாடியது. கைகளாற் தலையைப் பிடித்துக்கொண்டு தடால் என்று வீழ்ந்து விட்டார். சுற்றிலுமிருந்தவர்கள் கலவரப் பட்டனர். சிலர் அவரை ஓர் ஒதுக்குப்புறமாகத் தூக்கிச் சென்றனர். இன்னுஞ் சிலர் உதவிக்கு விரைந்தனர். ஒருவர் முகத்திற் தண்ணீர் தெளித்தார். வேறொருவர் விசிறி கொண்டு விசுக்கினார். சிறிது நேரம் சிசுருஷையின்பின் மாமனார் கண்களைத் திறந்து, எழுந்திருக்க முயன்றார். நண்பர்கள் விடவில்லை. நன்றாக ஓய்வெடுக்கும்படி வற்புறுத்தினர். மாரடிப்போரிடையே அவ்விரு சகோதரிகளின் குரல்கள் வெகு துல்லியமாகக் கேட்டன. நயினாரின் குஞ்சியாத்தையின் செத்த வீட்டில் ஒன்றிவிட முடியவில்லை. 

“ஏழையள் எம்மைவிட்டு எங்கை போனாய் 

ஏந்திழையே ஏழையள் நாம் எங்கு போவோம் எழுந்துவாராய் 

எங்கதாயே" 

அவர்களுடன் மற்றைய இருவரும் சேர்ந்து கொண்டனர். குருக்கள் வந்து மரணச்சடங்கை ஆரம்பித்தபோது அழுகுரல் விண்ணையொட்டி ஓய்ந்தது. குருக்கள் பாட்டியின் அன்புப் பேரனான தம்புவை அருகிலழைத்துத் தேவாரம் பாடச் சொன்னார். குரல் கரகரத்துக் தளதளத்தது. கண்கள் குளமாகிப் பார்வையை மறைத்தது. ஈற்றடிகளை முற்றாகப் பாடிமுடிக்க முடியவில்லை. பிரேதத்தின் மேல் தலையைப் புதைத்து அழுதார். 

"எத்தனையோ வருஷங்களாக எனக்காகக் காத்திருந்தியே. கடைசீல என்னோடு ஒரு சொல்லுக்கூடப் பேசாமல் அறிவற்ற நிலையிலேயே செத்துப் போனியே என்ரை ஆச்சி” 

 தம்பு உணர்ச்சிவசப்பட்டு ஓலமிட்டார். 

மாரடிக்கும் பெண்கள் ஒப்பாரியைத் தொடர்ந்தனர்.

 "அப்புக்காத்தினருமைத் தாயே நீயின்று அசையாமலிருப்பதேனோ? 

அசையாமலிருப்பதாலே அன்பானோர்  அல்லல் கொண்டழுகிறார்கள். 

ஓ……….

 கண்ணைத் திறந்துந்தன் கயல்விழியைக் காட்டனம்மா 

கண்ணைத் திறந்திந்தக் காட்சியினைப் பாரனம்மா

 ஓ……….

வாயைத் திறவனம்மா, நீ வளர்த்தவர் வந்துவிட்டார் 

உன் வளத்தினைச் சொல்லனம்மா 

கண்ணைத் திறவனம்மா நீ வளர்த்தவர் வந்துவிட்டார் 

உன் கதையளைச் சொல்லனம்மா."


திலீபன் நினைவிடம்: 1988 முதல் 2026 வரை தொடரும் ஒரு வரலாறு

1987 ஜூலை மாதம் கைச்சாத்திடப்பட்ட இந்திய–இலங்கை ஒப்பந்தத்திற்குப் பின்னர் ஏற்பட்ட அரசியல் சூழலில், இந்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று வலிய...